விண்வெளி என்றாலே பயங்கரமானது தான் என்று விண்வெளி வீரர்கள் அணிந்திருக்கும் அந்த மொத்தமான உடைகளை பார்த்தாலே நமக்குத் தோன்றும்.
விண்வெளி உடை ஒரு விண்வெளி வீரருக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் அழுத்தத்தைத் தருகிறது. மேலும், விண்வெளியின் அதீத குளிர்ச்சி, வெப்பம், விண்வெளிப் பாறைத்துகள், தூசு மற்றும் ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்தும் வீரரைப் பாதுகாக்கிறது
வேதிப்பொருட்கள்
விண்வெளி உடைகள் சாதாரண துணியைக் கொண்டு தயாரிக்கப்படுவதில்லை. நைலான், ஸ்பான்டெக்ஸ், யுரேதேன் பூசிய நைலான், டேக்ரான், நியோபிரேன், மைலர், கார்டெக்ஸ், கெல்வர் மற்றும் நோமெக்ஸ் போன்ற வேதிப் பொருட்களை கொண்டு பல அடுக்குகள் கொண்ட உடையாக தயாரிக்கிறார்கள்.
விண்வெளி உடையில் வீரருக்கு உதவும் வகையில் பல கருவிகள் இருக்கும். மேலும், உடையின் பின்புறம் ஒரு முக்கிய அமைப்பு உள்ளது (Backpack). இதன் மூலம் தான் வீரருக்கு தேவையான ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு அவர் வெளிவிடும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியற்றப்படுகிறது.மேலும் உடைக்குத் தேவையான மின்சாரத்தையும் இது வழங்குகிறது.

குளிரூட்டும் அமைப்பு
முதலில் விண்வெளி வீரர் ஒரு மெல்லிய ஆடையை அணிவார். அந்த ஆடையில் குளிர்ந்த நீர் பாயும் பிளாஸ்டிக் குழாய்கள் நெய்யப்பட்டு இருக்கும். அதன் மேல் தான் விண்வெளி உடையை அணிவார். விண்வெளி உடையின் பின் புறத்திலும் தண்ணீர் தொட்டி இருக்கும். இந்த குளிர்ந்த நீர் அமைப்பு விண்வெளி வீரரின் உடல் இருந்து வெளியாகும் வெப்பத்தை குளிரச் செய்ய பயன்படுகிறது.
ஏனெனில், விண்வெளியில் நம் பூமியைப் போன்று வெப்பசலனம் மூலமாக வெப்பத்தை வெளியேற்றும் அமைப்பு எதுவும் கிடையாது. கதிர்வீச்சு மூலமாக மிகவும் சிறிய அளவு வெப்பமே வெளியாகும். இதனால் வீரரின் உடலை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க இந்த அமைப்பு பயன்படுகிறது.
தொடர்பு சாதனங்கள்
விண்வெளி உடையில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொள்ளத் தேவையான அனைத்து கருவிகளும் இருக்கும். வீரர் அணியும் தொப்பியில் பேசுவதற்கு மைக் மற்றும் இயர் போன் இருக்கும். மேலும், சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் தலைக் கவசமும் அணிவர். இவ்வளவு கருவிகள் இருப்பதால் தான் இந்த உடையை அணிவதே வீரருக்குச் சிரமமாக இருக்கும். ஆனால், விண்வெளியில் இதன் எடையை உணர முடியாததால் சிரமமின்றி வீரரால் செயல்பட முடியும்.
காற்றழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன்
பொதுவாக விண்கலத்தில் நம் பூமியில் உள்ள வளிமண்டல அழுத்தமே பராமரிக்கப்படும். அதனால் அங்கு விண்வெளி உடை தேவை இல்லை. விண்வெளியில் வேலை செய்யும் போது மட்டுமே தேவைப்படும்.

ஆனால், விண்வெளியில் நம் பூமியில் இருப்பது மாதிரியான வளிமண்டல அமைப்பு கிடையாது. அங்கு நமக்குத் தேவையான அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காது. எனவே, விண்வெளி உடை வீரருக்கு சீரான உள் அழுத்தத்தைத் தரும் வகையில் வடிவமைக்கப்படுகிறது . இந்த அழுத்தத்தால் தான் அவர் உடலில் உள்ள திரவங்களின் நீர்ம நிலை தக்க வைக்கப்படுகிறது. ஆனால், நம் வளிமண்டல அழுத்தத்தை விடக் குறைவாகவே அளிக்கப்படுகிறது. இந்த குறைந்த அழுத்தத்தால் வீரரால் அவர் கை கால்களைச் சற்று சுலபமாக அசைக்க முடியும்.
சந்திக்கும் சவால்கள்
விண்வெளி உடையில் வீரர் சுவாசிக்க தூய ஆக்ஸிஜன் மட்டுமே தரப்படுகிறது. இல்லையென்றால் உடையில் உள்ள குறைந்த அழுத்தத்தால் நுரையீரல் மற்றும் இரத்தித்திற்குச் செல்லும் ஆக்ஸிஜன் செறிவு குறையும். இது வீரரின் உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
விண்கலத்தில் சாதராண அழுத்தம் இருக்கும். ஆனால், விண்வெளி உடையில் குறைந்த அழுத்தம் மற்றும் தூய ஆக்ஸிஜன் இருக்கும். இதுவே உடையை அணியும் வீரரின் உடலில் உள்ள நைட்ரஜனை குமிழிகளாக மாற்றிவிடும் வாய்ப்பாக அமையலாம். எனவே, உடைக்குள் செல்லும் முன் முழு நைட்ரஜனையும் நீக்க வீரர் சிறிது நேரம் தூய ஆக்ஸிஜனை மட்டும் ( Pre breath) சுவாசித்துப் பின்பு உடையை அணிவார். அதன் பிறகும் சிறுசிறு பயிற்சிகள் செய்துவிட்டுத் தான் விண்வெளிக்குச் செல்வார்.
விண்வெளி உடையின் அவசியம்
விண்வெளி உடை அணியாமல் ஒருவர் விண்வெளியில் இருந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து பல கருத்துகள் நிலவுகின்றன. ஆக்ஸிஜன் இல்லாததால் முப்பது நொடிகளில் சுயநினைவை இழப்பது மட்டும் உறுதி. மேலும், அழுத்தம் இல்லாததால் உடலில் உள்ள திரவங்களின் நிலை மாறி உடல் ஊதியது போல் இருமடங்காகி விடும்.அதோடு தொன்னூறு நொடிகளில் இறந்தும் விடுவார்.
இவ்வளவு பயங்கரங்களில் இருந்தும் விண்வெளி உடை தான் வீரரைப் பாதுகாக்கிறது. அதனால் தான் நன்கு வடிவமைக்கப்பட்ட விண்வெளி உடை ஒரு சிறிய விண்கலத்திற்குச் சமம்.
என்ன தான் விண்வெளி புதிரானதாக இருந்தாலும், அங்கும் பாதுகாப்பாகச் செல்ல பிரத்யேக உடை கண்டறிந்த மனிதர்களின் திறமை என்னவோ எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதுதான்.