நாம் ஏதேனும் புதுப் பொருட்கள் வாங்கினால் அதனுடன் ஒரு சிறிய பாக்கெட் கொடுக்கப்பட்டிருப்பதை கவனித்திருப்போம். பலருக்கு அது ஏன் கொடுக்கப்பட்டது என்பதே தெரியாததால் அதை குப்பையில் போட்டு விடுகின்றனர். அதனுள் என்ன இருக்கிறது என்று தெரியுமா? அதன் பயன்கள் தெரிந்தால் நிச்சயம் அதை தூக்கி எறியமாட்டீர்கள்!
சிலிக்கா ஜெல் எனப்படும் சிறிய பாக்கெட்டின் உள்ளே இருப்பது சிலிக்கா பந்துகள். சிலிக்கா ஜெல் என்பது சோடியம் சிலிகேட்டில் இருந்து செயற்கை முறையில் தயாரிக்கப்படும் சிலிக்கன் டை ஆக்சைடு. நீர்ம கரைசலாக இருக்கும் சோடியம் சிலிகேட் அமிலமாக்கப்பட்டு பின்பு நீர் வெளியற்றப்பட்டு நிறமற்ற சிலிக்கா ஜெல்கள் தயாரிக்கப்படுகின்றன. வழக்கமாக சிலிக்கா ஜொரோஜல் என்று அழைக்கப்படும் இவற்றில் பல வகைகளும் உள்ளன.

Credit: Wikipedia
இவை காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி பொருட்களின் தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ளும். அதாவது சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகள் ஈரப்பதத்தை உறிஞ்சி பொருட்கள் உலர்வாக இருக்க உதவுகின்றன.
இதனால் தான் பல தயாரிப்பாளர்கள் இந்த சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை நாம் வாங்கும் பொருட்களுடன் சேர்த்து தருவார்கள். அதனால் ஈரப்பதம் என்னும் பிரச்சனை உள்ள இடங்களில் எல்லாம் அவற்றை பயன்படுத்தலாம். சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பார்ப்போம்.
செல்போன்கள்
செல்போன்கள் தண்ணீரில் விழுந்து விட்டால் ஒரு ஜிப்லாக் பை முழுவதும் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு செல்போனையும் அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு அதில் போட்டு வைக்கவேண்டும். சில நாட்களுக்கு அப்படியே விட்டு வைத்தால் செல்போனில் உள்ள நீரை சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகள் முழுவதுமாக உறிஞ்சிவிடும். செல்போனும் வேலை செய்யும். இதே போல நீரில் விழுந்த ஹெட் போன்களுக்கும் கூட செய்யலாம்.
ஆவணங்கள்
முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், சான்றிதழ்கள் போன்றவை செல்லரித்து விடாமல் அப்படியே பாதுகாக்க இந்த சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை எடுத்து இந்த ஆவணங்களை வைத்திருக்கும் பையிலோ, பெட்டியிலோ போட்டு வைத்திருங்கள். ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும்.
அதே போல் போட்டோக்களை காற்றின் ஈரப்பத்தில் இருந்து வீணாகிவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்றாலும் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை அவற்றுடன் போட்டு வைத்திருங்கள்.

Credit: Allcreated
கூர்மையான சாதனங்கள்
நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, கட்டிங் பிளையர், பிளேடுகள் போன்றவை ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும். அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், இவை எல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கா ஜெல் பாக்கெட்டுக்களையும் போட்டு வையுங்கள். இது போன்ற பொருட்கள் துரு பிடிக்காமல் இருக்கவும் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுக்கள் உதவுகின்றன.
துர்நாற்றம்
என்னதான் துவைத்து பயன்படுத்தினாலும் ஷூக்கள், சாக்ஸ்களில் வாங்கிய கொஞ்ச காலங்களிலேயே துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிடும். ஷூக்கள், செருப்புகள் வைக்கும் இடங்களில் இந்த சிலிக்கா ஜெல்லைப் போட்டு வைத்திருந்தால் துர்நாற்றம் வீசாது. அதே போல் ஷூக்களில் ஈரம் இருந்தால் அந்த ஈரத்தை உலர்த்த ஷூக்களில் இந்த பாக்கெட்டுகளை போட்டு வைக்கலாம்.
ஸ்வெட்டர் போன்ற எப்போதாவது உபயோகப்படுத்தும் துணிகளை பாதுகாக்கவும் அவற்றுடன் இந்த பாக்கெட்டுகளை போட்டு வைக்கலாம்.
எப்போதாவது பயன்படுத்துகிற பொருட்கள், உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட பொருள்கள், விளையாட்டுப் பொருட்கள் போட்டு வைக்கும் கவர்கள் ஆகியவற்றில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் வீசும். அப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்க இந்த சிலிக்கா ஜெல் பாக்கெட்டுக்களை அதற்குள் போட்டு வையுங்கள். துர்நாற்றமும் வீசாது. பொருட்களும் பாதுகாப்பாக இருக்கும்.
நகைகள்
நாம் வைத்திருக்கும் நகைகளை எப்போதாவது தான் பயன்படுத்துவோம். அவற்றை அப்படியே பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்போம். அது நாளடைவில் மங்கிவிடும். இதனைத் தவிர்க்க நகைப் பெட்டிக்குள் சில சிலிக்கா ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகை அதே பளபளப்புடன் இருக்கும். இதே போல் வெள்ளி பொருட்களின் நிறம் மாறாமல் இருக்கவும் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுக்களைப் பயன்படுத்தலாம்.
விசேஷ நாட்களில் மட்டும் பயன்படுத்தும் அலங்காரங்கள், தோரணங்கள் போன்றவற்றை சேமிக்கும் போது அதனுடன் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைக்கவேண்டும். இப்படி செய்தால் அவை நிறம் மங்காமல் புதியது போலவே இருக்கும்.

Credit: dhgate
மறுபயன்பாடு
சிலிக்கா ஜெல்லை மீண்டும் மீண்டும் கூட உபயோகப்படுத்தலாம். சிலிக்கா ஜெல் பாக்கெட்டில் அதிக ஈரப்பதம் சேர்ந்தவுடன் ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு 120 °C (250 °F) அளவு வெப்பப்படுத்தி ஜிப்லாக் பைகளில் சேமித்து வைத்து மீண்டும் உபயோகிக்கலாம்.
நச்சுத்தன்மை
பொதுவாக தூய சிலிக்கா ஜெல் என்பது நச்சுத்தன்மை அற்றது அல்லது மிகவும் குறைவான நச்சு தன்மை உடையது தான். சில சமயங்களில் ஈரப்பதத்தை விரைவாக கண்டறிய இவற்றுடன் சில ரசாயனங்கள் சேர்க்கப்படும் போது அவற்றின் நிறம் மாறி நச்சுத்தன்மையும் அதிகரிக்கும். ஒருவேளை இதனை யாரவது உட்கொண்டுவிட்டால், உட்கொண்ட அளவிற்கேற்ப உடல் பாதிப்புகள் மோசமாக இருக்கும்.
அதனால் ஒருபோதும் இதை அதனுடைய பாக்கெட்டுகளில் இருந்து பிரித்து வெளியே எடுத்துப் பயன்படுத்திவிடக் கூடாது. பாக்கெட்டுகளை அப்படியே தான் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளிடமும், சிறுவர்களிடமும் கொடுக்கவே கூடாது.