பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமி முழுவதும் பனிப்பாறைகள் உறைந்திருந்தன. கண்ட எல்லைகள் கிடையாது. கடல்கள் கிடையாது. பூமி மிகப்பெரிய பனி உருண்டை போலத்தான் இருந்திருக்கிறது. ஆனால் பனிக்காலம் முடிவடைந்தபோது இந்த பிரம்மாண்ட பனிப்பாறைகள் உருகி புதிய நிலப்பரப்புகள் உருவாகி இருக்கின்றன. இப்படி உருகிய நீர் பள்ளமான இடங்களில் தேங்கி பெருங்கடல்களாக உருவெடுத்துள்ளன. காலப்போக்கில் அவை உப்புத்தன்மை கொண்டவையாக மாற நன்னீரின் அளவு குறைந்துவிட்டது. ஆனால் கண்டப்பெயர்வு காரணமாக சில நேரங்களில் பூமிக்கு இடையடுக்குகளில் நீர்நிலைகள் புதைந்து போகும். அப்படி ஒன்றைத்தான் விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தான் இந்த புதை நன்னீர் ஏரி பற்றித் தெரியவந்திருக்கிறது. அமெரிக்க அட்லாண்டிக் கடலில் சுமார் பத்து நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. எலெக்ட்ரோ மேக்னடிக் சென்சார்கள் பொருத்தப்பட்ட சிறிய வகை படகு ஒன்று நியூ ஜெர்சியிலிருந்து மாஸச்சஸட்ஸ் வரை பயணித்திருக்கிறது. இதில் கிடைத்துள்ள தரவுகளைக்கொண்டு நன்னீர் ஏரியின் அளவை கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராழியியல் வல்லுனர்கள்.
அட்லாண்டிக் கடலில் சுமார் 600 அடிக்கு கீழாக சுமார் 50 மைல் அளவிற்கு பரவியிருக்கும் இந்த நீர்நிலை ஒன்டாரியோ ஏரியை விட இரண்டு மடங்கு பெரிதாகும். பொதுவாகவே கண்டத்தட்டுகள் இடப்பெயர்ச்சி அடையும்போது நிலத்திற்கு அடியில் இப்படி நன்னீர் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

இவை நன்னீர் என்று அழைக்கப்பட்டாலும் நாம் குடிக்கும் நீரைப்போன்று அவை இருப்பதில்லை. ஆனால் கடல் நீரைப்போன்று உப்பாகவும் இவை இருக்காது. மாறாக கடல் நீரின் உவர் தன்மையில் ஆயிரத்தில் ஒரு மடங்குதான் இந்த நீரில் உப்பு இருக்கும். இதுவே நிலப்பரப்பிற்கு அருகில் இருந்தால் அவை குடிநீர் போலவே இருக்கும். இதுகுறித்த மேற்கட்ட ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சில வாரங்களில் இந்த நன்னீர் ஏரி பற்றிய முழுத்தகவல்களும் வெளிவந்துவிடும்.