கேட்கும் திறன் என்பது பார்வை உள்ளவர்களை விட பார்வை இல்லாதவர்களுக்கு மிகவும் அதிகம் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அது உண்மை தான். எந்த ஒரு ஒலியையும் பார்வை உள்ளவர்களை விட மிக துல்லியமாக கேட்க அவர்களால் முடியும். சரி. அது எப்படி அவர்களால் முடிகிறது? உண்மையில் இதற்கு சில மூளை சார்ந்த நரம்பியல் காரணங்கள் உள்ளன. பிறப்பிலேயே அல்லது இளம் வயதிலேயே பார்வை இழந்தவர்களிடம் இருக்கும் இந்த திறனின் உண்மையான நரம்பியல் அடிப்படை காரணத்தை வாஷிங்டன் பல்கலை கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
Credit: locksmith of hearts
இந்த ஆய்வில் ஒலியை கேட்கும் போது மூளையின் எந்த பகுதி செயல்படுகிறது என்று ஆராயாமல், ஒலியை கேட்கும் போது ஏற்படும் மூளையின் உணர்திறனை ஆராய்ந்துள்ளனர். ஒலியை நியூரான்கள் எவ்வளவு வேகமாக கிரகிக்கின்றன என்பதை அளவிட முடியாது என்றாலும், எவ்வளவு துல்லியமாக அந்த ஒலி பற்றிய தகவல்களை அவை குறிப்பிட்டு காட்டுகின்றன என ஆராய முடியும் என்கின்றனர் இந்த ஆராய்ச்சியாளர்கள்.
மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் அதிர்வெண்களை டியூன் செய்யும் உணர்வும், அதிர்வெண்களை சிறப்பாக குறிப்பிட்டு காட்டும் திறனும் பார்வை இல்லாதவர்களின் மூளைக்கு மிக அதிகம்!!
ஆய்வு
இதற்காக இந்த குழுவைச் இருந்த வல்லுநர்கள், மூளையின் கேட்கும் திறன் சம்பந்தப்பட்ட கார்டெக்ஸ் பகுதியை ஆராய functional Magnetic Resonance (fMRI) imaging என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். முதலில் 4 பார்வையற்றவர்களையும், anophthalmia யாவால் பாதிக்கப்பட்ட 5 பேரையும் பங்கேற்பாளர்களாக தேர்ந்தெடுத்தனர். Anophthalmiaஎன்பது ஒரு கண்ணோ அல்லது இரு கண்களுமோ உருவாகாமல் இருக்கும் நிலை. ஆய்வின் போது பங்கேற்பாளர்களை வேறுபட்ட அதிர்வெண்களில் ஒலிக்கப்படும் ஒலிகளை கேட்கச் செய்தனர். அதன் பின் fMRI மூலம் அவர்களின் மூளைசெயல்களை கண்காணித்தனர். அதே போல எந்த பார்வை குறைபாடும் இல்லாதவர்களிடமும் இதே சோதனையை செய்தனர்.
Credit: news archy uk
சோதனையின் முடிவுகளை fMRI யில் ஆய்வு செய்ததில் பார்வை இல்லாதவர்களின் கார்டெக்ஸ் பகுதி ஒவ்வொரு ஒலியின் அதிர்வெண்ணையும் மிக துல்லியமாக காட்டியது. இதன் மூலம் மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் அதிர்வெண்களை டியூன் செய்யும் உணர்வும், அதிர்வெண்களை சிறப்பாக குறிப்பிட்டு காட்டும் திறனும் பார்வை இல்லாதவர்களின் மூளைக்கு மிக அதிகம் என்பது தெரிய வந்துள்ளது. பார்வை இல்லாதவர்களின் மூளையில் உள்ள இந்த திறன் தான் அவர்களை நன்றாக கேட்க வைக்கிறது என்கின்றனர் இந்த குழுவினர்.
இதே போல இந்த விஞ்ஞானிகள் நடத்திய மற்றொரு ஆய்வு மூளையின் ஒரு பகுதியான hMT+ பற்றியது. பொதுவாக இந்த பகுதி தான் பார்வை உள்ளவர்களை பொறுத்தவரையில் நகரும் பொருட்களை கவனிக்கும் பகுதி. அதுவே பார்வை இல்லாதவர்களுக்கு இந்த பகுதி ஒலியை ஏற்படுத்தும் நகரும் பொருட்களை (கார், காலடி சத்தம்) அதாவது ஒலி நகர்வை கவனிக்கும் பகுதியாகச் செயல்படுகிறது. இந்த பகுதி தான் பார்வை இல்லாதவர்கள் ஒலியை வைத்தே ஒரு பொருள் அல்லது மனிதர்களின் இடப்பெயர்ச்சியை அறிய உதவுகிறது.
காரணங்கள்
இந்த ஆய்வில் பங்கேற்பாளர்களை மீண்டும் ஒரு முறை வேறுபட்ட அதிர்வெண் ஒலிகளை கேட்க செய்தனர். ஆனால் இந்த முறை ஒலிகள் ஒரு இடத்திலிருந்து மட்டும் கேட்காமல் ஒலி நகர்ந்து கொண்டே இருப்பது போல் செய்தனர். அப்போது fMRI மூலம் அவர்களின் மூளை செயல்களை கண்காணித்த போது பார்வை இல்லாதவர்களின் மூளையின் hMT+ பகுதியில் ஒலி மாறும் திசை குறித்த தகவல்கள் இருந்தது. அதுவே பார்வை உள்ளவர்களின் மூளையில் இந்த ஒலி குறிப்பிடத்தக்க எந்த நரம்பியல் செயல்பாட்டையும் உருவாக்கவில்லை.
Credit: bergdorfbib
ஆனால் பிறப்பில் இருந்தே பார்வை இல்லாமல் வயதான பிறகு அறுவை சிகிச்சை மூலம் பார்வை திறன் பெற்றவர்களை வைத்து சோதித்த போது இந்த hMT+ பகுதியில் ஒலி மற்றும் காட்சி என இரண்டின் இயக்கம் குறித்த தகவல்களும் இடம்பெற்றன. ஏனெனில் பார்வை இல்லாதவர்களின் hMT+ பகுதி ஒலியின் இயக்கத்தை குறிக்கும் திறனை இளமையிலேயே பெற்று விடுவதால் தான் அவர்கள் பார்வை பெற்ற பின்பும் அந்த திறன் அவர்களிடம் உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அதுவே பார்வை உள்ளவர்களில் hMT+ பகுதி ஒலியின் இயக்கம் குறித்த தகவல்களை தருவதில்லை.
இந்த ஆய்வில் பார்வை இல்லாதவர்களின் மூளையின் எந்தெந்த பகுதிகளின் செயல்பாடுகள் மாறுகின்றன என்பதை மட்டும் பார்க்காமல் துல்லியமாக என்ன மாதிரியான மாற்றங்கள், குறிப்பாக, அதிர்வெண் உணர்திறன் குறித்து கண்காணிப்பதால் பார்வை இல்லாதவர்களின் மூளை செயல்பாடுகள் குறித்து இன்னும் அறிய முடியும் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளிடம் ஏற்பட்டுள்ளது.