நாம் இன்று கேட்கும் பல இளையராஜா பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இளையராஜா 7000 பாடல்களை படைத்திருக்கிறார். அதில் 2500-3000 பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மட்டுமே பல மொழிகளில் பாடியிருப்பார் எனலாம். அதாவது இளையராஜாவின் இசையில் 35-40 சதவீத பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பார்.
இளையராஜா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு எவ்வளவு ஆழமானது என்று நமக்கே தெரியும். எல்லோருடைய நட்பில் எப்படி பிரச்சினைகள் வருமோ அதே போல் இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சினை வந்தது. அதைப்பற்றி இருவரும் பொதுவெளியில் விவாதிக்கவேயில்லை என்பதை வைத்தே அவர்களது நட்பின் ஆழத்தை உணர முடியும்.
இருவரும் மீண்டும் இணையமாட்டார்களா என ஏங்கினர் என்னைப்போன்ற எண்ணற்ற ரசிகர்கள். அவர்களுக்கு இடையே சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் நட்புக்கு எந்த சேதாரமும் இல்லாமல் இருந்ததால் மீண்டும் இணைந்தனர்.
ஜூன் 2019-ல் சென்னை EVP Carnival Cinemas-ல் நடந்த இசை கொண்டாடும் இசை (Isai Celebrates Isai ) என்ற இசை நிகழ்ச்சி இருவருக்கும் முக்கியமானது. இருவரும் இணையமாட்டார்களா என ஏங்கிய ரசிகர்கள் அனைவருக்கும் விருந்து படைத்த நிகழ்ச்சி அது. அந்த இசை நிகழ்ச்சி தான் அவர்கள் இருவரையும் மீண்டும் இணைத்தது. அந்த இசை நிகழ்ச்சி முழுவதும் பல்வேறு பாடல்கள் பாடி அனைவரையும் மகிழ்வித்தார் எஸ்.பி.பி. அன்று அவர் பாடிய விக்ரம் படத்தின் பாடல் இன்றும் காதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது… மொத்த பார்வையாளர்களையும் ஆட்டம் போடவைத்த அந்த பாடலை அவர் பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் பாடினார். வேறு ஒரு வெளிநாட்டு இசைநிகழ்ச்சியில் பாடியதை நீங்கள் இங்கே கண்டு ரசிக்கலாம்.
அதன்பிறகு சில மாதங்களில் இளையராஜா இசையில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் ஒரு பாடலை பாடினார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அது தான் தனது நெருங்கிய நண்பனின் இசையில் பாடும் கடைசி திரைப்பட பாடலாக இருக்கும் என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்காது. நமக்கும் தெரியவில்லை…
இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல் தமிழரசன் படத்தில் இடம்பெற்ற ‘நீ தான் என் கனவு’ என்ற பாடல். விஜய் ஆண்டனி நடித்த படத்தின் இந்த பாடல் 2019 டிசம்பர் மாதம் வெளியானது. பாடலை பாடியபின்னர் எஸ்.பி.பி கூறியதுஎன்ன தெரியுமா… இனிமேல் இசை நிகழ்ச்சிகளில் பாட ஒரு அற்புதமான பாடல் கிடைத்திருக்கிறது என்று இந்த பாடலைப் பற்றி தயாரிப்பாளரிடம் பெருமையாக கூறிச் சென்றாராம் எஸ்.பி.பி. இதை படத்தின் தயாரிப்பாளரே சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். 2020 தொடக்கம் முதலே கொரோனா பரவ தொடங்கியதால் எஸ்.பி.பி மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அதனால், அந்த பாடலை மேடை நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்பு எஸ்.பி.பிக்கு வாய்க்காமலே போய்விட்டது.
இந்த பாடலே இளையராஜா-எஸ்.பி.பி கூட்டணியில் உருவான கடைசி திரைப்பட பாடலாய் போனது!
இதற்கு பிறகு கொரோனா காலத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடலை கொரோனா களப்பணியாளர்களுக்காக பாடினார். அது தான் இசைஞானியின் இசையில் வெளியான கடைசி பாடல்.