மார்ச் 31, 2018 இன்று, உலகின் பெரும்பகுதி ஒரு அரிய நிகழ்வைக் காண இருக்கிறது. நீல நிலவு, அதாவது “ப்ளூ மூன்” ஆங்கிலத்தில். நிலவு, நீல நிறமாகத் தோன்றும் என்று அர்த்தமல்ல. ஒரே மாதத்தில் இரண்டு முறை பௌர்ணமி (முழு நிலவு) வரும் நிகழ்வே “நீல நிலவு” என்று அழைக்கப் படுகிறது.
பொதுவாக ஒரு முழு நிலவு நமக்குத் தோன்றுவதற்கு 29.5 நாட்களாகும். இன்றைய நிலவு இதே மார்ச் மாதத்தில் 1 ஆம் தேதிக்குப் பிறகு வரும் இந்த வருடத்தின் இரண்டாவது நீல நிலவு. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இடைவெளிகளில் இவ்வாறான நிகழ்வு நடந்தேறும்.
இன்றைக்கு ஏன் சிறப்பு.?
இந்த வருடத்தின் இரண்டாவது நிகழ்வு இது என்பதும், இதற்கு பிறகு 2020ஆம் வருடம் தான் இத்தகைய நிகழ்வு நமக்கு காணக்கிடைக்கும் என்பதும் சிறப்புதானே.! இதற்கு முன் இந்த 2018ம் ஆண்டிலேயே இதே மார்ச் மாதத்தில் 1ஆம் தேதி நீல நிலவைக் கண்டிருப்பீர்கள். அப்பொழுது காணாமல் தவறவிட்டவர்கள் உடனே செல்லுங்கள். கண்டுகளியுங்கள்.
சரி! நிஜமாகவே நிலவு நீலமாக தெரியுமா?
1883ல் ஒருமுறை இந்தோனேசியாவில் உள்ள கிரகட்டோ எரிமலை வெடித்துச் சிதறியதால், அப்போது தூசு மற்றும் சாம்பல் ஆகியவை வானில் பரவியது. வானமோ சிவப்பு நிறமாக மாறியது. இதனால் சூரிய ஒளி பச்சை நிறமாகத் தோன்றி, நிலவு நீல நிறமானது. இது நாசாவின் ஆய்வு அறிக்கை.
மேலும் மெக்சிகோவில் எல் சிகோன் (El Chichon volcano) எரிமலை 1983 ஆம் ஆண்டில் வெடித்த போதும், 1980 ஆம் ஆண்டில் செயிண்ட் ஹெலன்ஸ் (Mt. St. Helens) எரிமலை வெடித்த போதும், 1991 இல் மவுண்ட் பினாட்டூபூ (Mount Pinatubo) எரிமலை வெடித்த போதும், செப்டம்பர் 1953ல் கனடாவின் ஆல்பர்ட்டாவில் வனப்பகுதிகள் பற்றி எரிந்த போதும் மேற்கண்ட நீல நிறமான நிலவைக் கண்டிருந்ததாக கூறப்படுகிறது.