Home அறிவியல் ஆராய்ச்சிகள் சேவல் என்னும் உயிரினமே இனி இருக்காது – அதிர வைக்கும் தொழில்நுட்பம்

சேவல் என்னும் உயிரினமே இனி இருக்காது – அதிர வைக்கும் தொழில்நுட்பம்

male hen
Credit: Owlcation

கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் பொதுவாக இரண்டு விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று முட்டை; மற்றொன்று அதன் இறைச்சி. இந்த இரண்டையுமே சேவலால் தர முடியாது என்பதால் வருடந்தோறும் கோடிக்கணக்கான சேவல் குஞ்சுகள் பிறந்த சில நாட்களிலேயே கொன்றுவிடுகிறார்கள். இதனைத் தடுக்க ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று புதுத் திட்டத்தை கண்டுபிடித்திருக்கிறது. முட்டைகளுக்கான பகுப்பாய்வு தான் அது!!

அறிந்து தெளிக!!
உலகம் முழுவதும் வருடத்திற்கு சுமார் 400 – 600 கோடி சேவல் குஞ்சுகள் பிறந்த உடனே கொல்லப்படுகின்றன. சேவலாக இருப்பின், பிறந்து சில மணி நேரத்திலேயே பெரிய இயந்திரங்களுக்குள் உயிருடன் அனுப்பப்பட்டு துண்டு துண்டாக ஆகின்றன. சில நாடுகளில் விலங்குகளுக்கான தீவனத்துடன் இந்த நொறுக்கப்பட்ட சேவல் குஞ்சுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையான சேவல் குஞ்சுகள் பண்ணைகளிலேயே கொல்லப்பட்டு விடுகின்றன.

இப்படி செலவினங்கள் அதிகரிக்ககூடிய “கொலைகளைத்” தவிர்ப்பதற்காகத்தான் Seleggt என்னும் நிறுவனம் ஒரு முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Chicken
Credit: Mother Earth News

Seleggt

பொதுவாக கருவில் இருப்பது சேவலா அல்லது கோழியா என்பது Incubation Period எனப்படும் செயற்கை குஞ்சுபொரிக்கும் காலத்தின் ஒன்பதாவது நாளில் தெரியும். முட்டை முழுவதுமாக வளர்ந்து குஞ்சுபொரிக்க 21 நாட்கள் தேவைப்படும். இதில் சேவல் கருவுள்ள முட்டைகளைக் கண்டுபிடித்து தனியாகப் பிரிப்பதே இந்தத் தொழில்நுட்பத்தின் நோக்கம் ஆகும். இதற்கென பிரத்யேக கருவிகள் இஸ்ரேல் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆய்வின் துல்லியத்தன்மை 98.5 % என நிரூபிக்கப்பட்டுள்ளது.

எப்படி செயல்படுகிறது?

முட்டை வளர்ச்சியின் ஒன்பதாவது நாளில் கருவினை சேதப்படுத்தாமல் லேசர் மூலம் முட்டையின் மேற்பரப்பில் துளை ஒன்று இடப்படும். 0.33 மி.மீ அளவுள்ள இந்தத் துளைமூலமாக முட்டையின் உள்ள இருக்கும் திரவமானது உறிஞ்சி எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படும். இதன் முடிவுகள் வெளிப்படும் நிறத்தைப் பொறுத்து மாறுபடும். அதாவது வேதிவினைகளின் முடிவில் நீல நிறம் வந்தால் கருவில் இருப்பது சேவல், மற்றும் வெள்ளை நிறம் வந்தால் கோழி ஆகும். இந்த ஆய்வின் துல்லியத்தன்மை 98.5 % என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு முட்டையினை பகுப்பாய்வு செய்ய சில வினாடிகளே ஆகும் என்பதால் எதிர்பார்த்த நேரத்திற்குள் சோதனையை முடித்து விடலாம்.

புது உக்தி

மனிதர்களுக்கு செய்யப்படும் கருச்சோதனையைப் போலவே தான் முட்டைகளுக்கும் செய்யப்படுகின்றன. இதில் கருவில் இருப்பது சேவலாக இருக்கும் பட்சத்தில் அவற்றை குஞ்சுபொரிக்கும் கலத்திலிருந்து பிரித்தெடுத்து விற்பனைக்கு அனுப்பிவிடுவார்கள். கருவில் கோழியின் கருவினைக் கொண்டிருக்கும் முட்டைகள் மட்டுமே குஞ்சுபொரிக்க அனுமதிக்கப்படும்.

இது பற்றிய காணொளியை இங்கே காணலாம்.

இப்படி விற்பனைக்கு வரும் முட்டைகளே No Kill Eggs எனப்படுகிறது. ஜெர்மனியின் பெர்லின் நகர அங்காடிகளில் தற்போது இந்த வகை முட்டைகள் விற்பனைக்கு வந்துவிட்டன. இன்னும் சில மாதங்களில் ஐரோப்பா முழுவதும் இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட இருக்கிறது.

no kill eggs
Credit: The Guardian

என்ன பயன்?

சேவல் கருவுள்ள முட்டைகளைப் பாதுகாத்து, அவை பொறித்து வெளிவந்த பின்னர் அவற்றைக் கொல்வதற்குப் பதிலாக அந்த முட்டைகளை விற்பனை செய்துவிடலாம். இதனால் செலவினங்கள் குறைவதோடு கால விரயமும் தவிர்க்கப்படுகிறது. மேலும் பிறந்த, ஒருநாளே வயதான சேவல்களைக் கொள்வது பல உளவியல் சிக்கல்களை மனிதர்களிடத்தே ஏற்படுத்துகின்றன. இதனை எதிர்த்து பல சமூக ஆர்வலர்கள் குரல்கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் சரி, கருவில் இருக்கும் போது அதன் பாலினத்தை தொழில்ரீதியாக கண்டறிவது இயற்கை விதிமீறல் இல்லையா? போன்ற கேள்விகளும் பலரால் எழுப்படுகின்றன. ஆனால் இந்த வர்த்தகத்தை மேற்கொள்பவர்கள் சொல்வது இதைத்தான்.” சேவல்களை கொல்வதற்குப் பதில் அவற்றை முட்டையாகவே விற்றுவிடுவது சிறந்தது. இதனால் முட்டையின் தேவையும் தீரும்.” முட்டைகளைக் கைவிடுவதும் பெரும் நஷ்டத்தை நிறுவனத்திற்கு விளைவிக்கும். மேலும் இதனால் உணவுச்சங்கிலியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, பால் உற்பத்திக்காக கிடேரி கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்யும் தொழில்நுட்பம் பற்றி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக (ஒரத்தநாடு), விலங்கின மரபணுவியல் மற்றும் இன விருத்தியல் துறை உதவி பேராசிரியர் Dr. K. ஜெகதீசன், Ph.D அவர்கள் எழுதி நமது தளத்தில் மூன்று பகுதிகளாக வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

error: Content is DMCA copyright protected!