பசுமை இல்ல வாயு உமிழ்வைக் (Green House Effect) கட்டுப்படுத்துவதற்கு, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் உலகக் கடல் மட்டம் நிச்சயம் 2100 – ஆம் ஆண்டில் எட்டு அடிக்கு உயரும் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அது மட்டுமில்லாமல் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்தத் தவறும் பட்சத்தில், 2300 – ஆம் ஆண்டில் நிச்சயம் 50 அடிக்குக் கடல் மட்டம் உயர்ந்து, கடலோர நாடுகள் கடலுக்குள் மூழ்கி அழியும் நிலை உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை
இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் மற்றும் வளங்களின் வருடாந்த விமர்சனம் நிகழ்ச்சியில் இந்த அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, 2100 – ஆம் ஆண்டில் நிச்சயம் பெரும் ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட கடல் மட்ட உயர்வின் அளவை வைத்து, கணக்கிட்டுப் பார்த்த போது, உலக மக்களின் எதிர்கால நிலை பேராபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்து நிச்சயம் கடல் மட்ட உயர்வினால் தான் நிகழப் போகிறது என்று பூமி, பெருங்கடல், மற்றும் வளிமண்டலவியல் அறிவியல் ஆராய்ச்சி மண்டலத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பசுமை இல்ல வாயு உமிழ்வு
உலகம் முழுவதும் 634 மில்லியன் மக்கள் கடலில் இருந்து 10 அடி உயரத்தில் வசிக்கின்றனர். உலக மக்கள் தொகையில் 11% பேர், கடல் மட்டத்திலிருந்து 33 அடிக்கும் குறைவான உயரத்தில் வசிக்கின்றனர். இதன் பொருள் இவர்களுக்குச் சிறிய கடல் மாற்றம் கூட பெரும் ஆபத்தை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கை நிலையைப் பாதிப்படைய செய்யும் என்பதே உண்மை.

இருப்பினும், பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் குறைவாக இருந்தால் விளைவுகளும் பாதிப்புகளும் குறைவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். தற்போது வரை கணக்கிடப்பட்ட மிதமான உமிழ்வு மதிப்பீட்டை வைத்துப் பார்த்தால் 2100 – ஆம் ஆண்டில் கடல் மட்டம் 1.4 முதல் 2.8 அடி வரை உயரும் என்று தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து 2150 – ஆம் ஆண்டில் 2.8 முதல் 5.4 அடி வரை கடல் மட்டம் உயர்ந்து உலகில் பாதி நாடுகள் கடலுக்குள் மூழ்கி அழிந்துவிடும் என்ற அதிர்ச்சித் தகவலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். கடலோரப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தின் தாக்குதலால் ஏற்பட இருக்கும் அழிவுகளைச் சமாளிக்க நாம் தயாராக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.