அமெரிக்காவில் இருக்கிறது மொஜாவே (Mojave) பாலைவனம். சென்ற வார சனிக்கிழமை இங்குதான் உலகின் மிகப்பெரிய விமானத்தினை ஸ்ட்ராடோலாஞ் (Stratolaunch) நிறுவனம் முதன்முதலில் பறக்கவிட்டது. ராக்கெட் ஏவுதலை மேற்கொள்ளும் வகையில் இந்த விமானமானது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ராக்கெட்டையா என்கிறீர்களா? ஆமாம்.

பிரம்மாண்டம்
இந்த விமானத்தில் 385 அடி நீள இறக்கைகள் இருக்கின்றன. இதன் உடற் பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் ஆறு இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. சோதனையின்போது மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிய இந்த விமானம் அதிகபட்சமாக 15,000 அடி உயரத்தில் பறந்த பின்னர் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
ராக்கெட் ஏவுதல்
கடந்த 2011 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் துணை நிறுவனர் பால் ஆலனால் துவங்கப்பட்டதுதான் Stratolaunch நிறுவனம். இதன் முதன்மை நோக்கமே ராக்கெட்டை சுமந்து சென்று குறிப்பிட்ட உயரத்தில் இருந்து அதனை ஏவுவதுதான். அதாவது செயற்கைக்கோள்கள் அடங்கிய ராக்கெட்டை இந்த விமானம் பூமியிலிருந்து 35,000 அடி உயரத்துக்கு தூக்கிச் செல்லும். அதன் பின்னர் அங்கிருந்து ராக்கெட் விண்வெளியை நோக்கிக் கிளம்பும்.

தரைப்பகுதியில்இருந்து ஏவுவதைக் காட்டிலும் 35,000 அடிஉயரத்தில் உள்ள ஸ்ட்ராட்டோஸ்பியர் வான்வெளி அடுக்கில் இருந்து ஏவுவதினால் எரிபொருள் தேவையைக் கணிசமாக குறைக்கலாம். வரும் 2022 ஆம் ஆண்டிலிருந்து இந்த சேவை பயன்பாட்டிற்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் மிஷன்
அமெரிக்காவின் பிரபல நிறுவனமான நார்த்ட்ராப் க்ரம்மன் (Northrop Grumman) விண்வெளி ஆராய்ச்சி, அமெரிக்க அரசுக்கான ஆயுத பரிமாற்றம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இயங்குகிறது. அந்த நிறுவனம் தயாரித்திருக்கும் பெகாசஸ் எக்ஸ்.எல் (Pegasus XL) எனப்படும் ராக்கெட்டை Stratolaunch நிறுவனத்தின் உதவியோடு ஏவ இருக்கிறது.
