பூமி அல்லாத வேறொரு கிரகத்தில் பறக்க முயற்சிக்கும் முதல் ஹெலிகாப்டர். ஆம் அறிவியலின் அற்புதம். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் எதிர்காலத்தில் மனிதர்கள் குடியிருக்க முடியுமா, அங்கு உயிரினங்கள் ஏதாவது வாழ்கின்றனவா என்பது குறித்த ஆய்வுப் பணியை இது மேற்கொள்ளும். இந்த விண்கலம் கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி அங்கு ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது.
பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் ஒரு குட்டி ஹெலிகாப்டரையும் நாசா அனுப்பி வைத்திருந்தது. இன்ஜெனியூட்டி (Ingenuity) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஹெலிகாப்டர் செவ்வாயில் முதல் முறையாக பறக்கவிருக்கின்றது. ஹெலிகாப்டர் 90 வினாடிகள் வரை பறக்கக்கூடும். ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 980 அடி (300 மீட்டர்) தூரமும், தரையில் இருந்து சுமார் 10 முதல் 15 அடி உயரம் வரையிலும் பறக்கும். ரைட் பிரதர்ஸ் விமானத்தின் முதல் முயற்சியாக 12 வினாடி பறந்த விமானத்துடன் ஒப்பிடும்போது இது சிறிய சாதனையல்ல.
இன்ஜெனியூட்டி அமைப்பு

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நான்கு கார்பன்-ஃபைபர் பிளேட்களைக் கொண்டுள்ளது. அவை இரண்டு ரோட்டர்களாக அமைக்கப்பட்டுள்ளன. அவை எதிரெதிர் திசைகளில் 2,400 rpm வேகத்தில் சுழல்கின்றன. ரோட்டர்களின் மொத்த நீளம்: 4 அடி (1.2 மீட்டர்). பூமியில் பயணிகள் ஹெலிகாப்டரை விட பல மடங்கு இது வேகமானது. இதில் புதுமையான சூரிய மின்கலங்கள், பேட்டரிகள் மற்றும் பிற கூறுகளையும் கொண்டுள்ளது. இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் சுமார் 4 பவுண்டுகள் (1.8 கிலோகிராம்) மட்டுமே எடையுள்ளதாக இருக்கிறது. பூமியில் 4 பவுண்டுகள் என்பது செவ்வாய் கிரகத்தில் 1.5 பவுண்டுகள்.
முதல் முயற்சி
செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறப்பது கடினம், ஏன்? செவ்வாய் கிரகத்தின் மெல்லிய வளிமண்டலம் காரணமாக காற்றில் பறப்பதற்கு கடினமாக உள்ளது. இங்கு மெல்லிய வளிமண்டலம், பூமியின் அடர்த்தியை விட 1% க்கும் குறைவானது. அதாவது செவ்வாய் வளிமண்டலம் பூமியின் வளிமண்டலத்தை விட 99% குறைவான அடர்த்தியாக இருப்பதால், இங்கு பறப்பதற்கு எடை குறைவானதாக இருக்க வேண்டும். அதிலுள்ள இறக்கைகள் மிகப் பெரியவை மற்றும் பூமியில் உள்ள ஒரு ஹெலிகாப்டருக்குத் தேவையானதை விட மிக வேகமாக சுழல்கின்றன.

கூடுதலாக, ஜேபிஎல் விமானக் கட்டுப்பாட்டாளர்கள் ஜாய்ஸ்டிக் மூலம் ஹெலிகாப்டரைக் கட்டுப்படுத்த முடியாது. தகவல்தொடர்பு தாமதம் என்பது விண்வெளி சார்ந்த வேளையில் எதிர்கொள்வது இயல்பானது. இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் தன் வழிப்பாதையில் எவ்வாறு பறப்பது மற்றும் தன்னை சூடாக வைத்திருப்பது குறித்த முடிவுகளை சுயமாக எடுப்பதற்கு முடியும்.
இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர்- பெயர்
அலபாமாவின் நார்த்போர்ட் உயர்நிலைப் பள்ளி மாணவி வனீசா ரூபானி (Vaneeza Rupani) முதலில் செவ்வாய் கிரக ரோவருக்கு Ingenuity என்ற பெயரை சமர்ப்பித்தார். ஆனால் ரோவருக்கு, பெர்சவரன்ஸ் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டமையால், நாசா அதிகாரிகள் Ingenuity என்ற பெயரை ஹெலிகாப்டருக்கு ஏற்ற பெயராக அங்கீகரித்தனர்.
ஹெலிகாப்டர் சோதனை
2014 முதல் 2019 வரையிலான மிக கவனமான நடவடிக்கைகளில், செவ்வாய் கிரகத்தின் மெல்லிய வளிமண்டலத்தில் பறப்பதற்கு போதுமானதாக உருவாக்கக்கூடிய மற்றும் செவ்வாய் போன்ற சூழலில் பிழைத்திருக்கும் திறன் கொண்ட ஒரு விமானத்தை உருவாக்க முடியும் என்பதை JPL-இன் பொறியாளர்கள் நிரூபித்தனர். இரவு நேரங்களில் நிலவும் கடும் குளிரைச் சமாளிப்பதே அதன் முக்கியமான சவாலாக இருக்கும்.
அவர்கள் JPL-ல் செவ்வாய் கிரகம் போன்ற நிலையை ஏற்படுத்தி படிப்படியாக மேம்பட்ட மாடல்களை சோதித்தனர். ஜனவரி 2019 இல், செவ்வாய் கிரகத்துக்கு பெர்சவரன்ஸ் உடன் பயணம் செய்த குட்டி ஹெலிகாப்டர் தற்போது செவ்வாயில் பறக்கும் நிலையில் இருக்கிறது.

மைல்கல்
ஹெலிகாப்டருக்கு பல்வேறு சவால்கள் உள்ளது. செவ்வாய் கிரகத்தில் இரவு நேரங்களில் -90 டிகிரி செல்சியல் வெப்பநிலை நிலவும். அந்த கடும் குளிரை சமாளித்து ஹெலிகாப்டர் தன்னை தானே சூடாக வைத்துக்கொள்ள வேண்டும். செவ்வாய் இரவுகளின் தீவிரமான குளிரில் தன்னிச்சையாக சூடாக வைத்திருப்பது என்பது பெரும் சவாலாகும். ஹெலிகாப்டர் அதன் சோலார் பேனல் மூலமாக தன்னை சார்ஜ் செய்து கொள்கிறது. இதுவரை தினசரி மின் நுகர்வு, சூரிய சக்தி மற்றும் பேட்டரி அளவை கண்காணித்ததில் ஹெலிகாப்டர் வெற்றிகரமாகவே உள்ளது. இது பூமியிலிருந்து முன்கூட்டியே அனுப்பப்பட்ட குறைந்தபட்ச கட்டளைகளை ஏற்றுக்கொண்டு பறக்க வேண்டும், தரையிறங்க வேண்டும்.
ஹெலிகாப்டர் அதன் முதல் பறக்கும் விமான முயற்சியை செவ்வாயில் மேற்கொள்கிறது. இதில் ஹெலிகாப்டர் வெற்றி பெற்றால், 30 செவ்வாய் நாட்கள் (31-பூமி-நாள்) இடைவெளியில் மேலும் நான்கு ஹெலிகாப்டர்களை நாசா இன்ஜெனியூட்டி குழு தயார் செய்துவிடும்.
எதிர்கால செவ்வாய் கிரக ஆய்வு
செவ்வாய் வளிமண்டலத்தில் பறக்கத் தேவையான தொழில்நுட்பங்களை இந்த ஹெலிகாப்டர் கொண்டுள்ளது. இது வெற்றிகரமாக இருந்தால், இந்த தொழில்நுட்பங்கள் செவ்வாய் கிரகத்திற்கான எதிர்கால ரோபோ மற்றும் மனித பயணங்களில் சேர்க்கப்படக்கூடிய பிற மேம்பட்ட ரோபோ பறக்கும் வாகனங்களை இயக்க முடியும். தற்போதைய சுற்றுப்பாதைகள் இதுவரை அங்கு தரையிறங்கிய ரோவர்கள் வழங்காத ஒரு தனித்துவமான பார்வையை அவை வழங்கலாம். ரோவர்கள் அடைய கடினமாக இருக்கும் நிலப்பரப்புக்களை இவற்றால் அணுக முடியும்.
Also Read: செவ்வாய் கோள் பற்றிய 10 தகவல்கள்!