சந்திரனில் விண்கலத்தைத் தரையிறக்கப் போவது யார்? – இஸ்ரேலுடன் போட்டியிடும் இஸ்ரோ

0
478

சந்திராயன்-1 வெற்றியைத் தொடர்ந்து இந்தியா சார்பில், விரைவில் சந்திரனுக்கு அனுப்ப இருக்கும் சந்திராயன்-2 விண்கலத்தின் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. விரைவில் சந்திரனுக்கு, சந்திராயன்-2 விண்கலன் அனுப்பட இருக்கின்றது. இந்நிலையில் தற்போது உலக சாதனைக்காக இஸ்ரேலுடன் இஸ்ரோ தீவிரமாக போட்டி போட்டு  வருகின்றது.

சந்திராயன்-1

இஸ்ரோ (ISRO) சார்பில், சந்திராயன் 1- என்ற விண்கலம் கடந்த 2008 – ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், அந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. சந்திராயன்-1 விண்கலம் நிலவை சுற்றி மட்டுமே வந்தது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே தங்களின் விண்கலத்தை நிலவில் இறக்கியுள்ளன. இருந்தாலும், இந்தியாவின் சந்திராயன் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

அறிந்து தெளிக !!
முதன்முதலில் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்று உலகிற்குச் சொன்னது சந்திராயன் 1. நாசாவும் இதை ஆய்வு செய்து உறுதிப்படுத்தி உள்ளது.

சந்திராயன்-2

சந்திராயன்-2 திட்டத்தில் நிலவில் செயற்கைக்கோளை இறக்கி ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக ஏப்ரல் 23 – ஆம் தேதி சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களுக்குகாக சந்திராயன் – 2 ஏவுதல் பலமுறை தள்ளி வைக்கப்பட்டது.

சந்திராயன் – 2 ஒத்தி வைக்கப்பட  காரணம்

போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதலுக்கு துணைபுரியும், IRNSS – 1H  செயற்கைக்கோள் ஏவப்பட்ட போது, வெப்ப தகடுகளில் ஏற்பட்ட கோளாறால் ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோளை நிலை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

GSAT -6 செயற்கைக் கோள் விண்ணிற்கு ஏவப்பட்டதும் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அதன் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த செயற்கைக் கோளை நிலை நிறுத்துவதிலும், தகவல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது இந்தப் பணிகளும் அதிவேகமாக சீர் செய்யப்படுவதாக இஸ்ரோ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்ஜின் சோதனை வெற்றி

தற்போது இஸ்ரோ சார்பில் சந்திராயன் – 2 ஏவுதலுக்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சந்திராயன்-2 விண்கலனை ஏவப் பயன்படும் கிரையேஜெனிக் இன்ஜின் (CE-20) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.சந்திராயன்-2 விண்கலன் வரும் டிசம்பர் மாதம் ஏவப்பட இருக்கின்றது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இஸ்ரேலும் சந்திரனில் விண்கலனை இறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று நாடுகள் சந்திரனில் விண்கலன்களைத் தரையிறக்கி உள்ளன. இந்த பட்டியலில் 4 – வதாக இடம் பிடிப்பது யார் என்று இந்திய இஸ்ரோவுக்கும், இஸ்ரேல் நாட்டிற்கும்  கடும் போட்டி நிலவுகின்றது. இதில் எந்த நாடு முந்திக் கொண்டு விண்ணில் வெற்றிகரமாக விண்கலனைத் தரையிறக்கப் போகின்றது என்று தெரியவில்லை. இதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.