2020 -ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தைக் காண உலகத்தின் பல நாடுகளும் ஆயத்தமாகி வருகின்றன. ஜூன் 21, 2020 ஞாயிற்றுக்கிழமை நமது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு கடந்துசெல்ல இருக்கிறது. சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர் கோட்டில் பல நிமிடங்கள் வரை இருக்கும். இந்நிகழ்வு நாளை காலை முதல் துவங்கி நண்பகல் வரை நிகழ்கிறது.

சூரிய கிரகணம்
சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் ஆகும். இது ஆங்கிலத்தில் Solar Eclipse எனப்படுகிறது. இந்நிகழ்வின் போது சூரியனை நிலவு பகுதியாகவோ, முழுவதுமாகவோ மறைப்பதால் சூரியனின் வெளிச்சம் போதுமான அளவு பூமியில் படாது. மேலும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு குறுக்கே வருவதால் நிலவின் நிழல் பூமியின் மேல் விழுகிறது. இதனால் சில நிமிடங்கள் பூமியில் குறிப்பிட்ட சில/பல பகுதிகளில் இருளாக தோன்றும்.

நெருப்பு வளையச் சூரிய கிரகணம்
தற்போது, நிலவு பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அதாவது, நிலவு பூமியிலிருந்து 3,81,500 கி.மீ (2,37,100 மைல்) இருக்கும். இதனால் நிலவு சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. எனவே, நெருப்பு வளையம் போன்ற தோற்றத்தினை நிலவு உருவாக்கும். இந்த அரிய வகை நெருப்பு வளையச் சூரிய கிரகணம் கீழே உள்ள படத்தில் இருப்பது போல இருக்கப்போகிறது.

எப்போது தெரியும்?
நெருப்பு வளையச் சூரிய கிரகணம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் காலை 09:15 முதல் மதியம் 02:30 மணி வரை தெரியும். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்ககூடாது. பார்த்தால் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.
எந்த பகுதியில், எவ்வளவு தெரியும்?

சென்னையில் இந்த சூரிய கிரகணம் 34 சதவீதம் தெளிவாகத் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சூரியனின் வட்டில் சுமார் 34 சதவீதம் அதிகபட்ச கிரகண நேரத்தில் நிலவு மூடியிருக்கும். வட இந்தியாவின் ஹரியானா, உத்தரகண்ட் பகுதிகளில் சூரிய கிரகணத்தை மக்கள் முழுமையாகப் காண முடியும். சவூதி அரேபியா, சீனா, மத்திய ஆஃப்ரிக்கா நாடுகளிலும் இந்த கிரகணத்தை காணலாம்.
எப்படி காண்பது?
நியோதமிழ் இந்நிகழ்வை NeoTamil TV எனும் YouTube தளத்தில் நேரலை செய்யவுள்ளது. தவறாமல் கண்டுகளியுங்கள். மறக்காமல் YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்!
இன்னும் 19 ஆண்டுகளில், 2039-ம் ஆண்டு, இதே ஜூன் 21-ம் தேதி ஒரு சூரிய கிரகணம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.