இந்திய விண்வெளித் துறையில் ஒரு கனவுத்திட்டம் சந்திரயான்-1. நிலவை ஆராய்வதற்கு சந்திரயான்-1 விண்கலம், 2008-ம் ஆண்டு, அக்டோபர் 22-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளியில் ஏவப்பட்டது. ஆனால் ஓராண்டுக்குள், அதாவது 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி முதல் சந்திரயான்-1 விண்கலத்துடனான தொடர்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இழந்து விட்டது.
இந்நிலையில், சந்திரயான்-1 தொலைந்து போகவில்லை, அது இப்போதும் சந்திரனின் மேற்பரப்புக்கு 200 கி.மீ. தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கிறது என நாசாவின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துத் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 2016-ல் நாசா விண்வெளி ஆய்வு மையம் ரேடாரை பயன்படுத்தி சந்திரயானை மறுபடி அதே இடத்தில் நிறுவியது

தற்போது இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் நிலவைக் குறித்து பல தகவல்களை அனுப்பி வருகிறது. அதன் தகவலின்படி, நிலவின் துருவ மண்டலங்களின் இருண்ட மற்றும் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் உறைந்த நீர் இருப்பதாகவும், அவை சூரிய வெளிச்சத்திற்கு அப்பாற்ப்பட்ட இடத்தில் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட எந்த விண்கலமும் தண்ணீர் இருந்ததை உறுதி செய்யவில்லை, ஆனால், சந்திரயான், கடந்த 2009-ஆம் ஆண்டே நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. இஸ்ரோவின் சார்பில் சந்திரயான் பேலோடில் வைக்கப்பட்ட, ‘மூன் மினராலஜி மேப்பர் (எம்3)’ என்ற கருவி, நிலவில் தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தது.
சந்திரனின் நிலப்பரப்பில் தண்ணீர் பிரதிபலிப்பதை அப்போது எம்3 படம் எடுத்திருந்தது.. அந்தப் படத்தில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் கலப்பு உள்ளதை எம்3 ஆய்வு உறுதி செய்தது. இந்த இரண்டும் தண்ணீர் இருப்பதன் அறிகுறியாகும். சந்திரனின் உள்ள கற்களில் ஆக்சிஜன் மூலக்கூறு உள்ளது. சந்திரனில் உள்ள மண்ணில் சூரியனின் வெப்பக்கதிர்கள் படும் போது ஏற்படும் மாற்றத்தால் அது, ‘புரோட்டான்’ ஹைட்ரஜனாக மாறுகிறது. இந்த இரண்டும் சேரும் போது, ‘H2O ’ என்ற தண்ணீர் மூலக்கூறு ஏற்படுகிறது.
பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில், ‘சந்திரனில் தண்ணீர் உள்ளது. ஆனால், அங்கு கடல் உள்ளது; ஏரி உள்ளது; குட்டை உள்ளது என நாங்கள் கூறவில்லை. தண்ணீருக்குரிய மூலக்கூறுகள் சந்திரனில் உள்ளது உறுதியாகியுள்ளது’ என்றார். மற்றொரு விஞ் ஞானி, ‘சந்திரனில் உள்ள ஒரு டன் மணலில் ஒரு லிட்டர் தண்ணீர் இருக்கும்’ என்றார்.
பின்பு அது பற்றிப் பெரிதாக எதுவும் தகவல்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், நிலவில் தண்ணீர் இருப்பதாக சந்திரயான்-1 அனுப்பிய தகவல் உண்மை தான் என நாசா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வுநிலைய நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டீன் (Jim Bridenstine), இதை அடிப்படையாக வைத்து நிலாவைக் குறித்த மேம்பட்ட, நீடித்த ஆய்வுகள் மேற்கொள்ளத் திட்டமிருப்பதாகக் கூறியுள்ளார்.
இரண்டாவது நிலவுப் பயணத்திட்டமான சந்திரயான்-2 விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.