கண்டத்திட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதால் நிலநடுக்கம் ஏற்படுவது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். படித்திருப்போம். ஆனால் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் ஒருமுறை நிலநடுக்கம் ஏற்படும் இடத்தைப் பார்த்திருக்கிறீர்களா? இருக்கிறது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தில் உள்ள கோல்டன் ஸ்டேட் (Golden State) பகுதியில் தான் இந்த விசித்திரம் நிகழ்கிறது. ஆனால் இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது. ஏனெனில் இங்கு ஏற்படும் அதிர்வுகள் மிகச் சிறியவை. நிலநடுக்கத்தை உணர்வதற்குப் பயன்படுத்தப்படும் சீஸ்மிக் கருவிகளால் கூட இதனை சில நேரங்களில்தான் கண்டுபிடிக்க முடிகிறது.

ஆய்வு
2008 முதல் 2017 வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 18 லட்சம் அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டிருகின்றன. அதாவது ஒரு நாளைக்கு 495 அதிர்வுகள். ஒவ்வொரு 174 வினாடிக்கும் ஒரு அதிர்வு ஏற்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவை அடுத்தடுத்த அதிர்வுகளை உருவாக்கும் வலிமை கொண்டவை.
0.3 மேக்னடியூட் உள்ள நிலநடுக்கம் கூட தொடர் அதிர்வுகளை உருவாக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அருகருகே இருக்கும் இரு இடங்களில் நடக்கும் நிலா நடுக்கத்தின் அதிர்வுகள் ஒன்றை ஒன்று சந்திக்கும்போதும் இப்படியான அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இப்படியான அதிர்வுகள் கலிபோர்னியா மட்டுமல்லாமல் மெக்சிகோ பகுதியிலும் அடிக்கடி நடைபெறுகிறது.
என்ன காரணம்?
இரண்டு கண்டத்திட்டுகள் மோதும்போது உடனடி விலகல் இல்லாமல் மோதல் தொடருமாயின் இந்த அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அலாஸ்காவில் இப்படியான நடுக்கம் சகஜம். ஆனால் கலிபோர்னியாவில் ஏற்படும் இதற்கும் இதுதான் காரணமா? என்பதில் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் தெளிவான நிலைபாட்டிற்கு வரவில்லை. எதிர்காலம் அதற்கான விடையை தன்னிடத்தே கொண்டு நமக்காக காத்திருக்கிறது.