- கதிர்வீச்சு என்பது அலை வடிவில் இருக்கும் ஒரு ஆற்றல்.
- கதிர்வீச்சின் அளவு “மில்லி ஸீவர்ட்ஸ்“(Milli Sieverts – mSv) என்ற அளவீட்டில் குறிப்பிடப்படுகிறது.
கதிர்வீச்சு என்றால் என்ன என்பது பற்றி முழுவதும் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்! கதிர்வீச்சு என்பது இயற்கையிலேயே இருக்கிற ஒரு விஷயம் தான். வளிமண்டலம், நிலம், நீர், காற்று, சூரிய ஒளியின் புற ஊதா கதிர்வீச்சு என எல்லாவற்றிலும் கதிர்வீச்சு உள்ளது. ஏன் நம் மனித உடலில் கூட தசை, எலும்பு மற்றும் திசுக்களில் இயற்கை கதிர்வீச்சு தனிமங்கள் உள்ளன. நம் உடலில் இருந்து வெளிவரும் வெப்பம் கூட ஒரு வகை கதிர்வீச்சு தான். ஆனால் இவை எல்லாம் இயற்கையானவை. அதே சமயம் நாம் கண்டுபிடித்த மருத்துவ சாதனங்கள், தொலைக்காட்சிகள், செல்போன்கள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற பொருட்கள் மூலம் செயற்கையான கதிர்வீச்சுகளும் வெளிப்படுகின்றன.

கதிர்வீச்சு என்றாலே எப்போதும் ஆபத்தானது அல்ல. ஒரு கதிர்வீச்சு மனிதர்களுக்கு ஆபத்தானதா என்பது அந்த கதிர்வீச்சின் வலிமை, வகை மற்றும் வெளிப்படும் நீளம் ஆகியவற்றைப் பொறுத்தது.
கதிர்வீச்சு என்றால் என்ன?
கதிர்வீச்சு என்பது அலை வடிவில் இருக்கும் ஒரு ஆற்றல். நிலையற்ற ஒரு அணு சிதையும் போது தான் கதிர்வீச்சு ஏற்படும். அதாவது சில இயற்கையான தனிமங்களின் அணுக்கருக்கள் நிலையாக இல்லாமல் சிதையும். அப்போது வெளிவரும் ஆற்றலை கதிர்வீச்சு வடிவத்தில் அவை வெளியிடுகின்றன. இந்த இயற்பியல் நிகழ்வு தான் கதிரியக்கம் எனப்படுகிறது.
கதிர்வீச்சு ஆங்கிலத்தில் Radiation எனப்படுகிறது. கதிரியக்கம் ஆங்கிலத்தில் Radioactivity, Radioactive Decay, Nuclear decay எனவும் குறிப்பிடப்படுகிறது.
ஒரு மார்பு எக்ஸ்ரே சுமார் 0.2 mSv அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்தும்!
கதிர்வீச்சின் விளைவுகள்
சரி, கதிர்வீச்சு பட்டால் என்ன பெரிதாக ஆகிவிடும் என்று தோன்றலாம்? உண்மையில் கதிர்வீச்சு விளைவுகள் உடல் ரீதியான பல பாதிப்புகளை ஏற்படுத்தும்! தொலைபேசி கதிர்வீச்சு முதற்கொண்டு மருத்துவ அத்தியாவசியத்திற்கு எக்ஸ்-ரே எடுப்பது கூட நமது உடல் நலத்திற்கு ஆபத்து தான்!

ஏனென்றால் எக்ஸ்-ரே எடுக்கப் பயன்படும் எக்ஸ்-கதிர்கள் அயனியாக்கும் கதிர்வீச்சின் ஒரு வடிவம். சாதாரண ஒளி ஒரு அணுவைத் தாக்கும் போது, அது அணுவை எந்த குறிப்பிடத்தக்க வகையிலும் மாற்ற முடியாது. அதுவே ஒரு எக்ஸ்-ரே ஒரு அணுவைத் தாக்கும் போது, அது எலக்ட்ரான்கள் மீது மோதி ஒரு அயனியை உருவாக்குகிறது. இந்த எலக்ட்ரான்கள் பிற அணுக்களுடன் மோதி அதிக அயனிகளை உருவாக்குகின்றன.
ஒரு அயனியின் இந்த மின்னூட்டம் உயிரணுக்களுக்குள் இயற்கைக்கு மாறான வேதியியல் எதிர்வினைகளுக்கு வழிவகுக்கும். எடுத்துக்காட்டாக டி.என்.ஏ சங்கிலிகளை உடைக்கலாம். இதனால் ஒரு செல் இறந்துவிடும் அல்லது டி.என்.ஏ ஒரு திடீர் மாற்றத்தை (Mutation) உருவாக்கும். இப்படி நிறைய செல்கள் இறந்தால், அது பல்வேறு நோய்களை உருவாக்கும். டி.என்.ஏ திடீர் மாற்றம் நடந்தால், அது புற்றுநோயாகக் கூட மாறக்கூடும், மேலும் இந்த புற்றுநோய் பரவக்கூடும். இந்த அபாயங்கள் அனைத்தும் இருப்பதால் தான், மருத்துவர்கள் எக்ஸ்-கதிர்களைக் குறைவாகவே பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக ஒரு மார்பு எக்ஸ்ரே சுமார் 0.2 mSv அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்தும்.
கதிர்வீச்சு அலகு
கதிர்வீச்சின் அளவு “மில்லி ஸீவர்ட்ஸ்“(Milli Sieverts – mSv) என்ற அளவீட்டில் குறிப்பிடப்படுகிறது. ஒரு மனிதருக்கு அவருடைய வாழ்நாள் வரைக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் எவ்வளவு கதிரியக்கம் படலாம் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். அந்த கணக்கீடு படி, ஒரு மனிதன் ஒரு வருடத்துக்கு 50 mSv வரை கதிரியக்கத்துக்கு ஆளாகலாம்.

விண்வெளியில் கதிர்வீச்சு உள்ளதா?
பூமியில் இருப்பது போலவே விண்வெளியில் எல்லா இடங்களிலும் கதிர்வீச்சுகள் உள்ளன. ஆனால் இவை மிகவும் ஆபத்தானவை. நமது பூமியின் காந்தப்புலமும், வளிமண்டலமும் இந்த ஆபத்தான கதிர்வீச்சுகளிலிருந்தது நம்மை பாதுகாக்கின்றன. ஆனால் விண்வெளிக்கு செல்லும் போது இந்த பாதுகாப்பு கிடைக்காது.
அனைத்து இயற்கை மூலங்களினாலும் நம் மீது படும் கதிர்வீச்சின் அளவு ஆண்டுக்கு சுமார் 2.4 mSv!
நாசாவின் கூற்றுப் படி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் ஒரு விண்வெளி வீரர் 6 மாதத்தில் 160 மில்லிசிவர்ட்ஸ் கதிர்வீச்சுக்கு ஆளாகிறார். இது கிட்டத்தட்ட 1600 மார்பக எக்ஸ்-ரே எடுப்பதற்குச் சமம். அதுவும் செவ்வாய் கிரகத்தில் 18 மாதம் ஒருவீரர் இருந்தால் அவர் 1000 மில்லிசிவர்ட்ஸ் கதிர்வீச்சுக்கு அதாவது 10000 எக்ஸ்-ரே எடுப்பதற்குச் சமம்!! அதனால் தான் விண்வெளி வீரர்கள் கதிர்வீச்சு பாதிப்புகள் ஏற்படாதபடி பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துகின்றனர்.
இயற்கையான மற்றும் சில அத்தியாவசிய கதிர்வீச்சுகளை ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அனைத்து இயற்கை மூலங்களினாலும் நம் மீது படும் கதிர்வீச்சின் அளவு ஆண்டுக்கு சுமார் 2.4 mSv ஆகும். மற்றபடி, கதிரியக்கத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு ஆபத்து குறையும் என்பது மட்டும் உண்மை!