புரோக்சிமா செண்ட்டாரி. சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் ஒரு சிறு நட்சத்திரம் ஆகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. வேற்று கிரகங்களிலிருந்து கிடைக்கும் ரேடியோ சிக்னல்களை ஆராய்ச்சி செய்யும் வானியலாளர்கள், சூரியனுக்கு அருகிலுள்ள நட்சத்திர அமைப்பான புரோக்சிமா செண்ட்டாரியிலிருந்து ஒரு “புதிரான சமிக்ஞையை” கண்டறிந்துள்ளதாக தி கார்டியன் தெரிவித்துள்ளது.
சூரிய குடும்பத்திற்கு அப்பாற்பட்ட கிரகங்களிலிருந்து ரேடியோ சிக்னல்களை கண்டறிவதற்கான “100 மில்லியன் டாலர்” திட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்ஸ் தொலைநோக்கி செயல்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆஸ்திரேலியாவின் பார்க்ஸ் தொலைநோக்கியின் 30 மணி நேர கண்காணிப்பின்போது ரேடியோ அலைகளின் சிக்னல் ஒன்று பெறப்பட்டது.
980 மெகா ஹெர்ட்ஸ் அளவிலான இந்த சிக்னல் ஒரே ஒரு முறை மட்டுமே கிடைத்தது, மீண்டும் கிடைக்கவில்லை. இது நமது சூரிய மண்டலத்திற்கு அருகிலுள்ள நட்சத்திரமான ப்ராக்ஸிமா செண்டாரியில் இருந்து நேரடியாக வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். இந்த 980 மெகா ஹெர்ட்ஸ் அளவிலான சிக்னல், மனிதனால் உருவாக்கப்பட்டதை போலவோ அல்லது செயற்கைக்கோள்களிலிருந்து வந்தது போன்றோ இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 1977-இல் கண்டறியப்பட்ட ‘வாவ்! சிக்னல்’ க்குப் பிறகு கண்டறியப்பட்ட ஒரு முக்கியமான சிக்னல் இது.

இந்த சிக்னல் பகுப்பாய்விற்கு தலைமை தாங்கியுள்ள பென் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் சோபியா ஷேக் “இது நாங்கள் கண்டறிந்த மிக அற்புதமான சிக்னல் ஆகும், ஏனென்றால் இதற்கு முன்பு கேட்டதை போலல்லாமல் இது மிகவும் வித்தியாசமாக இருந்தது” என்று கூறினார்.
இதனை ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், பூமியை தவிர வேறு கிரகங்களில் உயிர்கள் இருப்பதை வெளிப்படுத்தும் ஆற்றலைக் கொண்ட சிக்னல் இது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த புதிய சிக்னலின் மூலம், விஞ்ஞானிகளின் நம்பிக்கைகள் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
வேற்றுகிரகவாசிகள் எவ்வாறு தொடர்பு கொள்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது, என்பதே இதில் உள்ள மிகப்பெரும் சவால்.!