நாம் கண்களை அடிக்கடி இமைக்கிறோம் அல்லவா? அதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
பொதுவாக நமக்கு தெரிந்த காரணம் கண் இமைப்பதால் கண்கள் தூசு, பாக்டீரியா, அதிகப்படியான வெளிச்சம் மற்றும் காற்றிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன என்பதே.
மற்றொரு முக்கிய காரணம் உண்டு. கண்கள் வறண்டு விடாமல் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக.
நம் கண்களில் ஈரப்பதம் கண்ணீரின் உதவியால் தக்கவைக்கப்படுகிறது. உண்மையில் நாம் அழாத போதும் நம் கண்கள் கண்ணீரை சுரக்கின்றன. நம்ப முடியவில்லையா?. ஆனால் அது தான் உண்மை. நாம் அதை உணர்வது தான் இல்லை .
கண்ணீர் எப்படி சுரக்கிறது?
நம் கண்களில் இரு கண்ணீர் சுரப்பிகள் உள்ளன. அவை புருவம் முடியும் இடத்திற்கு மேற்பக்கத்தில் உள்ளன. நாம் கண்களை இமைக்கும் போது சுரக்கப்படும் கண்ணீர் கண்களில் பரவி கண்களின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. பிறகு இமைகளின் விளிம்பில் உள்ள சிறு திறப்பு வழியாக கண்ணீர்ப் பையை அடைந்து அங்கிருந்து மூக்கிற்கும் தொண்டைக்கும் சென்று ஆவியாகிறது. இது எப்போதும் நடக்கிற ஒரு நிகழ்வு.

மேலே உள்ள படத்தில், Lacrimal Gland -எனப்படுவது தான் கண்ணீர் சுரப்பியாகும்.
ஆனால் நம் உணர்வுகளின் காரணமாக நாம் அழும் போது கண்ணீர் அதிகமாக சுரக்கும். எனவே தான் அந்த வெளியேற முடியாத அதிகப்படியான நீர் நம் கன்னங்கள் வழியாக வெளியேறுகிறது.
அழும் போது மூக்கில் தண்ணீர் வருவது ஏன்?
குழந்தைகள் சில நேரங்களில் நீண்ட நேரம் ஆடம் பிடித்து அழும் போது மூக்கில் தண்ணீர் வருவதை பார்த்திருப்பீர்கள். கண்ணுக்கு தேவையான கண்ணீர் போக மீதம் உள்ளது கண்ணீராக வழிந்தோடுகிறது. வழியும் அளவை விட அதிகம் சுரக்கும் கண்ணீரானது Lacrimal Punctum எனப்படும் இரு சிறு துளைகள் வழியாக Lacrimal Canal மூலம் மூக்கினை வந்தடைகிறது. பின் அந்த நீரானது மூக்கின் வழியே வெளியேறுகிறது.
கண்ணில் தூசி விழுந்தாலும் கண்ணீர் அதிகம் சுரந்து தூசியை வெளியேற்றிவிடுகிறது.
கண்ணீரில் என்ன உள்ளது?
கண்ணீரில் லிப்போகலின் (Lipocalin), லேக்டோஃபெரின், (Lactoferrin), லிபிட் (Libid) என்னும் கொழுப்பு, லைசோசைம் (Lysozyme) என்னும் நுண்ணுயிர் கொல்லி போன்ற பல்வேறு வேதிப் பொருட்கள் உள்ளன. இவை தான் கண்ணிற்கு ஈரப்பதம் மற்றும் ஒரு வித வழவழப்பு தன்மையை தருகின்றன.
நாம் இமைக்கும் போது இரு இமைகளையும் சேர்த்து தான் இமைப்போம். ஆனால், ஆமைகள் மற்றும் சில எலி வகைகளால் (வெள்ளெலி) ஒரு கண்ணை மட்டுமே இமைக்க முடியுமாம்.
இமைப்பது என்பது அனிச்சையான செயல் தான். பொதுவாக நாம் ஒரு நிமிடத்தில் பதினான்கு முறை இமைக்கிறோம். ஆனால் நம் மன உணர்வுகளை பொறுத்து இதிலும் சில வேறுபாடுகள் ஏற்படத்தான் செய்கின்றன. அதாவது நாம் மிகவும் மன அழுத்தத்தில் அல்லது பதற்றத்தில் உள்ள போது குறைவாகவே இமைக்கிறோம். அதிலும் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்வோர் இமைப்பது சராசரியை விட குறைகிறது. இதுவே பல கண் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. ஏனெனில் இமைத்தால் தானே சுரக்கும் கண்ணீர் கண் முழுவதும் பரவி ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும்?
கண்கள் சிவப்பாக காரணம் என்ன?
மென்பொருள் பொறியாளர்கள், கணிப்பொறியில் வேலை செய்யும் பலரும் கண்ணை இமைக்க மறந்துவிடுவதால் கண்ணில் நீர் வற்றி, கண் எரிச்சலுற்று சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கிறது.
நீங்கள் கூகுள் குரோம் இணைய உலாவியை பயன்படுத்தினால், eyeCare – Protect your vision என்ற இந்த நீட்டிப்பை (Extension) இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும். உங்கள் கண்களுக்கு ஓய்வு தர நீங்கள் மறந்து விட்டாலும் 20 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த நீட்டிப்பே நினைவூட்டும்.
எனவே, அடிக்கடி இமைப்பதன் மூலம் நம் கண்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது தெளிவாகிறது. கணிப்பொறியாளர்கள் கண்களை பாதுகாக்க மேலும் பல Software பற்றிய தகவல்கள் தேவையெனில் கீழே பின்னூட்டம் (Comment) இடவும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஷேர் செய்யவும்.