சீனா செயற்கையாக தயாரித்திருக்கும் நிலவு! – எதற்காக தெரியுமா?

0
288

இவ்வளவு பெரிய நகரத்திற்கு தெரு விளக்குகள் போட்டு அதைப் பாதுகாத்து, பராமரிப்பு செய்து எவ்வளவு வேலை? என்று யோசித்திருப்பார்கள்  போல. ஒரே விளக்கு ஊரெங்கும் வெளிச்சம் என்று புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் சீன விஞ்ஞானிகள். அது தான் செயற்கை நிலவு.

Credit : Digital Journal

செயற்கை நிலவு

என்ன தான் நிலவின் ஒளி குளுமையாக இருந்தாலும், நகரமெங்கும் பளிச்சென வெளிச்சம் கொடுக்க நிலவின் ஒளி போதுமானதாக இருப்பதில்லை. அதனால் போதுமான வெளிச்சம் கொடுக்கும் புதிய செயற்கை நிலவொன்றை சீனாவின் செங்டு நகரத்திற்குப் பரிசளிக்க இருக்கிறார்கள் சீன விஞ்ஞானிகள். 2020 – ஆம் ஆண்டு செங்டு (Chengdu) நகரத்தில் இந்த செயற்கை நிலவு பொருத்தப்படும் என்று சென்ற வாரம் அறிவிப்பு வெளியானது. இது அந்த நகரத்தின் தெரு விளக்குகளுக்கு மாற்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நிலவு என்பது வெளிச்சம் தரும் செயற்கைகோள் ஆகும். உண்மையான நிலவை விட 8 மடங்கு வெளிச்சமானதாம் இந்தப் போலி நிலவு. 50 மைல் விட்டத்திற்குப் பளபளப்பான வெளிச்சத்தைக் கொடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Credit : News Mobile

ரஷ்யாவின் விண் கண்ணாடி

இந்த இரண்டாம் நிலவின் ஒளியால் விண்ணைக் கண்காணிப்பதில் இடையூறு ஏற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள விஞ்ஞானிகள், இதன் ஒளி கிட்டத்தட்ட ஒரு வெளிச்சமான மாலை நேரத்தைப் போலத் தான் இருக்கும். இதனால் மனிதர்களுக்கோ, ஆய்வுகளுக்கோ எந்த இடையூறும், பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தத் திட்டத்திற்கு சீன அரசாங்கமோ அல்லது நகர நிர்வாகமோ துணை நின்றதா என்பது தெரியவில்லை. ஆனால், சீனா 2015 முதல் விண்வெளித் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. மேலும், 2017 – இல் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக வரும் வருடங்களில்  செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.

இந்த இரண்டாம் நிலவு கதை ஒரு அறிவியல் புனைவு போல உள்ளதல்லவா? இது போன்ற முயற்சிகள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன. 1993 – இல் ரஷ்யா ‘விண் கண்ணாடி‘ (Space Mirror) என்றொரு வெளிச்சமான செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. ஆனால், அது பகலின் நீளத்தைக் கூட்டுவதற்காக ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.