கருந்துளை. விண்வெளி ஆராய்ச்சியில் பல புதிர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சுவாரஸ்யமான பகுதி. இதுகுறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு பல அபூர்வ தகவல்களை கருந்துளையிலிருந்து வெளிக்கொண்டுவந்த ஸ்டீபன் ஹாக்கின்ஸைப் பாராட்டி இங்கிலாந்து அரசு புதிய 50 பென்ஸ் மதிப்புள்ள நாணயம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. பார்க்க கருந்துளையைப் போன்றே இருக்கும் இந்த நாணயத்தின் மேற்பகுதியில் ஸ்டீபனின் புகழ்மிக்க சூத்திரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

கருந்துளை
நட்சத்திரத்தின் ஆயுட்காலம் முடிவந்தவுடன் கருந்துளைகள் உருவாகின்றன. பரப்பில் இவை சிறியவையாக இருந்தாலும் நம்ப முடியாத அளவுக்கு ஈர்ப்பு விசையைக் கொண்டிருக்கும். இதன் உள்ளே நுழையும் எந்தபொருளையும் கபளீகரம் செய்துவிடும் வலிமை இதற்கு உண்டு.
பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் நேரம் என்னும் கோட்பாட்டை துளியும் மதிக்காத “மகாகணம்” பொருந்திய இந்த கருந்துளையை மையமாகக் கொண்டு பல ஆய்வுகளை மேற்கொண்டவர் ஹாக்கின்ஸ்.
வெப்ப இயக்கவியலின்படி, ஒரு அமைப்பிற்கு (System) கொடுக்கப்படும் ஆற்றலுக்கும் (q) அதன் வெப்பநிலைக்கும் (T) உள்ள விகிதமே (q/T) என்ட்ரோபி ஆகும்.
நாணயம்
புதிதாக வெளிவந்துள்ள இந்த நாணயத்தில் ஹாக்கின்ஸின் புகழ்பெற்ற Bekenstein–Hawking சமன்பாடு இடம்பெற்றுள்ளது. சக ஆராய்ச்சியாளரான பேக்கேன்ஸ்டென் உடன் இணைந்து கருந்துளையின் என்ட்ரோபி குறித்து ஆராய்ந்து புது சமன்பாட்டினை உருவாக்கினார் ஹாக்கின்ஸ். அதுவே Bekenstein–Hawking சமன்பாடு ஆகும். அதன்படி, கருந்துளைக்குள் நுழையும் பொருளின் என்ட்ரோபியானது அதிகரிக்கும் என நிரூபித்தார் ஹாக்கின்ஸ். அதேபோல் கருந்துளைக்குள் உட்புகுந்த பொருளில் இருந்து ரேடியேஷன் வெளிப்படும். இதனை ஹாக்கின்ஸ் ரேடியேஷன் என்கிறார்கள். விண்வெளி ஆராய்ச்சியில் இந்த சமன்பாடு ஒரு மைல்கல் ஆகும்.
இந்த சமன்பாட்டினை S=(k*A*c^3)/(4*hbar*G) என்று குறிப்பிடுகிறார்கள். நாணயத்திலும் இது இடம்பெற்றிருக்கிறது. இதில் S – என்பது என்ட்ரோபி; k – போல்ட்ஸ்மேன் மாறிலி ; A – கருந்துளையின் பரப்பளவு ; c – ஒளியின் வேகம்; hbar – பிளாங்க்ஸ் மாறிலி ; G – புவியீர்ப்பு விசை.
என்ட்ரோபி-னா என்னப்பா?
வெப்ப இயக்கவியலின்படி, ஒரு அமைப்பிற்கு (System) கொடுக்கப்படும் ஆற்றலுக்கும் (q) அதன் வெப்பநிலைக்கும் (T) உள்ள விகிதமே (q/T) என்ட்ரோபி ஆகும்.
எளிமையாகச் சொன்னால், ஒரு அமைப்பின் ஒழுங்கற்ற முறையைப்பற்றி கூறுவது. லேசாக தலை வலிக்கிறதா? இருங்கள். ஒரு எடுத்துக்காட்டு சொன்னால் புரிந்துவிடும். இன்று நீங்கள் உங்களது அறையினைத் சுத்தம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். புத்தகங்களெல்லாம் ஒருபுறத்தில் அடுக்கி, ஆடைகளை மடிப்புக்கலையாமல் செல்ஃபில் வைக்கிறீர்கள். அடுத்த மாதம் இதேநாள் உங்களது அறை எப்படி இருக்கும்? நிச்சயம் சுத்தம் செய்த அன்று இருந்ததுபோல் இருக்காது. கால்வைக்க இடமில்லாத அளவிற்கு குப்பைகள் பெருகிவிடும். இதுதான் என்ட்ரோபி. இயல்பில் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களும் ஒழுங்கான (தூய்மையான அறை) நிலையிலிருந்து ஒழுங்கற்ற நிலைக்கு மாறிக்கொண்டேயிருக்கும் (குப்பையான அறை).
விற்பனை
ஹாக்கின்சின் சிறப்பு நாணயத்தைப்பெற ராயல் மின்ட் இணையதளத்தில் ( Royal Mint’s website) விண்ணப்பிக்கலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒரு நாணயத்திற்கு 1௦ யூரோக்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதே நாணயத்தை தங்கத்திலும் அந்நாட்டு அரசு வெளியிட முடிவெடுத்திருக்கிறது. அதற்கான விலை 795 யூரோக்கள் ஆகும். கோடைக்காலத்திற்குப் பிறகு ஹாக்கின்சின் உருவம் கொண்ட பணத்தாள்களை அச்சிட இருப்பதாக இங்கிலாந்து தெரிவித்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்து மக்கள் பலரின் பைகளிலும் ஹாக்கின்ஸ் பயணிக்க இருக்கிறார்.
Also Read: நடக்க முடியாமல், பேச முடியாமல் முடங்கி இருந்தும் சாதித்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வரலாறு!