தொற்று நோய் ஒன்று பரவும் காலத்தில் அதிகமாக பேசப்படும் வார்த்தைகளில் ஒன்றான இந்த மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (Herd Immunity) என்றால் என்ன? அதன் மூலம் ஒரு நோயிடமிருந்து மனித இனம் விடுதலை பெற முடியுமா? இதற்கு தடுப்பூசிகள் எப்படி உதவுகின்றன? என்பதையெல்லாம் இங்கு பார்ப்போம்!
தடுப்பூசி பரிசோதனை
தடுப்பூசி பற்றி எதிர்மறையாக கூட பல வித கருத்துக்கள் நிலவும் போதிலும், தடுப்பூசிகள் நம்பமுடியாத அளவிற்குப் பாதுகாப்பானவை மற்றும் நோய்களிலிருந்து பாதுகாப்பதில் பயனுள்ளவை என்கிறார்கள் வல்லுநர்கள். அடுத்து, தடுப்பூசி தயாரிக்கப்படும் முழு செயல்முறையிலும் பல கட்ட சோதனைகள் இருக்கும். ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களில் தான் இது முதலில் சோதிக்கப்படும். அவை எல்லாவற்றிலும் தேர்ச்சி அடைந்து பாதுகாப்பானது என நிரூபிக்கப் பட்டால் மட்டுமே அது அங்கீகரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். எனவே நடைமுறைக்கு வருவதற்குப் பல வருடங்கள் எடுக்கலாம்.

தடுப்பூசிகள் போடும் போது சில சமயங்களில் தோல் சிவத்தல், வலி, வீக்கம் மற்றும் லேசான அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்றவை ஏற்படலாம். இருப்பினும் அனாபிலாக்ஸிஸ் போன்ற ஒவ்வாமை ஏற்படுவது மிகவும் அரிதானவை தான்.
ஒரு சமூகத்தில் போதுமான நபர்களுக்கு தடுப்பூசி போட்டு விட்டால், கிருமிகள் மேற்கொண்டு பரவ முடியாமல் நாளடைவில் இறந்துவிடும்!
சரி! தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்ததும் அதன் வேலை முடிந்ததா என்றால் அப்படி கிடையாது. ஏனென்றால் ஒரு தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக உரிமம் பெற்ற பின்னரும், Advisory Committee on Immunization Practices என்ற குழு தடுப்பூசி செயல்பாடு குறித்துத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். உலகெங்கும் அதன் செயல்பாடுகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். ஒரு வேளை ஏதாவது ஒரு கட்டத்தில் தடுப்பூசியின் அபாயங்கள் நன்மைகளை விட அதிகமாக இருந்தால், இந்த குழு அதன் பரிந்துரையை ரத்து செய்து விடும். அதன் பிறகு அந்த தடுப்பூசி போடப்படாது. ஆனால் இப்படி நடப்பது எல்லாம் மிக மிக அரிது.
Also Read: உங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்!
தடுப்பூசி செயல்முறை மிகவும் கடுமையாக இருக்கக் காரணம் இவை மருந்துகளைப் போல ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு சிகிச்சையளிக்க இவை வடிவமைக்கப்படவில்லை. நோய்களை முதலில் தடுப்பதன் மூலம் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால் தடுப்பூசிகளின் பாதுகாப்பு மிக மிக முக்கியம்.
மந்தை நோய் எதிர்ப்பு சக்தி / குழும எதிர்ப்பாற்றல் / Herd Immunity
Herd Immunity – இயற்கையில் உடல் உருவாக்கிக்கொள்ளும் தடுப்பாற்றலாகும். சுருக்கமாக சொல்வதானால், Herd Immunity என்பது இயற்கை தந்த தடுப்பூசி எனலாம். இது தனிப்பட்ட செயல்பாடாக இருந்தாலும் கூட அதன் நன்மைகள் மொத்த சமூகத்தையும் சேர்ந்தது. ஏனெனில் பல கிருமிகள் உயிர் வாழ்வதற்கு மனித உடல் தேவை. ஆனால் ஒரு சமூகத்தில் போதுமான மக்களுக்கு இயற்கையிலேயே எதிர்ப்பாற்றல் கிடைத்துவிட்டாலோ அல்லது தடுப்பூசி மூலம் கிடைத்துவிட்டாலோ அந்த கிருமிகள் அவர்களைத் தாக்க முடியாமல் அதாவது மேற்கொண்டு பரவ முடியாமல் நாளடைவில் இறந்துவிடும். இதனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நோய் பரவுதல் நின்றுவிடும். இதை தான் ஹெர்ட் இம்யூனிட்டி என்கிறார்கள். இப்படி தான் பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டது.
அடுத்து சிலருக்கு என்ன தான் தடுப்பூசி போட்டாலும் கூட அவர்கள் உடல் சரியான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்காது. அதே போலத் தொடர்ந்து நோயில் இருப்பவர்கள் மற்றும் கை குழந்தைகளுக்கு எல்லா தடுப்பூசிகளும் போடப்பட்டு இருக்காது. இப்படிப்பட்டவர்களால் சில தொற்றுநோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. அதற்காகத் தடுப்பூசி அவர்களைப் பாதுகாக்க உதவ முடியாது என்று அர்த்தமல்ல. ஒரு சமூகத்தில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தகுதி உடைய அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட்டால் அதுவே அவர்களில் பாதிக்கப்படக்கூடியவர்களை (தடுப்பூசி போடாதவர்கள்) பாதுகாப்பாக வைத்திருக்கிறது. ஏனெனில் கிருமி தொற்று மூலம் பரவ முடியாமல் நாளடைவில் அழிந்து விடும்.

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெறுவது எப்படி?
ஹெர்ட் இம்யூனிட்டியை இரு முறைகளில் பெறமுடியும்.
1. தொற்று நோயை அதன் போக்கில் சமூகத்தில் பரவ விட்டு அதன் மூலம் பெரும்பாலான மக்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகி, குணமடைந்து அதன் விளைவால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவது.
2. நோய் கிருமிக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்து அதை பெரும்பாலான மக்களுக்கு செலுத்தி அதன் மூலம் எதிர்ப்பு நோய் எதிர்ப்புச் சக்தி பெறுவது.
கொரோனா வைரஸ் – மந்தை நோய் எதிர்ப்பு சக்தி
சரி..! கொரோனா வைரஸ் உருவாக்கும் கோவிட்-19 நோய்க்கு ஹெர்ட் இம்யூனிட்டி உதவுமா என்றால் கண்டிப்பாக உதவும். ஆனால் அதற்கு மக்கள் தொகையில் 60 முதல் 80 சதவீகித பேருக்கு நோய் ஏற்பட வேண்டும். இதை அடைவதற்கு முன்பு பல உயிர்களை இழக்க நேரிடும். ஏனெனில் அப்படி பலருக்கும் தொற்று பரவி விட்டால் பலருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படும். வயதானவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவர். மருத்துவமனைகல் நிரம்பி வழியும். அதிகளவில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அதிக பாதுகாப்பு சாதனங்கள் தேவைப்படும். இது நமது இந்தியாவிற்கு மட்டுமல்ல, எந்த ஒரு நாட்டிற்குமே சிக்கலான விஷயம் தான்!
அதனால் மற்றொரு முறையான தடுப்பூசி மூலம் இந்த நிலையை விரைவாக எட்டி விடலாம். ஆனால் கொரோனா வைரஸ் உருவாக்கும் கோவிட-19 பற்றி தெளிவான அறிகுறிகள் தெரிந்தாலும், அது எவ்வளவு நாட்கள் இருக்கும், வந்தவருக்கே திரும்ப வருமா போன்றவற்றுக்கு இன்னும் அங்கீகரிக்கப்பட்ட பதில்கள் இல்லை. இதனால் தான் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
தடுப்பூசி உடலை, தகுந்த வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் ஆன்டிபாடிகள் மூலம் ஆயத்தமாக உதவுகிறது!
மந்தை நோய் எதிர்ப்புச் சக்தி பாதிப்புகளை எப்படி குறைக்கும்?
அதே சமயம் ஒரு நபருக்கு தடுப்பூசி போடப்பட்டாலும், அதற்காக அவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவர்கள் அல்லது முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று அர்த்தமல்ல. பொதுவாக எல்லா தடுப்பூசிகளும் 100% பயனுள்ளதாக இருப்பதில்லை. ஏனென்றால் மருந்து என்பது எல்லாருக்கும் ஒரே மாதிரி வேலை செய்வதில்லையே!

தடுப்பூசி உடலை, தகுந்த வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் ஆன்டிபாடிகள் மூலம் தயார் செய்ய உதவுகிறது, ஆனால் இது வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்புச் சக்தியை உறுதிப்படுத்தாது. பூஸ்டர் டோஸ் தரவில்லை என்றால் இந்த பாதுகாப்புகள் காலப்போக்கில் மங்கலாம் அல்லது குறைந்த செயல்திறன் மிக்கதாக இருக்கும். இருப்பினும், நல்ல செய்தி என்னவென்றால், ஏற்கனவே உடல் கிருமிக்குப் பழகி இருப்பதால், உங்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்பும் நீங்கள் ஒரு நோயால் ஏற்பட்டால் கூட, கண்டிப்பாக நோயின் வீரியம் குறைந்தே இருக்கும்.
மொத்தத்தில் தடுப்பூசிகள் எல்லா வகையிலும் நம்மை நோயிலிருந்து பாதுகாக்கின்றன. பல கோடி உயிர்களை கொன்ற கொடூர தொற்று நோய்களை இல்லாமல் ஒழித்துக் கட்டியிருக்கின்றன. மனித இனம் நிம்மதியாக வாழ வழி செய்கின்றன. இதனால் தான் இப்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள்!
Also Read: உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 10 வழிகள் போதும்!