உலகப் புகழ் பெற்ற கணிதவியலாளர் ஸ்டீபன் வில்லியம் ஹாவ்கிங் பயன்படுத்திய பொருட்கள் லண்டன் நகரத்தில் ஏலத்திற்கு வர இருக்கிறது. அவரின் இளவயதில் பயன்படுத்தப்பட்ட சக்கர நாற்காலி, முனைவர் பட்டத்திற்காக அவர் சமர்ப்பித்த ஆய்வுக்குறிப்பு, தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் அவர் பங்குபெற்ற பகுதிகளின் கையெழுத்துப் படிவம் ஆகியவை ஏலத்தில் விடப்பட இருக்கின்றன. மேலும் அவர் எழுதிய “A Brief History of Time” புத்தகம் அவருடைய கைரேகை உள்ள பதிப்பும் விற்பனைக்கு வர உள்ளது. அதிக விலைக்கு வாங்கப்படப் போகும் பொருள் எது? எனத் தெரிந்துகொள்ள பிரிட்டன் மக்கள் ஆவலாய் உள்ளனர்.

ஹாவ்கிங் என்னும் மேதை
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் முனைவர் படிப்பிற்குச் சேர்ந்த சிறிது காலத்திலேயே Amyotrophic lateral sclerosis (ALS) என்னும் முடக்குவாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். வாழ்க்கையின் 20 களைக் கடக்க முடியாது என மருத்துவர்கள் கைகளை விரித்துவிட்ட நிலையிலும் தன்னுடைய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார் ஹாவ்கிங். பிரபஞ்ச விரிவாக்கம் பற்றிய தனது ஆராய்ச்சியை உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான கேம்பிரிட்ஜில் சமர்ப்பித்தார். அந்த ஆராய்ச்சிக்காக அவருக்கு முனைவர் பட்டம் அளிக்கப்பட்டது. ஆயிரம் கால்களுடன் காலம் பயணித்தது. கருந்துளை, காலப்பயணம் போன்ற புரட்சிகர சிந்தனைகளை வெளியிட்டார். கடந்த மார்ச் மாதம் அவர் இறக்கும் வரை அவருடைய அசாத்திய மூளை பல சிந்தனைகளை உதிர்த்துக்கொண்டே தான் இருந்தது.
வீல் சேர்
1963 – ஆம் ஆண்டு ஹாவ்கிங்கிற்கு அந்நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது அவருக்கு வயது 21 மட்டுமே. இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே அவரால் வாழ முடியும் என மருத்துவப் பரிசோதனைகள் சொல்லின. அப்போது அவரை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி ஒன்று பயன்படுத்தப்பட்டது. அந்த முதல் சக்கர நாற்காலிதான் தற்போது ஏலத்திற்கு வந்திருக்கிறது. இதன் ஆரம்ப விலை 8.44 லட்சம் ஆகும்.

ஆரம்ப காலகட்டத்தில் ஹாவ்கிங் அதனை உபயோகப்படுத்த மறுத்தாலும் பின்னர் சம்மதித்தார். உலகின் பல நாடுகளுக்குச் சென்று அறிவியல் மாநாடுகளில் பேசினார். சக்கர நாற்காலியில் அதிகதூரம் பயணித்தவர் என்ற பெருமையும் ஹாவ்கிங்கையே சேரும்.
பிரபஞ்சத்தின் புதிர்
முழுவதும் தன் கைப்பட எழுதிய Properties of Expanding Universes என்னும் புத்தகத்தின் நகல் ஒன்றும் ஏலத்திற்கு வருகிறது. அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இப்புத்தகத்தை இணையத்தில் படிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்தது. ஒரு நாளைக்குள் அப்புத்தகத்தை 60,000 பேர் தரவிறக்கிக் கொண்டனர். ஏலத்திற்கு வரும் ஹாவ்கிங்கின் பொருட்களிலேயே அதிக விலைக்கு இப்புத்தகம் தான் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாவ்கிங் கையெழுத்து எளிதில் கிடைத்துவிடுமா என்ன? அதன் ஆரம்ப விலை 84.47 லட்சமாம்!!

சிம்சன் என்னும் தொடரில் ஸ்டீபன் ஹாவ்கிங் மொத்தம் 4 காட்சிகளில் பங்கேற்றிருந்தார். அந்த காட்சிகளின் கையெழுத்துப்படிவமும் ஏலத்தில் பங்கேற்கிறது. அதில் பங்கேற்ற பின்னர்தான் குழந்தைகளுக்கும் அவர் அறிமுகமானார் என்கிறார் அவரது மனைவி. அதேபோல் அவர் அணிந்த ஆராய்ச்சி அங்கி ஒன்றும் விற்பனைக்கு வருகிறது.
ஹாவ்கிங்கின் கைரேகை பதித்த A Brief History of Time புத்தகத்தின் பிரதியும் ஏலத்தில் விடப்பட இருக்கிறது. எந்தெந்தப் பொருள் என்னென்ன விலைக்கு வாங்கப்படுகிறது? யார் யார்? அந்த அதிர்ஷ்டசாலிகள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: ‘மனித முயற்சிக்கு எவ்வித எல்லைகளும் இருக்கக்கூடாது’: ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய 16 சிறந்த பொன்மொழிகள்!
நடக்க முடியாமல், பேச முடியாமல் முடங்கி இருந்தும் சாதித்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வரலாறு!