28.5 C
Chennai
Sunday, April 14, 2024

நடக்க முடியாமல், பேச முடியாமல் முடங்கி இருந்தும் சாதித்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வரலாறு!

Date:

ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர். குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல், பேச முடியாமல் முடங்கிய நிலையிலும் அண்டவியல், காலப்பயணம் தொடர்பான பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். கடினமான அறிவியல் கண்டுபிடிப்புகளை மிக எளிமையாக சாதாரண மக்களுக்கு விளங்கும் வகையில் புத்தகங்களாக எழுதியவர்.

Stephen William Hawking
Credit: Science Everywhere

தோற்றம்

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) 1942 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் நகரத்தில் பிராங்க் மற்றும் இஸபெல் ஹாக்கிங் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை மருத்துவமும் தாய் மெய்யியல் துறையிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள்.

அறிவியல் விளக்கங்களை எளிமையாக கூறும்  A Brief History Of TIme புத்தகம்  தமிழ் உட்பட 35 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

கல்வி

ஸ்டீவன் ஹாக்கிங் Byron House பள்ளியில் முதலில் படித்தார். குடும்பத்தின் ஏழ்மை நிலையிலும் படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஹாக்கிங்கின் தந்தை அவரை Westminster School பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டார். ஆனால் அந்தப் பள்ளியில் நடத்திய கல்வி உதவித்தொகைக்கான தேர்வு நாள் அன்று ஹாக்கிங்கிற்கு உடல்  நிலை சரி இல்லாமல் போனதால் அந்த தேர்வை அவரால் எழுத முடியவில்லை. அதனால் St Albans பள்ளியில் அவரது கல்வியை தொடர்ந்தார். முதலில் ஹாக்கிங் படிப்பில் சிறந்து விளங்கவில்லை. ஆனால் பின்பு படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். 1958 ஆம் ஆண்டு அவரது கணித ஆசிரியரின் உதவியோடு நண்பர்களுடன் சேர்ந்து கடிகாரத்தின் பாகங்கள், பழைய தொலைபேசியில் இருந்த சுவிட்ச் போர்டு போன்றவற்றை கொண்டு ஒரு கணினியை உருவாக்கினார். கணிதத்தில் அதிக ஆர்வம் இருந்த போதும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் அப்போது இல்லாததால் இயற்பியல் மற்றும் வேதியியல் படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்தார்.

உடல் நிலை பாதிப்பு

இயற்பியலில் பட்டம் பெற்ற ஹாக்கிங் 1962 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்து அண்டவியல் (Cosmology) படித்தார். ஆனால் தொடர்ந்து உடல் நிலை மோசமானதால் மருத்துவரை சந்தித்த போது ALS எனப்படும் Amyotrophic Lateral Sclerosis என்ற ஒருவித நரம்புத் தசை நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. குணப்படுத்த முடியாத இந்த நோய் மனிதனின் உடலில் உள்ள நியூரான்களை பாதிப்படையச் செய்யும். அதாவது மூளை, தண்டுவடம்  (Spinal Cord) ஆகியவற்றில் தசை இயக்கத்திற்கு உதவும் நரம்புச் செல்களைச் சிதைத்து விடும். ஆனால் மூளையின் அறிவாற்றலைப் பாதிக்காது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. நோயை அறிந்து மிகுந்த மனச் சோர்விற்கு ஆளானார். அவரால் பிறர் உதவியின்றி நடக்க முடியவில்லை. சரியாக பேசவும் முடியவில்லை. இரண்டு வருடம் கூட அவரால் உயிர் வாழ முடியாது என்றனர் மருத்துவர்கள். முதலில் மனம் தளர்ந்தாலும் அண்டவியலில் இருந்த ஆர்வத்தால் அது தொடர்பான ஆராய்ச்சியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். மேலும் செயலிழக்கும் உறுப்புகளுக்கு ஈடான கருவிகளைத் தானே உருவாக்கி, அதை ஈடுசெய்து வந்தார். 1966 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டமும் பெற்றார்.

stephen hawking in wheel chair
Credit: How It Works

முழுவதும் நடக்க முடியாமல் நாற்காலியில் நகர்ந்து செல்லும் நிலைமை வந்த போதும் கூட  இவர் ஆராய்ச்சிகளை விடவில்லை. 1985 ஆம் ஆண்டு அவருக்கு நிமோனியா ஏற்பட்டது. அதன் காரணமாக அவருக்கு செய்யப்பட்ட அறுவைசிகிச்சையால் அவரால் அதன் பிறகு முழுவதும் பேச முடியாமல் போய் விட்டது. ஹாக்கிங் சொல்ல  நினைப்பதை வெளிப்படுத்த அவருக்கென்று பிரத்யேகமாக கணினி ஒன்றை அவரது மாணவர் ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் உதவியால் ஹாக்கிங்கால் எழுதவும், Speech Synthecizer மூலம் பேசவும் முடிந்தது. அதன் பிறகு அதில் செய்த சில மாற்றங்கள் காரணமாக  ஹாக்கிங்கால் கன்னத் தசைகளின் அசைவுகள் மூலம் மின்னியல் குரலில் (Electronic Voice) தெளிவாகப் பேச முடிந்தது. அதன் உதவியோடு புத்தகங்கள் பலவற்றையும் அவர் எழுதியுள்ளார்.

பணிகள்

அந்த கால கட்டத்தில் பிரபஞ்சத்தின் உருவாக்கம் பற்றிய Big bang மற்றும் Steady State கோட்பாடுகள் குறித்த பல சந்தேகங்கள் இருந்தன. இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த ஹாக்கிங் 1965 ஆம் ஆண்டு ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதினார். பின்னர் Gonville and Caius College ல் ஒரு ஆய்வாளராக இணைந்தார்.

டிரினிட்டி கல்லூரியில் 1977 ஆம் ஆண்டு ஈர்ப்பு இயற்பியல் (Gravitational Physics) பேராசிரியராகவும், 1979 ஆம் ஆண்டு லுகாஸியன் கணிதப் பேராசிரியராகவும் (Lucasian Professor of Mathematics) பணியில் சேர்ந்தார்.

அவர் எழுதிய A Brief History Of Time அவருடைய பிரபலமான புத்தகங்களில் ஒன்று. அறிவியல் விளக்கங்களை எளிமையாக கூறும் அந்தப் புத்தகம் தமிழ் உட்பட 35 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் அண்டம் பெருவெடிப்பு, கருந்துளை (black hole) ஆகியவற்றை பற்றி கூறியுள்ளார். மேலும் கருந்துளைக்கும் (balck hole) வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகள் இவர் கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை.

Stephen Hawking black hole
Credit: Medium

ஆராய்ச்சிகள்

  • ஒளி கருந்துளைக்கு அருகே செல்ல முடியாது. ஏனெனில் ஒளியை அவை விழுங்கி விடும் என்றும் கருந்துளை வெளியேற்றும் வெப்பத்தால் கதிர்வீச்சு உருவாகிறது என்றும் நிரூபித்துக் காட்டினார்.
  •  பெரு வெடிப்புக்குப் (Big Bang) பிறகு ஒரு பில்லியன் டன் கனமான, புரோட்டான் அளவு வடிவில் மிகச் சிறிய பல அண்டங்கள், தோன்றியிருக்க  வேண்டும் என்று கூறினார். அவற்றை மினிக் கருந்துளைகள் (Mini Black Holes) என்றார்.
  • விண்வெளி, காலம் இரண்டும் வரையரை கொண்டவை. ஆனால் அவற்றுக்கு எல்லையோ, விளிம்போ இருக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.
  • கருந்துளையினுள் ஒளி உட்பட எதுவுமே வெளியேற முடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துகள்கள் (Particles) வெளியேறுகின்றன என்றும், அதன் மூலம் காலப்போக்கில் அவை இல்லாமல் போய்விடுகின்றன என்றும் கூறினார்.

திருமண வாழ்க்கை

1965 ஆம் ஆண்டு Jane Wilde என்பவரை திருமணம் செய்து கொண்டார். 30 வருடங்கள் இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர், தன்னை கவனித்துக்கொண்ட செவிலியர் எலைனை திருமணம் செய்து கொண்டார். ஹாக்கிங்கிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

Stephen Hawking Space Experience
Credit: The Next Web

விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட ஹாக்கிங் Zero Gravity Corporation என்ற நிறுவனம்  உருவாக்கிய, ஈர்ப்புவிசை இல்லாத விண்வெளியில் இருப்பது போன்ற அனுபவம் தரும் விமானத்தில் சென்று வந்தார்.

மறைவு

தனது 21 ஆம் வயதிலிருந்து நோயுடன் போராடினாலும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்த  ஸ்டீவன் ஹாக்கிங் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி அவருடைய 76 ஆம் வயதில் காலமானார்.

சிறப்புகள்

ஹாக்கிங் அவருடைய 32 ஆம் வயதிலேயே  FRS (Fellow of Royal Society) பட்டம் பெற்றார். மேலும் பன்னிரண்டு கவுரவ பட்டங்களையும் பெற்றுள்ளார். 1989 ஆம் ஆண்டு Champian of Honour ஆக நியமிக்கப்பட்டு, அமெரிக்காவின் தேசிய  விஞ்ஞானப் பேரவையில் (National Academy of Sciences) உறுப்பினரும் ஆனார். 2006 ஆம் ஆண்டு கொப்லே (Copley) பதக்கத்தையும், 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவின் Presidental Medal Of Freedom  என்ற விருதையும் பெற்றுள்ளார்.

Also Read: கண்ணீர் புகை குண்டு என்றால் என்ன? எப்படி வேலை செய்யும் தெரியுமா? முழு அறிவியல்…

ஒரு வருடம் கூட பள்ளி செல்லாத போதும், மின்னலில் மின்சாரம் உள்ளது என்ற அறிவியல்…

கடலில் தவிக்கும் மீனவர்களுக்கு உதவும் அறிவியல் நண்பன் ட்ரான்ஸ்பாண்டர் – எப்படி இயங்குகிறது?

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!