பால்வழி மண்டலத்தின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை (Blackhole) ஒன்று உருவாகியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனின் எடையைப்போல் சுமார் 30,000 மடங்கு நிறை அதிகமான இந்த கருந்துளை வியாழன் கோள் அளவிற்குப் பெரியது. வடக்கு அமெரிக்க நாடான சிலியில் நிறுவப்பட்டிருக்கும் அதிநவீன தொலைநோக்கியின் மூலமாகவே இந்த கருந்துளையானது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் கருந்துளையை நேரிடையாக பார்க்க முடியாது என்பதால் Atacama Large Millimeter/submillimeter Array என்னும் 66 சிறப்பு தொலைநோக்கிகளை இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தியிருகிறார்கள்.

கருந்துளை
பிரபஞ்ச கோட்பாடுகளிலேயே மிகவும் சிக்கலானதும், விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருப்பதும் இந்த கருந்துளை தான். இதனை முதலில் கண்டுபிடித்தவர் மனிதகுல வரலாற்றின் மிக முக்கிய அறிவுஜீவி ஐன்ஸ்டீன். தனது பொது சார்பியல் கோட்பாடுகளின் மூலம் இதனை நிரூபித்துக்கட்டியபோது உலகமே ஸ்தம்பித்துப்போனது. கருந்துளை எங்கே இருக்கிறது? என்பதையே பலகட்ட ஆய்வுகளுக்குப் பின்னர்தான் அறிந்துகொள்ளவேண்டிய நிலையில் தான் இன்றைய தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. உண்மையில் இந்த கருந்துளை ஓர் இறந்த நட்சத்திரம் ஆகும். மாபெரும் புவிஈர்ப்பு குலைவின் காரணமாக இந்த சுருங்குதல் நடைபெறுகிறது.
இதன் அபரிமிதமான புவிஈர்ப்பு ஆற்றல் ஒளியையும் ஈர்த்துவிடும் அளவிற்கு வலிமையானது. அதேநேரத்தில் நட்சத்திரத்தின் பரப்பு கண்ணால் பார்க்கமுடியாத அளவிற்கு சுருங்கிவிடும். ஆகவே ஒரு சிறு புள்ளியாக கருந்துளை இருக்கும்போதும் அதன் எடை நம்பமுடியாத அளவிற்கு இருக்கும். உதாரணமாக ஒரு பட்டாணி அளவுள்ள கருந்துளையின் எடையானது சூரியனின் எடைக்கு சமமாக இருக்கலாம்.
கண்டுபிடித்தது எப்படி?
தொலைநோக்கிகளின் தரவுகளை ஆராய்ந்ததில் பலூன் என்று பெயரிடப்பட்ட வாயுக்கூட்டம் திடீரென சுழற்சிக்கு உள்ளாவதும், மடிந்து உருமாறுவதையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இதன்மூலம் வாயுக்கூட்டத்தின் இந்த மாற்றத்திற்குக் காரணம் கருந்துளை தான் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். இந்த கருந்துளையானது பால்வழி அண்டத்தின் மையத்தில் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

3 கருந்துளைகள்
நமது அண்டத்தின் மையத்தில் மூன்று கருந்துளைகள் இருப்பதாகவும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து தீவிர ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் நாசா தெரிவித்திருக்கிறது. கருந்துளை தன் சுற்றுப்பாதையில் குறுக்கிடும் பொருட்களை மட்டுமே கபளீகரம் செய்யும் தன்மை கொண்டது. ஒருவேளை குறுங்கோள்கள் மற்றும் விண்கற்களின் பாதையில் மாற்றம் நடைபெறுமேயானால் கருந்துளை அவற்றை “சரிகட்டிவிடும்”.
இதனால் ஏற்படும் தாக்கம் எப்படி இருக்கும் என்பதைக் கணக்கிட ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். இதுவரை கண்டுபிடித்ததிலேயே இந்த கருந்துளை வித்தியாசமானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் தானுண்டு தன் பாதை உண்டு என்று சமர்த்தாக இருக்கும் பொருட்கள் தப்பிக்கும். இல்லையேல் முடிந்தது கதை.
Also Read: கருந்துளையை இனி உங்களுடைய பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம்!!