காணாமல் போகும் கடல்நீர் – குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்

Date:

பெருங்கடல்களுக்கு கீழே ஏற்படும் பூமித் தட்டுகளின் (Tectonic Plates) நகர்வு மற்றும் மோதல்களின் காரணமாக  பூமியின் ஆழத்திற்குச் செல்லும் நீரின் அளவு முன்பு கணக்கிட்டதை விட மூன்று மடங்கு அதிகம் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆம். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகின் மிக ஆழமான மரியானா கடல் அகழியில் இதற்கான ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வைப் பற்றிய தகவல்களை சென் காய் (Chen Cai) என்பவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

பெருங்கடல்களின் அடியில் பூமி தட்டுகளின் மோதல்கள் மூலம் உள் இழுக்கப்படும் நீரின் அளவு முன்பு கணிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம்.

பூமி அமைப்பு

நமது பூமியின் மேற்பரப்பு பல தட்டுகளால் ஆனது. இந்தத் தட்டுகள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இதற்குக் காரணம் தட்டுகளுக்குக் கீழே நிலம் போன்ற பாறை அமைப்பு இல்லை. மாறாக குழம்பு போன்ற திரவ நிலையில் இருக்கும் மாக்மா (Magma) தான் உள்ளது. இந்த மாக்மா மேல் தான் தட்டுகள் மிதந்து கொண்டிருக்கும். மாக்மாவில்  உள்ள இழுவிசையால் தட்டுகள்  நகர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். இதனால் பூமியின் சில இடங்களில் தட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசும், சில இடங்களில் விலகும், இன்னும் சில இடங்களில் ஒரு தட்டுக்கு கீழே இன்னொரு தட்டு இறுகிப் புதையும். இதைத் தான் ஆங்கிலத்தில் Subduction என்றும், இது மாதிரி நடக்கும் பகுதிகளை Subduction zones என்றும் சொல்வார்கள். இது போன்ற மோதல்கள் தொடர்ந்து நடக்கும் போது ஒரு கட்டத்தில் அங்கு அதிர்வுகள் ஏற்பட்டு நிலநடுக்கம் ஏற்படுகிறது. சில சமயம் இது போன்ற மோதல்களில் தட்டுகள் அதிக வெப்பத்தால் உருகி பாறை குழம்பாகவும் மாறும். அவை தான் எரிமலை வாய் வழியே வெளியேறுகின்றன. 

கடல்நீர்
Credit: Scholastic

இது போன்ற Subduction zones ல் அதாவது தட்டுகள் ஒன்றின் மேல் ஒன்று புதையும் இடங்களில் உள்ள நீரானது பூமியின் அடியில் புவி ஓட்டின் வழியாகச் செல்லும். அதன் பின் தட்டுகளின் வழியே செல்லும் போது  தட்டுகளின் இடுக்குகளில் சிக்கிக் கொள்ளும். பிறகு அங்கு நிலவும் வெப்ப நிலை மற்றும் அதீத அழுத்தத்தால் நீர் அடர்த்தியாகி தாதுக்கள் அடங்கிய ஈரப் பாறையாக மாறிவிடும். அதன் பிறகு தட்டுக்கள் நகரும் போதும் புதையும் போதும் இந்த நீர்ம பாறையும் பூமியின் ஆழம் வரை செல்லும்.

நீர் சுழற்சி

நீர் சுழற்சியின் படி  பூமியில் உள்ள நீரின் அளவு எப்போதும் நிலையாகவே  இருந்து வருகிறது. எனவே பூமியின் கீழே செல்லும் நீரானது  நீர் சுழற்சியின் படி மீண்டும் பூமியின் மேற்பரப்பிற்கு வந்தே ஆகவேண்டும். அது எப்படி என ஆராய்ந்த விஞ்ஞானிகள், எரிமலைகள் உமிழும் போது இந்த நீர் ஆவியாக வெளிவந்து நீர் சுழற்சி தொடர்வதாக கண்டறிந்தனர், ஆனால் எவ்வளவு நீர் உள்ளே செல்லும் என்பதை கண்டறிய முடியவில்லை.

தட்டுகளின் மோதல்கள் மூலம் உள்ளே செல்லும் நீரின் அளவு ஒவ்வொரு மில்லியன் வருடத்திற்கும் 3 பில்லியன் டெராகிராம்.

மரியானா ஆராய்ச்சி

இதற்காக ஆராய்ச்சியாளர்கள் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழியின் (அகழியின் ஆழமான பகுதி  கடல் மட்டத்திற்குக் கீழே 11 கீ.மீ ஆகும். ) பல இடங்களில் அதிர்வு சென்சார்களையும், 19 நிலநடுக்கத்தை அளவிடும் கருவிகளையும் வைத்துள்ளனர். அந்தக் கருவிகள்  நிலநடுக்கத்தையும் அப்போது வரும் எதிரொலியையும் அளவிட்டுள்ளது. அடியில் இருக்கும் பாறைகளின் அமைப்பை அறிய ஒலி அலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ஒரு வருடம், ஏழு தீவுகளில் பெற்ற தரவுகள் மற்றும் படங்கள் மூலம் கடல் தளத்திற்கு 20 மைல் தூரத்திற்கு கீழே உள்ள  நீர் பாறைகளின் பகுதியையும் அவற்றில் எவ்வளவு நீர் உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்களால் அறிய முடிந்துள்ளது. ஆனால் பாறைகளின் அடர்த்தி மற்றும் அவற்றில் உள்ள நீரின் அளவைத் துல்லியமாக அளவிட முடியவில்லை என்பதே உண்மை. இந்த ஆய்வில் மரியானா அகழி பகுதியில் மட்டும் முன்பு அளவிட்டதை விட நான்கு மடங்கு தண்ணீர், தட்டுகளின் மோதல்களால் பூமியின் உள்ளே சென்றுள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

ocean
Credit: National Geographic Kids

ஆராய்ச்சி முடிவுகள்

கிடைக்கப்பட்ட அளவுகளில் இருந்து Subduction zones ல் தட்டுகளின் மோதல்கள் மூலம் உள்ளே செல்லும் நீரின் அளவு ஒவ்வொரு மில்லியன் வருடத்திற்கும் 3 பில்லியன் டெராகிராம் (ஒரு டெரக்ராம் என்பது ஒரு பில்லியன் கிலோகிராம்) என தெரியவந்துள்ளது. அதாவது ஆய்வின் படி உள்ளே செல்லும் நீரானது பூமியின் மேற்பரப்பிற்கு வரும் நீரை விட மிக அதிகம். அதாவது முன்பு கணிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமாம். அதே போல் முன்பு கணிக்கப்பட்டதை விட நீர் உள்ளே  செல்லும் தூரமும் அதிகம். (முந்தய ஆய்வுகள் வெறும் மூன்று மைல் தூரம் வரை மட்டுமே நீரானது செல்லும் எனக் கணக்கிடப்பட்டுள்ளன.)

கடல் மட்டத்தில் பெரிய வித்தியாசம் இல்லாத நிலையில் உள்ளே சென்ற நீர் எரிமலை வழியே மட்டும் வெளியேறி நீர் சுழற்சியை முடிக்க இயலாது என்பது இப்போது தெளிவாகி உள்ளது. அப்படி என்றால் நீர் சுழற்சிக்கான ஆய்வை மறு மதிப்பீடு செய்தே ஆக வேண்டும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். மேலும் எல்லா Subduction zones லும் இதே விளைவு ஏற்படுகிறதா? என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் அலாஸ்காவிலும் இதே போன்ற கருவிகளை  நிறுவி ஆராய்ந்து வருகின்றனர்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!