28.5 C
Chennai
Wednesday, April 17, 2024

கிடேரி கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்யும் தொழில்நுட்பம் – பகுதி 3/3

Date:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக (ஒரத்தநாடு), விலங்கின மரபணுவியல் மற்றும் இன விருத்தியல் துறை உதவி பேராசிரியர் Dr. K. ஜெகதீசன், Ph.D அவர்கள் எழுதி மூன்று பகுதிகளாக வரவிருக்கும் தொடரின் இரண்டாம் பகுதி.

முதல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இரண்டாம் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

கிடேரி கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்யும் தொழில்நுட்பம்: ஏன் கூடாது?

(Technology to Produce Only Female Calves: Why Is It Not Required?)

‘விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பத்தின்’ நோக்கம் காளையின் விந்துவிலிருந்து “X” வகை விந்தணுக்களை மட்டும் தனியே சலித்தெடுத்து அவற்றை சினை ஊசி மூலம் பசுவின் கருவறைக்குள் செலுத்தி சினை முட்டையை கருவூட்டச் செய்து கிடேரி கன்றை மட்டுமே இப்பூமியில் பிறக்கச் செய்வதே ஆகும் என்பதை முதல் கட்டுரையில் கண்டோம். காளையின் விந்துவிலிருந்து “X” வகை விந்தணுக்களை மட்டும் எப்படி ”லேசர்” சல்லடை மூலம் பிரித்தெடுப்பது? அப்படி பிரித்தெடுக்கும் போது விந்தணுக்களின் கருத்தரிக்கும் திறன் (Fertility) ஏன் குறைகிறது? என்பதை இரண்டாவது கட்டுரையில் பார்த்தோம்.

இந்த மூன்றாவது கட்டுரையில் கிடேரி கன்றுகளின் பிறப்பு வீதத்தை அதிகரிப்பதாலும், கிடா கன்றுகளின் பிறப்பு வீதத்தை குறைப்பதாலும் எதிர் காலத்தில் துளிர் விட வாய்ப்புள்ள பொருளாதார, சமூக மற்றும் ’மரபணுவியல்’ ரீதியான பிரச்சினைகள், சவால்கள் என்னென்ன? பிறக்கப் போகும் கன்றின் பாலினத்தை கட்டுப்படுத்துவதிலுள்ள அற மீறல்கள் (Violation of Ethics) என்னென்ன? என்பதை விவாதிக்கலாம். வாருங்கள்!

Ferme-Gillette-cows-
Credit: The Western Producer

பொருளாதார பிரச்சினைகளும், சவால்களும் (Economic Issues and Challenges)

கறவை மாட்டுப் பண்ணையாளர்கள் அனைவரும் விரும்புவது கிடேரி கன்றை மட்டுமே. ஏனென்றால் அதிலிருந்து மட்டும் தான் பாலை கறக்க முடியும். அன்றாட வருமானத்தை ஈட்ட முடியும். கிடா கன்றுகளையும் வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்து அவ்வப்போது வருமானத்தை ஈட்டலாம். ஆனால் இந்தியத் திருநாட்டில் பெரும்பாலான மக்கள் ‘இந்து’ மத குடையின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருப்பதால் மாடுகளை இறைச்சிக்காக வளர்ப்பதற்கு அவர்கள் கொண்டிருக்கும் கற்பிதங்கள் (Bliefs without logic), ஆழ்நம்பிக்கைகள் தடையாயிருக்கிறது. இந்தப் பின்னனியில் பார்க்கும் போது கிடேரி கன்றுகளை மட்டுமே பிறக்க வைக்கச் செய்யும் தொழில்நுட்பமான “பாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்கள்” (Sexed Sperm or Sexed Semen) கறவை பண்ணையாளர்களை காந்தம் போல வெகுவாக கவர்ந்திழுக்கவே செய்கிறது. வரும் காலங்களில் மேலும் மேலும் அதிகமான பண்ணையாளர்கள் இத்தொழில்நுட்பத்தை நுகர ஆரம்பிப்பார்கள். விளைவு?

கிடேரி கன்றுக்கு ஆசைபட்டு இந்த ‘பாலினம் கண்டறியப்பட்ட விந்தணு’ தொழில்நுட்பத்திற்கு ஆதரவளிக்க ஆரம்பித்தால் பண்ணையாளர்கள் அதற்காக அதிக செலவுகளை ஏற்க நேரிடும். உதாரணமாக இன்றைய சந்தை நிலவரப்படி தரமான உறை விந்து ஊசி (Frozen Semen Straw) ஒன்றின் சராசரி விலை ரூபாய் 250 ஆகும். மாறாக ‘பாலினம் கண்டறியப்பட்ட விந்தணு’ ஊசி ஒன்றின் சராசரி விலை ரூபாய் 5000 ஆகும். அதாவது சினை ஊசி செலவு மட்டும் 20 மடங்கு அதிகமாகிறது. சரி இப்படி 5000 ரூபாய் செலவு செய்தாலும் கிடேரி கன்று பிறப்பதற்கான சாத்தியக் கூறு 100 சதவீதம் உள்ளதா என்றால் அதுவும் இல்லை. கிடேரியாக பிறப்பதற்கு அதிகபட்ச சாத்தியக் கூறு 85 முதல் 90 சதவீதம் மட்டுமே. இயற்கையில் ஒரு கன்று கிடேரியாக பிறப்பதற்கான சாத்தியக் கூறு 50 சதவீதம் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் முக்கியத்துவம் வாய்ந்த விலையுயர்ந்த ‘பாலினம் கண்டறியப்பட்ட விந்தணு’ ஊசியை பசுவின் கருப்பையில் துல்லியமாக சரியான நேரத்தில் செலுத்தி சினை முட்டையை வெற்றிகரமாக கருத்தரிக்கச் செய்வதற்கு அனுபவமிக்க துறைசார் வல்லுநர்கள் தேவை. இவர்களுக்கான ஊதியம் மேலும் செலவினத்தை அதிகரிக்கிறது. ஆக சினை ஊசி செலவு, துறைசார் வல்லுநர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை, கிடேரி கன்று பிறப்பதற்கு 100 சதவீத உத்திரவாதம் இல்லாத நிலை போன்றவற்றைப் பற்றி இங்கு நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

உறைவிந்து உற்பத்தியை அதிகரிக்க காளைகளனைத்தும் அரசாங்க பொலி காளை பண்ணைகளில் (Breeding Bull Farm) ஆயுள் கைதிகளாய் தனித்தனி அறைகளில் பொழுதை கழிக்க நேரிடும்.

கிடேரி கன்றின் மீதுள்ள மோகத்தால் பண்ணையாளர்கள் கிடேரி கன்றுகளை மட்டுமே வளர்க்க ஆசைப்படுவார்கள். இத்தொழில்நுட்பத்தை தேடி மொய்ப்பார்கள். இதனால் கிடா கன்றை விட கிடேரி கன்றின் பிறப்பு விகிதம் பல மடங்கு அதிகரிக்கும். பசுக்களின் எண்ணிக்கை பல மடங்காக உயரும். அவ்வளவு பசுக்களையும் கருத்தரிக்க மேலும் மேலும் அரசாங்கம் உறை விந்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டி வரும். இது அரசாங்கத்திற்கு பொருளாதார ரீதியாகவும், துறைசார் அறிஞர்களுக்கு மரபணுவியல் ரீதியாகவும் மிகப் பெரிய சவாலை முன்னிறுத்தும். இந்த பொருளாதார நெருக்கடிகளைக் கூட சமாளித்து விடலாம். ஆனால் இத்தொழில்நுட்பத்தால் முளைக்கக் கூடிய மரபணுவியல் ரீதியான விளைவுகளை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்? மரபணு ரீதியிலான விளைவுகளென்பது மீளமுடியாத மாற்றத்தையல்லவா (Irreversible Change) ஏற்படுத்தும்? இது முதலுக்கே மோசம் செய்வதல்லவா?

மரபணுவியல் ரீதியான பிரச்சினைகளும், சவால்களும் (Genetical Issues and Challenges)

மரபணு ரீதியிலான விளைவுகளா? அவைகள் என்னென்ன? சொல்கிறேன் கேளுங்கள். உறைவிந்து உற்பத்தியின் தேவை அதிகமாக இருப்பதால் அரசாங்க பொலி காளைப் பண்ணைகள் மிக அதிக எண்ணிக்கையில் ’தரமான’ பொலி காளைகளை உற்பத்தி செய்ய நிர்பந்திக்கப்படும். இங்கு ’தரமான’ பொலி காளைகளென்பது ”சந்ததி சோதனைக்குட்படுத்தப்பட்ட” (Progeny Tested) பொலி காளைகளை குறிப்பதாகும். கறவை மாடுகளில் ஒரு சந்ததியின் கால அளவு (Generation Interval) என்பது சராசரியாக நாலரை அல்லது ஐந்து வருடங்களாகும். இதனை வைத்துப் பார்க்கும் போது மேற்சொன்ன சந்ததி சோதனைக்கு ஆகும் கால அளவு குறைந்தபட்சம் ஏழு வருடங்களாகும். நமக்கு தேவைப்படும் அவ்வளவு எண்ணிக்கையிலான பொலி காளைகளையும் இந்த நீண்ட கால பரிசோதனைக்கு உட்படுத்தி தரம் பிரிப்பதென்பது களத்தில் நிகழ்த்த முடியாத ஒன்றாகும். விளைவு? பொலி காளைப் பண்ணைகள் தரமற்ற உறைவிந்துவை உற்பத்தி செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும். இதனால் எதிர்கால பசுக்களின் பால் உற்பத்தி குறையக் கூடும். பிறகென்ன? ஒவ்வொரு வீட்டிலும் கறவைப் பசுக்கள் கூட்டம் கூட்டமாய் இருக்கும். ஆனால் பாத்திரங்களில் பால் எதிர்பார்த்த அளவு பொங்கி வழியாது. இதை தான் ”அறுவை சிகிச்சை வெற்றி நோயாளி காலி” என்று நகைக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு வகையான எதிர்கால விளைவாகும். ஒரு வேளை இது நிகழவில்லையென்றால் இன்னொரு வகையான விளைவு ஏற்படலாம். அது என்ன?

உறைவிந்து உற்பத்தியை அதிகரிக்க காளைகளனைத்தும் அரசாங்க பொலி காளை பண்ணைகளில் (Breeding Bull Farm) ஆயுள் கைதிகளாய் தனித்தனி அறைகளில் பொழுதை கழிக்க நேரிடும். சிறைக்காளை கூடத்திற்கு அருகிலேயே எதிர்கால பொலி காளைகளை பெற்றெடுக்க வசதியாக ’பொலி காளை தாய் பண்ணைகளும்’ (Bull Mother Farm) அமைந்திருக்கும். பொலி காளைப் பண்ணையிலிருந்து கறந்த உயர்தர விந்துவை (Semen from Top Progeny Tested Bulls) எதிர்கால காளைக் கன்றுகளை உற்பத்திச் செய்ய அருகிலிருக்கும் பொலி காளை தாய் பண்ணைக்கு அனுப்பி அங்குள்ள உயர்தர பசுக்களை (Elite Cows) கருத்தரிக்க செய்வதும் (Nominated Mating), அதன் பொருட்டு பிறந்த உயர்தர காளை கன்றுகளை (Superior Bull Calves) பொலி காளை பண்ணைக்கு மீண்டும் எதிர்கால விந்து உற்பத்திக்காக அனுப்புவதும் தொடர் சுழற்சியாக மாறிவிடும். இப்படி நெருங்கிய உறவுகளுக்கிடையே மட்டும் (உள்) இனச்சேர்க்கை (Inbreeding) ஏற்பட்டு அடுத்தடுத்து உருவாகும் சந்ததிகள் மரபணுக் குறைபாடுகளோடு (Genetic disorders) பிறக்க வாய்ப்புள்ளது. இது எதிர்கால சந்ததிகளின் உயிர் வாழும் சாத்தியக் கூறு (Survivability), உடல் ஆரோக்கியம் (Fitness), வீரியம் (Vigor), ஆண்மை (Libido) போன்றவற்றை மட்டுப்படுத்திவிடும் (Inbreeding Depression). இறுதியாக இன அழிப்பு (Breed Extinction) ஏற்பட்டு வரலாற்றில் மட்டுமே இடம் பெற்றிருக்கும் டைனோசர்கள் போன்றே மாறிவிடும் இந்த பொலி காளைகள். அப்புறமென்ன? சங்கர் போன்ற டைரக்டர்கள் இந்த அழிந்து போன காளைகளை எப்படி மீளுருவாக்கம் செய்யலாம் என்பதை அதி நவீன VFX எனும் ’விசுவல் எஃபெக்ட்’ (Visual Effects) தொழில்நுட்பத்தில் பல ஆயிரம் கோடிகளில் ரஜினி பேரனையும் சூர்யா பொண்ணையும் வைத்து படமெடுப்பார்கள். அதிதீவிர ரசிக சிகாமணிகள் பொத்தானை தட்டி ஷவர் மூலமே கட்டவுட்டிற்கு பால் அபிஷேகமும் நடத்துவார்கள். படம் உலகத் தமிழர்களின் உள்ளங்கை கல்லறையில் (Smart Phone) வெளியிடப்பட்டு வரலாறு காணாத வெற்றியும் பெரும்.

cow milk
Credit: Sarda Farms

சமூக ரீதியிலான பிரச்சினைகளும், சவால்களும் (Societal Issues and Challenges)

இந்த ‘பாலினம் கண்டறியப்பட்ட விந்தணு’ தொழில்நுட்பத்தால் கிராமங்களில் காளை கன்றுகளின் மீது ஒரு வித ஒவ்வாமை ஏற்பட்டு இங்கொன்றும் அங்கொன்றுமாக இன்று தென்படும் காளை கன்றுகளும், நிலம் கீறும் எருதுகளும் எதிர்காலத்தில் காணாமல் போய் விடலாம். தற்சார்பை இழந்து குக்கிராம உழவனும் டிராக்டருக்காக காத்திருக்க வேண்டி வரலாம். உழுதவன் கணக்கு பார்த்தாலே உழக்கு கூட மிஞ்சாது… டிராக்டரைப் பயன்படுத்தினவனுக்கா மிஞ்சப் போவுது? விளைவு? கடன் உளச்சலால் எலி மருந்தை விழுங்கி அவன் எமலோகம் செல்ல நேரிடலாம். உடல் சுடுகாடு செல்லும் முன்னே அரசாங்கமும் உடனடியாக ‘நிவாரண’ தொகையை அறிவித்து இழவு வீட்டிற்கு ஆறுதல் அளிக்கலாம். மகனும், மகளும் மாவட்ட தலைநகர் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையாளராகவோ, பணியாளராகவோ பிழைக்க எத்தனிக்கலாம். அப்புறமென்ன? மினிபஸ் பிழைப்பு தான்!

காளை மாடுகளின் தட்டுப்பாட்டால் தமிழகத்தின் ஒவ்வொரு மாட்டுச் சந்தையிலும் லாரியில் ஏற்றப்படுவதற்கு அடிமாடுகள் இல்லாமல் போகலாம். இது கேரளாவில் மாட்டுக்கறி தட்டுப்பாடாக எதிரொலிக்கலாம். கேரளா நோக்கி விரையும் மாட்டு லாரியிலிருந்து கிடைக்கும் வருமானம் வற்றி வழிபறி ஏட்டய்யாக்கள் திண்டாடலாம். மாடு வியாபாரம், மாட்டுக்கறி வியாபாரம், லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுனர்கள், லாரி துடைப்பர்கள் என பல்வேறு தளங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்கலாம். இவர்களெல்லாம் பெருநகரின் மெட்ரோ ரயில் பாதை கட்டுமான தளத்தில் தகரம் சூழ் குழியில் தங்களை தாங்களே புதைத்துக் கொண்டிருக்கலாம். அவர்கள் குழந்தைகளின் பசி சத்தம் வாகன குதூகலத்தில் சிதறியடிக்கப்படலாம்.

மாநகரத்தின் கூச்சலுக்கிடையே மௌனமாய் ஒற்றை எருதை கொண்டு தட்டு ரிக்‌ஷா பிழைப்பு நடத்தும் அந்த ‘மகான்கள்’ மறைந்து விடலாம். அலங்காநல்லூரும், பாலமேடும் பூம்புகாரைப் போல புராதன ஊர்களாக வரலாற்றில் புதைந்து விடலாம். புதுக்கோட்டை ரேக்ளா ரேஸ் வீடியோ கேமாக (Video Game) பரிணமித்திருக்கலாம். வண்டலூர் பூங்காவில் காளைகளை கண்டு களிக்க கட்டணம் வசூலிக்கப் படலாம். காணக்கிடைக்காத அரிய விலங்கினப்பட்டியலில் காளை மாடுகள் சேர்க்கப்படலாம். அதனையொட்டி கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தால் கிடைமாடு வளர்ப்பவர்கள் நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். காலப்போக்கில் மாட்டோடு மாடாக அவர்களும் அஸ்தமனமாகலாம்.

காளையை காணக்கிடைக்காததால் கிராமங்களில் திரியும் பருவ பசுக்களில் கசியும் ‘மதன நீர்’ வறண்டு விடவும் வாய்ப்புண்டு.

பால் வற்றிய வயதான பசுக்களை பட்டியில் கொள்ளவும் முடியாமல், இறைச்சிக் கூடங்களில் கொல்லவும் முடியாமல் அனாதைகளாகத் திரிய அவிழ்த்து விடப்படலாம். அவைகள் நகரங்களின் பிரதான சாலைகளிலும், நடைமேடைகளிலும் படுத்துக் கொண்டு மனிதர்களுக்கெதிராய் மௌனமாய் கோஷமிடலாம். ஏதேச்சயாக நிகழ்ந்த சாலை விபத்தில் கொல்லப்பட்ட ஒரு பசுவிற்காக பசு குண்டர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தலாம். விபத்தை நிகழ்த்தியது அப்துல்லா தான் என வாட்ஸப் வதந்தி பற்ற வைக்கப்பட்டு காட்டுத் தீயாக பரப்பிவிடப்படலாம்.  தக்க சமயத்தில் கலவரம் ஏற்படுத்தப்பட்டு ஒரு டஜன் முகமதியர்களும், அரை டஜன் அன்றாடங்காச்சிகளும் காவு வாங்கப்படலாம். எல்லாம் முடிந்த பின் ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ – முதலமைச்சர் பேட்டி என ‘பிரேக்கிங்’ நியூஸ் (Breaking News) தொல்லைகாட்சியில் பளீச் பளீச் என மின்னலாம்.

‘அந்த’ கட்சி ஆட்சியிலிருந்தால் ஆங்காங்கே சுற்றித்திரியும் பசுக்களை பாதுகாக்க அரசு பசுவிடுதிகள் (Government Gaushala) அமைக்கப்பட்டு அவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப் படலாம். பசு சோப்பு, பசு கோமியம், பசு திருநீறு, பசு வரட்டி போன்றவை மானியத்தில் வழங்கப்படலாம். அரசு விளம்பரத்தில் மதகுருக்கள் தோன்றி நாட்டுப்பசு சாணத்திற்கும், நாட்டுப்பசு கோமியத்திற்கு மட்டுமே மனிதனுக்கு நலம்தரும் பண்புகள் இருப்பதாக பிதற்றலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக காளையை காணக்கிடைக்காததால் கிராமங்களில் திரியும் பருவ பசுக்களில் கசியும் ‘மதன நீர்’ வறண்டு விடவும் வாய்ப்புண்டு. இதனை அறிய வரும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் விடுவார்களா என்ன? ‘செயற்கை மதன நீர்’ கலவைக்கான சூத்திரத்தை கொண்டு வந்து குறைந்த பட்சம் ஒரு டஜன் முனைவர் பட்ட ஆய்வறிக்கைகள் (Ph.D. Thesis) சமர்பிக்கப்படலாம். அவைகளனைத்தும் பலப்பல ஆய்வுக்கட்டுரைகளாக தொகுக்கப்பட்டு துறைசார் வல்லுநர்களால் மதிப்பிடப்பட்ட பன்னாட்டு இதழிலும் (Peer Reviewed International Journals) வெளியிடப் படலாம். அதன் பொருட்டு கணிசமான எண்ணிக்கையிலான ஆராய்ச்சியாளர்கள் பதவி உயர்வும் பெறக் கூடும். செழிப்பாக ’பிழைத்து’ பின்னொரு நாளில் சிவலோகமும் அடையக் கூடும்.

அறம் மீறலுக்கான சாத்தியக் கூறு (Possibility of Violation of Ethics)

அறமா?… அப்படின்னா?… நேர்மை! நேர்மையா?… அப்படின்னா?… உண்மை! உண்மையா?… அப்படின்னா?… காலங்காலமாய் நீடித்திருப்பது! காலங்காலமாய் நீடித்திருப்பதா?… அப்படின்னா?… Sustainability! ஓ அப்படியா? ஆமா Sustainability-ன்னா என்ன?… இயற்கையை சிதைக்காமல் இருப்பது? இயற்கையா?… அப்படின்னா?… பஞ்ச பூதங்கள்! பஞ்ச பூதங்களா?… அப்படின்னா?… (வான)வெளி, (புவி)நிலம், காற்று, நீர், நெருப்பு ஆகியவை. இந்த “பாலினம் கண்டறியப்பட்ட விந்தணு” தொழில்நுட்பத்திற்கும் பஞ்ச பூதத்திற்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் உண்டு. கேளுங்கள்!

ஐம்பூதங்களில் ஒன்று நிலம். நிலமென்றால் வெற்றுப் பாறையும்,  காய்ந்த மண்ணும் மட்டுமல்ல. அவைகளோடு கண்ணுக்குத்தெரியாத மற்றும் கண்ணுக்கு தெரிய கூடிய என அனைத்து உயிர்களையும் உள்ளடக்கிய ஒரு உயிர்த் தொகுப்பே நிலம் என்பது. சில உயிரினங்கள் ஆண் பெண் பாலின வேறுபாடு இல்லாமல் இருப்பதும், சில உயிரினங்கள் ஆண் பெண் பாலின வேறுபாட்டோடு இருப்பதும் தத்தமது இனத்தை நிலைநிறுத்திக் கொள்ள தனக்குத் தானே போராடிய தத்தமது மரபணுத் தொகுப்பால் (Individual’s Genome) விளைந்த பயனே ஆகும். கால வெளியில் மண்ணின் உயிரினங்கள் ஒவ்வொன்றின் மரபணு தொகுப்பிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முடிவில்லா தொடர் போராட்டமே “பரிணாமம்” (Evolution) என்பது. மரபணுக்களின் இந்தத் தொடர் போராட்டம் நிற்கும் போது அந்த உயிரினமும் பரிணாம மரத்திலிருந்து முறிந்து இம்மண்ணை விட்டுப் பிரிய நேரிடுகிறது. அப்படி மறைந்தது தான் இன்று நாம் ‘கிராஃபிக்ஸில்’ கண்டு களிக்கும் டைனோசர் என்ற ஓர் உயிரினம். இம்மண்ணை விட்டு நாள்தோறும் எண்ணற்ற உயிரினங்கள் ஏதேதோ காரணங்களால் மறைந்துக் கொண்டுள்ளன. அவற்றை நாம் முழுவதுமாகத் தடுக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்தலாம். அவைகளின் மறைவை தள்ளிப்போடலாம்.

dairy-farming
Credit: India Farming

அதே போன்று மனிதன் உள்ளிட்ட மண்ணில் காணும் உயிரினங்கள் அனைத்தும் தொடர்ந்து பிரபஞ்ச கதிர்வீச்சு சாரல்களால் நனைக்கப்படுவதால் அவைகளின் மரபணுத் தொகுப்பில் துளி துளி மாற்றம் ஏற்பட்டு (Single Nucleotide Polymorphisms – SNPs) புதிய புதிய பண்புகளை சூழலுக்குத் தக்கவாறு பெறுகிறது. இந்த புதிய பண்புகளுடன் கூடிய உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட காலநேரத்தில் அதனையொத்த உயிரினங்களிலிருந்து தோற்றத்திலும், பண்பிலும், மரபணுக்களிலும் கணிசமாக வேறுபட்டு காட்சியளிக்கும். அப்போது அவை ‘புதிய’ உயிரினமாக துறைசார் வல்லுநர்களால் அங்கீகரிக்கப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வையே நாம் “சிற்றினவாக்கம்” (Speciation) என்கிறோம். சுருங்கச் சொல்வதென்றால் ஓர் உயிரினம் “ஆவதும் (Speciation) பரிணாமத்தினாலே… அழிவதும் (Extinction) பரிணாமத்தினாலே…” இவையனைத்தும் இயற்கையாக மட்டுமே நடைபெற வேண்டும். மாறாக மனிதன் ‘பொருளாதார’ நோக்கத்திற்காக இவற்றை நடத்த எத்தனிப்பதென்பது கிளையில் அமர்ந்துக் கொண்டு வேருக்கு வெடி வைப்பதாகும். இது பல்லாயிரங்கோடி ஆண்டுகளாக உயிர்கொண்டுள்ள பரிணாம மரத்தையே வேரோடு சாய்க்க முனைவதாகும்.

அறம் என்றால் என்ன என்பதற்கு மணிமேகலை இப்படி கூறுகிறாள்…

                                       ” அற மெனப் படுவது யாதெனக் கேட்பின்

                                          மறவாதிதுகேள் மன்னுயிக் கெல்லாம்

                                         உண்டியும், உடையும், உறையுளும்

                                        அல்லது கண்டதில்”

வாழ்வின் இன்றியமையாத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இம்மூன்றையும் அந்தந்த இடங்களில் உற்பத்தியாகுபவைகளைக் கொண்டு அமைத்துக் கொள்ளுதலே அறமாகும் என்கிறாள். வாழ்வின் ஆதாரத்தையே இடம் சார்ந்த இயற்கையோடு அமைக்க வேண்டுமெனும் போது உயிரினத்தின் பாலினத்தை பிறப்பதற்கு முன்னேயே தீர்மானிப்பதற்கு நாம் யார்? அது எப்படி அறமாகும்? அந்த தொழில்நுட்பத்தை ஆதரிப்பது குற்றமல்லவா?

கட்டுரைத் தொடர் இத்துடன் முடிவடைகிறது.

கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு கட்டுரையாசிரியரே முழுப் பொறுப்பு. அவர் சார்ந்த பல்கலைக்கழகமோ அல்லது வேறு சில அமைப்போ அல்ல.

 

கட்டுரை ஆக்கம்:

முனைவர். கி. ஜெகதீசன், பி.எச்.டி.
உதவிப் பேராசிரியர்,
விலங்கின மரபணுவியல் மற்றும் இனவிருத்தியல் துறை
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
ஒரத்தநாடு – 614 625, தஞ்சாவூர் மாவட்டம்
மின்னஞ்சல்: jagadeesankrishnan@gmail.com

கைப்பேசி: +91-95660-82013

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!