- இந்தோனேஷியாவின் Kawah Ijen எரிமலை நீல நிறத்தில் எரிமலைக் குழம்பை வெளியேற்றுகிறது!
- இங்கு சுமார் 16 அடி (5 மீட்டர்) உயரமுள்ள தீப்பிழம்புகள் ஏற்படுகின்றன.
- எரிமலையின் உச்சியில் உலகின் மிகப்பெரிய அமில ஏரி உள்ளது. இது தான் காரணமா?
எரிமலை என்றதுமே அதிலிருந்து வெளிப்படும் எரிமலை குழம்பு தான் நம் கண் முன் வந்து போகும். அடர் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் எரிமலையிலிருந்து கொட்டி எரிமலையைச் சுற்றி பாய்ந்து கொண்டிருக்கும். ஆனால் Kawah Ijen எரிமலையிலிருந்து வெளிவரும் லாவா மட்டும் வினோதமாகப் பார்ப்பதற்கு நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த அரிய காட்சியைக் காண்பதற்காகவே அங்கு சுற்றுலாப் பயணிகளும் புகைப்படக் கலைஞர்களும் விரும்பி செல்கின்றனர். சரி! இந்த நீல நிறத்திற்கு உண்மையான காரணம் தான் என்ன?

உருகிய பாறை குழம்பு அதி உயர் வெப்பநிலையில் வெளிப்படும் போது அதை எரிமலை குழம்பு (Lava) என அழைக்கிறோம். இந்த லாவாவின் நிறம் என்பது அதில் இருக்கும் கனிமங்களின் கலவையின் அடிப்படையில் இடத்திற்கு இடம் சற்று வேறுபடும். எப்படிப் பார்த்தாலும் லாவாவின் நிறம் பொதுவாக அடர் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும்.
நீல நிற எரிமலை குழம்பு – காரணம் என்ன?
ஆனால், இந்தோனேஷியாவின் ஜாவா தீவின் கிழக்கு முனைக்கு அருகில் இருக்கும் Kawah Ijen எரிமலையில் லாவாவுடன் சேர்ந்து மிக அதிக அளவு சல்பர் வாயுக்கள், அதிக அழுத்தம் மற்றும் உயர் வெப்பநிலையில், சில நேரங்களில் 600°C க்கும் அதிகமான வெப்பநிலையில் வெளிப்படுவது தான் இந்த நீல நிறத்திற்கு உண்மையான காரணம்.
அது எப்படி என்றால் எரிமலை விரிசல்களிலிருந்து வெளியேறும் லாவாவால் தூண்டப்பட்ட கந்தகம் (Sulfur), நமது வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் நிறைந்த காற்றோடு தொடர்பு கொள்ளும் போது உடனடியாக எரிய ஆரம்பிக்கிறது. அப்போது வெளிவரும் தீப்பிழம்புகள் பிரகாசமான நீல நிறத்தில் இருக்கும். இந்த தீப்பிழம்புகள் சுமார் 16 அடி (5 மீட்டர்) உயரம் வரை இருக்கும்!
நீல நிறம் மாலை அல்லது இரவுகளில் மட்டுமே தெளிவாக தெரியும்!
சல்பர்
கூடவே லாவாவில் இருக்கும் அதிகப்படியான திரவ சல்பர் தொடர்ந்து எரிந்து பாறை சரிவுகளில் பாயும் போது அது பார்க்க நீல நிறத்தில் எரிமலை குழம்பு வெளிப்படுவதைப் போலக் காட்சியாகிறது. சல்பர் வாயுக்கள் எரிவதால் ஏற்படும் தீப்பிழம்புகள் மட்டுமே நீல நிறம் என்பதால் பகலை விட மாலை அல்லது இரவுகளில் மட்டுமே தெளிவாக அதாவது நீல நிறமாகத் தெரியும். இப்படி எரிந்த கந்தகம் (Sulfur) குளிர்ந்து லாவாவுடன் இணைந்து திடமான சல்பூரிக் பாறையாக அங்கேயே படிந்துவிடுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, சூடான எரிமலை துவாரங்களைச் சுற்றி உருகிய சல்பர் இருப்பது பொதுவானது தான். ஏனென்றால் சல்பர் குறைந்த உருகும் வெப்பநிலையைக் கொண்டது. அதாவது 239 ° F (115 ° C). எரிமலையின் உச்சியைப் பொறுத்தவரை அங்கு இருக்கும் வெப்பநிலை கண்டிப்பாக இதை விட அதிகமாகத்தான் இருக்கும். அதே போலச் சாம்பல் வெடிப்புகள் நிகழும் போது கூட வெடிக்கும் எரிமலைகளின் அடிவாரத்தில் இது போன்ற நீல தீப்பிழம்புகள் காணப்படும்.
அமில ஏரி
இந்த எரிமலையின் உச்சியில் உலகின் மிகப்பெரிய அமில எரியும் (Kawah Ijen acid lake) உள்ளது. சாதாரணமாக எலுமிச்சை சாற்றின் pH 2. பேட்டரி அமிலத்தின் pH 1. அதை விட இந்த ஏரியில் உள்ள நீரின் pH குறைவு. அதாவது 0.5 ஐ விடக் குறைவு. அப்படியென்றால் இதன் அமிலத்தன்மை எவ்வளவு என்று பார்த்துக்கொள்ளுங்கள்! எரிமலை வெளியேற்றிய ஹைட்ரஜன் குளோரைடு வாயு தண்ணீருடன் வினை புரிந்து தான் அதிக ஒடுக்கப்பட்ட ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை ஏரியில் உருவாக்கியிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதனால் தான் அந்த ஏரியில் உள்ள தண்ணீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது!

இந்த அரிய நிகழ்வைப் புகைப்படம் எடுத்த பிரெஞ்சு புகைப்படக்காரர் Olivier Grunewald தனது அனுபவங்களைக் கூறியுள்ளார். இந்த நிகழ்வைப் போட்டோ எடுப்பதில் கூட பல நடைமுறை சிக்கல்கள் உள்ளனவாம். அதுவும் அடர்த்தியான வாயுக்கள் வெளிவரும் போது நம் கண்களுக்கு எதுவுமே ஏன் நம் கை கூட தெரியாது. அவரது முதல் பயணத்தின்போது, அவரது ஒரு கேமராவும், இரண்டு லென்ஸ்களும் அமிலத்தால் சிதைந்துள்ளன. அவர்கள் வீடு திரும்பிய பிறகு, அவர்கள் தோலிலிருந்து வெளிப்பட சல்பர் வாசனை நீங்க கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் வரை ஆகியுள்ளது.
சல்பர் டை ஆக்சைடு மற்றும் பிற நச்சு வாயுக்களை சுவாசித்தால் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்!
சுரங்கத் தொழில்
சல்பர் உணவு மற்றும் வேதியியல் தொழிற்சாலைகளால் பயன்படுத்தப்படுகிறது என்பதால் அங்கு வசிக்கும் உள்ளூர் வாசிகள் பலர் இந்த பாறைகளை வெட்டி எடுத்து விற்கின்றனர். அதுவும் வாயு முகமூடிகள் கூட அணியாமல், மலையின் உச்சி வரை நடந்தே சென்று எந்தவொரு பெரிய உபகரணங்களும் இல்லாமல் சல்பர் பாறைகளை வெட்டி கூடைகளில் வைத்து கீழே கொண்டு செல்கின்றனர். இந்த தொழில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கிறது. ஒரு கிலோ சல்பரை சுமார் 680 இந்தோனேசிய ரூபாய்களுக்கு விற்கிறார்கள். இது ஆறு சென்ட்டுகளுக்கு சமம்.

பகலில் சூரிய வெப்பத்திலிருந்து தப்பிக்கப் பலர் இரவு நேரத்தில் நீல நிற ஒளியில் வேலை செய்கின்றனர். இப்படி வெறும் பணத்திற்காக தொழிலாளர்கள் வேலை செய்வது மிகவும் ஆபத்து என்கின்றனர் விஞ்ஞானிகள். ஏனெனில் இப்படி சல்பர் டை ஆக்சைடு மற்றும் பிற நச்சு வாயுக்களை நீண்ட காலமாகச் சுவாசிப்பதால் தொண்டை மற்றும் நுரையீரல் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நுரையீரல் நோய்க்கான ஆபத்துகள் ஏற்படும்.
ஒருவேளை இயற்கையின் அதிசயமான இந்த எரிமலையைப் பார்வையிடத் திட்டமிட்டால், வாயுக்கள் நம் கண்களையும் சுவாசப் பாதையையும் பாதிக்காதபடி, ஒரு வாயு முகமூடியையும் கண் பாதுகாப்பு கவசத்தையும் கண்டிப்பாக அணிய வேண்டும்!