எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் என்ற முறையை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள் என்பது நமக்கு தெரியும். சொல்லப்போனால் இந்த வழக்கம் பெரும்பாலான மதங்களிலும் இருக்கிறது. உடலின் வளர்ச்சிக்கு, ஆற்றலுக்கு உணவு மிகவும் தேவை என்னும் போது ஒரு நாள் அதாவது 24 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் நம் உடல் அதை ஏற்றுக்கொள்ளுமா? அப்போது உடலில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.
நமது உடலின் ஆற்றலுக்கு குளுக்கோஸ் மிக அவசியம். நமது தசைகளும் கல்லீரலும் நாம் உடல் நாம் உண்ணும் உணவு செரித்தவுடன் அதிலிருந்து இந்த குளுகோஸை எடுத்து சேமித்து வைத்து நமக்கு தேவைப்படும் போது ரத்தத்தின் மூலமாக அனுப்புகின்றன. விரதம் இருக்கும் போது இந்த முறை அப்படியே மாறிவிடும்.
Credit: organic facts
சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், 18 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகள், வேறு ஏதேனும் நோய்வாய்ப் பட்டுள்ளோர் இந்த பயிற்சியை செய்யவேக் கூடாது!!
ஆற்றல்
சாப்பிடாமல் இருக்கும் முதல் 8 மணி நேரம் கொஞ்சம் எளிமையானது தான். அதுவரை நம் உடலால் இந்த விரத நிலையை எளிதாக தாங்கிக் கொள்ள முடியும். இந்த 8 மணி நேரத்தில் கடைசியாக சாப்பிட்ட உணவை வயிறு செரித்துக் கொண்டிருக்கும். இரத்தமும் சீராக அதன் வேலைகளை செய்யும். இப்போதும் உடலுக்கு உணவு வரவில்லையென்றால் Gluconeogenesis என்ற நிலையை நமது உடல் அடையும். கார்போஹைட்ரேட் அல்லாத மூலக்கூறுகளில் இருந்து குளுகோஸை உற்பத்தி செய்யும் நிலை தான் Gluconeogenesis. இந்த நிலையில் நமது உடலில் வழக்கத்தை விட அதிகமான கலோரிகள் எரிக்கப்படும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்போது ஏற்கனவே உடலில் உள்ள கொழுப்பை உடைக்க ஆரம்பிக்கும். இப்படி ஒரு நாள் உடல் செய்யும் போது பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது. சொல்லப்போனால் பல நன்மைகள் உருவாகும்.
- 24 மணி நேரம் வரை எதையுமே சாப்பிடாமல் இருந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாவது குறைவு.
- ஒரு முழு நாள் எதையுமே சாப்பிடாமல் இருந்தால் இது வரை உடலில் சேர்ந்துள்ள நச்சுக் கழிவுகள் மிக எளிதாக வெளியேறி விடும்.
- சர்க்கரை நோய் போன்ற அபாயங்களும் குறைவு என ஆய்வுகள் சொல்கின்றன.
ஜீரண உறுப்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். - இந்த ஒரு நாள் விரதம் மூளையின் திறன் அதிகரிக்ரித்து சுறுசுப்பாக வைத்துக் கொள்ளுமாம். வாயுத் தொல்லை, குடல் சம்பந்த மான பிரச்னைகள் ஏற்படாது.
- இதன் மூலம் உடலில் கண்டிப்பாக சில கலோரிகள் குறையும் என்பதால் உடல் எடை குறையும்.
Credit: every day health
ஆரோக்கியமுடன் இருக்க ஒரு மாதத்திற்கு ஒரு முறை இது போல 24 மணி நேரமும் சாப்பிடாமல் இருப்பது நல்ல பயனை தரும். ஆனால் ஒரு நாளுக்கு மேல் சாப்பிடாமல் இருந்தால் அதன் பிறகு தசைகளில் உள்ள புரதங்களில் இருந்து ஆற்றலை எடுக்கத் தொடங்கும். இது Starvation stage எனப்படும் ஆபத்தான நிலை. இதற்கு மேலும் சாப்பிடாமல் இருந்தால் இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிப்படைய ஆரம்பிக்கும்.
ஆய்வு முடிவுகள்
பொதுவாக குடலில் உள்ள ஸ்டெம் செல்களின் மறு உற்பத்தி நமக்கு வயதாக வயதாக குறைய தொடங்கும். ஆனால் நமது ஆரோக்கியத்திற்கும் நோய்களை எதிர்த்து போராடுவதற்கு இவை மிக முக்கியம். இது குறித்து அறிய ஆராய்ச்சியாளர்கள் 24 மணி நேரம் எதுவும் சாப்பிடாத எலிகளைக் கொண்டு சோதனை செய்தனர். எலிகளிடமிருந்து எடுத்த ஸ்டெம் செல்களை ஆய்வு கூடத்தில் வளர்த்த போது சாப்பிட்ட எலிகளை விட சாப்பிடாத எலிகளின் ஸ்டெம் செல்களை மீளுருவாக்கம் திறன் இரு மடங்காக இருந்துள்ளது.
Credit: the asian independent
அதாவது சாப்பிடாமல் இருந்தது குடலில் உள்ள ஸ்டெம் செல்களின் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டியுள்ளது. அதுவும் அந்த செல்கள் கார்போ ஹைட்ரேட்டுக்கு பதிலாக கொழுப்பை செரிக்க ஆரம்பித்தது. பொதுவாக குடலில் உள்ள சில திசுக்கள் ஐந்து நாளுக்கு ஒரு முறை தன்னையே புதுப்பித்துக் கொள்ளும். குடல் செல்கள் கார்போ ஹைட்ரேட்டுக்கு பதிலாக கொழுப்பை செரிக்க ஆரம்பிக்கும் போது இந்த புதிப்பித்தலும் சீக்கிரம் நடக்கிறது. வயதான எலிகளிலும் கூட இதே விளைவே ஏற்பட்டுள்ளது. எலிகளின் மரபணு 98 சதவீதம் மனித மரபணுவுடன் ஒத்திருக்கிறது என்பதால் இந்த ஆராய்ச்சி அடுத்த கட்டத்தை எட்டும் போது இதன் மூலம் மனிதர்களின் குடல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
யாரெல்லாம் செய்யக் கூடாது
அதே சமயம் ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் இருக்கும் முறையை எல்லாரும் செய்யக் கூடாது. சிலருக்கு இந்த முறை பல பாதிப்புகளை உண்டாக்கி விடும். முக்கியமாக சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், 18 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகள், வேறு ஏதேனும் நோய்வாய்ப் பட்டுள்ளோர் இந்த பயிற்சியை செய்யவேக் கூடாது. புதிதாக விரதம் இருப்பவர்களும் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். முதல் முறை என்பதால் அதிகமாக பசிக்க ஆரம்பிக்கும். அப்போது சாப்பிட்டு விடுங்கள். அடிக்கடி விரதம் இருந்து சாப்பிடாமல் இருக்கும் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து பழகுவதே சிறந்தது.