- கண்ணீர் புகை குண்டில் CS Gas எனப்படும் 2-Chlorobenzalmalononitrile (C10H5ClN2) சேர்மம் தான் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
- நமது உடலில் இருக்கும் TRPA1 மற்றும் TRPV1 போன்ற வலி ஏற்பிகளில் ஒன்றோடு பிணைக்கப்படுவதால் வலி மற்றும் ஒருவித தொல்லை ஏற்படும்!
மோசமான கலவரங்களின் போது கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை (Tear Gas) பயன்படுத்துவது என்பது ரொம்ப காலமாகவே பல நாடுகளில் உள்ள ஒரு நடைமுறை தான். பயன்படுத்திய கொஞ்ச நேரத்தில் இந்த கண்ணீர் புகை குண்டுகள் கூட்டத்தை இருந்த இடம் தெரியாமல் சிதறடித்துவிடும். சரி, இந்த கண்ணீர் புகை குண்டு என்பது என்ன? அது எப்படி வேலை செய்யும்? மனிதர்கள் மீது இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் இப்போது பார்ப்போம்.

கண்ணீர் புகை குண்டு என்றால் என்ன?
கண்ணீர் புகை குண்டு என்பது எரிச்சலை ஏற்படுத்தும் சில வகை வேதியியல் கலவையிலான உயிரைப் பறிக்காத ஒரு குண்டாகும். இந்த வேதிப்பொருள் கலவையில் வெங்காயத்தில் உள்ள Thiopropanal S-oxide என்ற வாயுவும் உள்ளது. போராட்டங்களை கலைக்க இந்த குண்டை பயன்படுத்துகின்றனர். இவை கண்கள், மூக்கு, வாய் மற்றும் நுரையீரலில் உள்ள சளி சவ்வுகளை எரிச்சலூட்டி கண்ணீர், அரிப்பு, இருமல், சளி, தும்மல், தோலில் எரிச்சல், கொப்புளங்கள், சுவாசிப்பதில் சிரமம், தற்காலிக பார்வை இழப்பு போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.
கண்ணீர் புகை குண்டு – முக்கிய மூலப்பொருள்
பல இரசாயனங்களை கண்ணீர் புகை குண்டாக பயன்படுத்த முடியும் என்றாலும் அவற்றில் பெரும்பாலும் CS எனப்படும் 2-Chlorobenzalmalononitrile (C10H5ClN2) சேர்மம் தான் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதனை 1928 ஆம் ஆண்டு Ben Corson and Roger Stoughton என்ற அமெரிக்க வேதியிலியலாளர்கள் கண்டுபிடித்தனர். அவர்களின் இரண்டாம் பெயரின் முதல் எழுத்தை சேர்த்து இது “CS” என அழைக்கப்படுகிறது. 1950 ஆண்டு தான் வேதியிலாளர்கள் கண்ணீர் புகை குண்டை தயாரித்தனர். மேலும் இதில் புரோமோஅசிட்டோன், பென்சில் புரோமைடு, எத்தில் புரோமோஅசிட்டேட், சைலைல் புரோமைடு மற்றும் α- புரோமோபென்சில் சயனைடு போன்ற சேர்மங்களும் இருக்கும்.
பாதிப்புகள் எல்லாம் புகை உடலில் பட்ட உடனேயே தொடங்க ஆரம்பித்துவிடும்!
கண்ணீர் புகை குண்டின் முக்கிய பொருளான CS ஒரு திட தூள். இதை வாயுவாக காற்றில் சிதறடிக்க மெத்திலீன் குளோரைடு போன்றவை தேவைப்படும். இது திட தூளை காற்று வழியாக பரப்பும்.
கண்ணீர் புகை குண்டு – வேலை செய்யும் விதம்
கண்ணீர் புகை குண்டுகள் ஒன்றும் நம் மனநிலையை மாற்றி அழ வைக்காது. இதில் இருக்கும் வேதியியல் பொருட்கள் நமது உடலில் இருக்கும் TRPA1 மற்றும் TRPV1 போன்ற வலி ஏற்பிகளில் ஒன்றோடு பிணைக்கப்படுவதால் தோல், கண்கள் மற்றும் சளி சவ்வுகளில் வலி மற்றும் ஒருவித தொல்லை ஏற்படும். இதனால் இருமல் ஏற்படுவதோடு கண்ணீரும் சளியும் முகத்தில் இருந்து வழிந்தோடும்.
இதனால் இவற்றை பயன்படுத்தும் போது ஆர்பாட்டக்காரர்களால் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட முடியாமல் அங்கிருந்து தப்பித்தால் போதும் என ஆகிவிடும்.

கண்ணீர் புகை குண்டுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள்
இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் எல்லாம் அந்த புகை உடலில் பட்ட உடனேயே தொடங்க ஆரம்பித்துவிடும். அங்கிருந்து வெளியேறிய பின்பும் கூட மூச்சு திணறும். எரியும் உணர்வு தொண்டை வரை இருக்கும். ஏதோ நெருப்பை விழுங்கியது போல் இருக்கும். கண்களை திறக்க முடியாது.கட்டாயப்படுத்தி திறந்தால் கூட மங்கலாக தான் தெரியும்.
இந்த CS கண்களில் படும் போது உணர்ச்சி நரம்புகள் மூளைக்கு ஒரு சமிக்ஞையை அனுப்பும். உடனே மூளை கண்ணீர் சுரக்க உதவும் ஹார்மோன்களை அனுப்பி கண்ணீரை வெளியேற்றும். அடுத்து இந்த CS-ஐ நாம் சுவாசிக்கும் போது ஏற்படும் எரிச்சல் உணர்வு நமது சுவாச மண்டலத்திலும் பாதுகாப்புகளை நடவடிக்கைகளை தூண்டி விடும். அதாவது இருமல் சளி போன்றவற்றை ஏற்படுத்தி உடலின் எரிச்சலுக்கு காரணமானவற்றை வெளியேற்ற முயற்சிக்கும். இதனால் சிலருக்கு குமட்டல் மற்றும் வாந்தியும் கூட ஏற்படலாம்.
கண்ணீர் புகை குண்டால் ஏற்படும் பாதிப்புகள் எதுவும் தொடர்ந்து இருக்காது. கண்ணீர் புகை குண்டின் புகை திறந்த வெளியில் எப்போதாவது சிறிது படும் போது ஏற்படும் பாதிப்புகள் சில மணி நேரங்களில் சரியாகிவிடும். பாதிக்கப்படும் 15 நபர்களில் ஒருவருக்கு தான் தீவிர பாதிப்புகள் ஏற்படும் என்கிறது ஒரு ஆய்வு. குழந்தைகள் மற்றும் உடல்நிலை கோளாறுகள் உள்ள பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு இது பெரும் அபாயங்களை ஏற்படுத்துகிறது என்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு.
கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்படும் பேராபத்து
அதுவே மூடப்பட்ட இடங்களில் அதுவும் அதிக அளவு படும் போது தற்காலிகமாக இல்லாமல் நிரந்தர பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் கடுமையான அறிகுறிகளான குருட்டுத்தன்மை, இரத்தக்கசிவு, நரம்பு சேதம், கண்புரை,கார்னியல் அரிப்பு,உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும். அதோடு குழந்தைகள் மற்றும் சுவாச சிக்கல்கள், ஆஸ்துமா, இதயம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் இது ஆபத்தானது தான். ஏன்! அரிதான சில சந்தர்ப்பங்களில் மரணம் கூட நிகழலாம்!
CS புகை காற்றை விட கனமானது என்பதால் அது தரையில் படிந்து விடும்!
கண்ணீர் புகை குண்டுகள் முதலாம் உலக போரின் போது பயன்படுத்தப்பட்டன. ஜெனீவாவின் 1993 சர்வதேச இரசாயன ஆயுத மாநாடு, போரின் போது கண்ணீர்ப்புகை பயன்படுத்த தடை விதித்தது. ஆனாலும் பல நாடுகள் கலவரத்தை கட்டுப்படுத்த இவற்றை பயன்படுத்தலாம் என அனுமதி அளிக்கின்றன.
பாதுகாப்பு வழிமுறைகள்
கண்ணீர் புகை குண்டால் ஏற்படும் பாதிப்பிற்கு எந்த மருந்தும் கிடையாது. அந்த இடத்தை விட்டு வெளியேறி நல்ல காற்றை சுவாசித்து நன்றாக மூச்சுவிடுவதே ஒரே வழி.இதன் மூலம் நுரையீரல் மற்றும் இரத்தத்தில் முடிந்தவரை புதிய ஆக்ஸிஜனைப் பெற முடியும். CS புகை காற்றை விட கனமானது என்பதால் அது தரையில் படிந்து விடும். அதனால் உயரமான இடத்திற்கு செல்வது பாதுகாப்பானதாக இருக்கும். கண்கள், வாய், மூக்கு மற்றும் தோலை முடிந்தவரை மூடுவதன் மூலம் பாதிப்பை கொஞ்சம் குறைக்க முடியும்.

அடுத்து, கண்களை தண்ணீரில் குறைந்தது 15 நிமிடங்களாவது கழுவ வேண்டும். கான்டெக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், அவற்றை மீண்டும் பயன்படுத்த கூடாது. அதே போல கண்ணாடி அணிந்திருந்தால், அவற்றை சோப்பு தண்ணீரில் கழுவ வேண்டும். அடுத்து குளித்துவிட்டு புதிய ஆடையை அணிய வேண்டும். அந்த ஆடைகளை மற்ற துணிகளோடு துவைக்காமல் தனியாக துவைக்க வேண்டும். இதற்கு குளோரின் ப்ளீச் கொண்ட டிடர்ஜெண்ட்களை பயன்படுத்த கூடாது, ஏனெனில் அவை CS உடன் வினைபுரிந்து இன்னும் நச்சு கலவைகளை உருவாக்கிவிடும்.
பொதுவாக பெண்கள் பயன்படுத்தும் பெப்பர் ஸ்ப்ரே(Pepper Spray) கூட ஒரு வகை கண்ணீர் புகை குண்டு தான். இது Oleoresin capsicum என்ற எண்ணெயால் ஆனது. அழற்சியை ஏற்படுத்தும் இவை பயனுள்ளதாக இருக்க அதை நேரடியாக அந்த நபருக்கு அருகில் பயன்படுத்த வேண்டும்!