அப்போபிஸ் (99942 Apophis) என்று பெயரிடப்பட்ட மிகப் பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி அதி வேகத்தில் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இது, இன்னும் 48 ஆண்டுகளில் பூமியில் மோத வாய்ப்புள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து ஹவாய் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, அப்போபிஸ் (Apophis) என்ற விண்கல் ஒன்று ஒழுங்கற்ற சுற்றுப்பாதையில் பூமியை நோக்கி அதி வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
880 மில்லியன் டன் அணு குண்டுகளுக்கு சமம்!
சிறு சிறு விண்கல் தாக்குதல்கள் அவ்வப்போது நடக்கும். ஆனால் அதனால் பூமிக்கு பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், அப்போபிஸ் விண்கல் சுமார் 1,000 அடிக்கு மேல் அகலமானது. எனவே, இந்த விண்கல் பூமியில் மோதும் பட்சத்தில் சுமார் 880 மில்லியன் டன் TNT அணு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்த அளவுக்கு சேதம் ஏற்படும்.
Also Read: வெடித்து சிதறிய 10 அணுகுண்டு அளவு வலிமையுள்ள விண்கல்!
இவை சூரிய ஒளியில் இருந்து வெப்பத்தினை வாங்கிக்கொண்டு அந்த ஆற்றலை மீண்டும் வெப்ப கதிர்வீச்சாக மாற்றுகிறது. இதற்கு முன்னதான விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகளின் படி, அப்போபிஸ் விண்கல் 2068 ஆம் ஆண்டில் பூமியை வந்தடையும். இந்த நிகழ்வு நிறைவேறுவதற்கு சாத்தியமில்லை என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போதைய, புதிய கண்டுபிடிப்புகள் இன்னும் 48 ஆண்டுகளில் பூமியை மோதுவதற்கான அதிக வாய்ப்பைக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

பூமியில் நிகழப்போகும் மிகப்பெரிய தாக்குதல்!
இது பூமியை நெருங்கும் பட்சத்தில் பூமியில் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.
அப்போபிஸ் விண்கல் முதன் முதலில் ஜூன் 19, 2004 அன்று அரிசோனாவில் உள்ள Kitt Peak தேசிய ஆய்வகத்தில் வானிலை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
மீண்டும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஞ்ஞானிகள் சுபாரு தொலைநோக்கி (Subaru Telescope) உதவியுடன் அப்போபிஸ் விண்கல்லை (Apophis) கண்டறிந்தனர். இதன் சூரிய கதிர்வீச்சுகளும், யர்கோவ்ஸ்கி விளைவு (Yarkovsky Effect) எனப்படும் இயற்பியல் விதியும் சேர்ந்து அதன் பாதையையும் வேகத்தையும் அதிகரிக்க வைக்கிறது.

இந்த விண்கல் ஆண்டுக்கு சுமார் 170 மீட்டர் தூரம் ஒரு சுற்றுப்பாதையில் இருந்து விலகிச் செல்கிறது என்பதை யர்கோவ்ஸ்கி (Yarkovsky) விளைவு காட்டுகின்றது. இது 2068 ஆம் ஆண்டு பூமியை நெருங்குவதற்கு முக்கிய காரணம் ஆகும்.
Also Read: 150 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் மோதப்போகும் விண்கல் பெண்ணு குறித்த 10 விஷயங்கள்!
நாசாவின் அட்டவணையில் மூன்றாவது மிக மிக அபாயகரமான விளைவாக இந்த நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விண்கல், நிக்கல் மற்றும் இரும்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ரேடார் படங்களில் பார்க்கும் போது வேர்க்கடலை போல தோற்றமளிக்கிறது.

2029-ம் ஆண்டு கூட தாக்க வாய்ப்பு!
இதே விண்கல் 2029 ஆம் ஆண்டில் பூமியை தாக்குவதற்கு 2.7% வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர். இந்த ஆண்டு மே மாதத்துக்கு முந்தைய கணிப்புகள் படி இன்னும் 9 ஆண்டுகளில் ஏப்ரல் 13, 2029 அன்று தாக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது, அப்போபிஸ் விண்கல் பூமியிலிருந்து 19,794 மைல்களுக்குள் பாதுகாப்பாக கடந்து செல்லும் என்று ஒரு தரவு சுட்டிக் காட்டுகிறது.
2029-ல் தாக்கவில்லையெனில் 2068-ம் ஆண்டு தாக்கக்கூடும். அப்போது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும், விண்கல் பூமியை நெருங்கும் போது ஏற்படும் பாதிப்புகள் பற்றி, 2068 க்கு முன்னர் தெரிந்துகொள்வதற்கு விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இப்படிப்பட்ட அப்போபிஸ் விண்கல் பூமியை நெருங்கி வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்டது அறிவியல் வளர்ச்சியில் முக்கியமான மைல்கல் ஆகும். அப்போது தான் விண்கல் தாக்குதல்கள் குறித்த நடவடிக்கைகளை முடுக்கி விட முடியும்.