விமானங்களிலிலோ அல்லது “உபர்” (UBER) கொண்டு வரவிருக்கும் “ஏர் டாக்ஸி” யிலோ சில்லரை கொடுத்து பயணிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்போது அதில் நீங்கள் பயணிக்க நேர்ந்தால் வெளிச்சப் புயல் வீசும் இந்த விளம்பரப் பதாகைகளைக் கண்டு இறங்கி விடாதீர்கள் என அறிவுறுத்தவே இப்பதிவு.

விண்வெளிக் கட் அவுட்கள் (CELESTIAL BILLBOARD)
‘மாஸ் மீடியா” என எடுத்துக்கொண்டால் விளம்பரங்கள் தான் இன்றைக்கு ஒப்பில்லாத் தொழில். அனைத்து சானல்களுக்கும் விளம்பரங்கள் தேவை. ஒரு நிமிடம் ஓடும் விளம்பரங்கள் தான் உலகத்தின் பெரும் பணப் பரிவர்த்தனையை நடத்திக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட இந்த விளம்பரங்களின் உச்சகட்ட பரிமாணம் தான் இந்த விண்வெளிக் கட் அவுட்கள் .
ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுதான் இந்த வித்தியாசமான முயற்சியை கையாளவுள்ளது. ஏறத்தாழ 200 சிறிய செயற்கைக் கோள்களை விண்வெளியில் ஏவி அவற்றை அடுக்கி, பொதுவெளியில் அமைக்கப்படுகின்ற “LED” திரை போல நிலைநிறுத்தப்படும். அவை பூமியின் சுற்று வட்டப்பாதையில் 500 கிலோமீட்டர் தொலைவில் ஒளிர்ந்து கொண்டிருக்கும். 2021 ஆம் ஆண்டுவாக்கில்.
சுமார் $150 மில்லியன் டாலர்கள் மதிப்பில் செயல்படவுள்ள இந்த எலக்ட்ரானிக் பதாகையில் எட்டு மணிநேரம் விளம்பரம் செய்ய $2,00,000 டாலர்கள் வசூலிக்கப்படும். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்திட்டம் இதுவே முதல்முறை அல்ல.

HUMANITY STAR
கடந்த ஆண்டு ஜனவரியில் நியூசிலாந்தைச் சேர்ந்த நிறுவனத்தால் “டிஸ்கோ பால் ( Disco ball) “ போன்ற ஒளிரும் செயற்கைக்கோள் ஒன்று விண்ணில் வீசப்பட்டது. புவி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஏவப்பட்ட இது, விண்வெளி ஆராய்ச்சியை தடுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. ஏற்கனவே விண்வெளிக் குப்பைகளால் நிறைந்துள்ள பூமியை இதுபோன்றவை சனிக் கோளாக மாற்றிவிடும் எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
விண்வெளி விடுதிகள், விண்வெளி வீடுகள் வரிசையில் இதுவும் ஒன்று. அதோடு சீனா கொண்டுவரும் செயற்கை நிலவும் சேர்ந்துள்ளது. இவையெல்லாம் எதற்கு என்றும், விண்வெளியையாவது விட்டு வையுங்கள் என்றும் புவியியலாளர்கள் குமுறுகின்றனர். தற்போது இந்த விளம்பரப் பதாகைக்கும் இதே புகார்தான் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கு, “விண்வெளி ஒன்றும் விண்வெளி வீரர்களுக்கு மட்டுமல்ல” என அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.

இத்திட்டம் நிறைவேறினால் கல்யாணம் முதல் கட்சிப் பொதுக்கூட்டம் வரை கட்டவுட் கலாச்சாரத்தால் நிறையும் பொது இடங்கள் சற்றே நிம்மதி கொள்ளும். மாட்டுக் கோமியம், வரட்டி , தேங்காய்ச் சிரட்டை என அரிய பொருள்களை விற்கும் இக்காலத்தில் கொஞ்சம் விட்டால் நம்மையே நம்மிடம் தள்ளுபடி விலையில் விற்றுவிடக்கூடும் இந்த ஆடம்பர விளம்பரங்கள்.
இயற்கையை மிஞ்சும் எந்த அறிவும் ஆபத்துதான். இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் சொல்லலாம். எதிர்காலத்தில் இம்மாதிரியான திட்டங்கள் பெருகி, வானத்தை அடைத்து குப்பை மேடாகிவிடும் என ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் கையில் கறுப்புக்கொடியை ஏந்தியுள்ளனர்.