நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை பெய்யும் போது மழைத்துளி மண்ணில் பட்டதும் ஒரு இனிமையான வாசனை வெளிவரும். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும் அந்த வாசனையில் மயங்கி சிலருக்கு கவிதைகள் கூட தோன்றும். சரி, அந்த வாசனைக்கு காரணம் என்ன தெரியுமா?
மண்வாசனை என்று நாம் சொல்லும் அந்த வாசனைக்கு காரணம் நாம் நினைப்பது போல மண் கிடையாது. உண்மையில் இந்த வாசனைக்கு சில பாக்டீரியாக்கள், செடிகள் கூடவே மின்னலும் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்!!!
மண்வாசனைக்கு ஆங்கிலத்தில் பெட்ரிகோர் (Petrichor) என்று பெயர். 1964 ஆம் ஆண்டே Isabel Joy Bear மற்றும் R. G. Thomas என்ற இரு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இந்த வாசனை குறித்து ஆராய்ச்சி செய்து அதற்கு பெட்ரிகோர் என பெயரும் வைத்து விட்டார்கள்.
மனிதர்கள் சிலரால் மிக மிக சிறிய அளவு அதாவது ஒரு ட்ரில்லியனில் 5 பகுதிகள் என்ற அளவு ஜியோஸ்மினைக் கூட நுகர முடியும்!!
பாக்டீரியா
வளமான மண்ணில் வாழும் ஆக்டினோமைசெட்ஸ் (Actinomycetes), ஸ்டிரெப்டோமைசீஸ் (Streptomyces) என்ற பாக்டீரியாக்கள் தான் இந்த வாசனைக்குக் காரணம். இந்த பாக்டீரியாக்கள் மண் வறண்டு காய்ந்து போகும் போது அதன் வித்துக்களை உருவாக்கும். அப்போது அவை ஜியோஸ்மின் (Geosmin) என்னும் சேர்மத்தை சுரக்கின்றன. அவை அப்படியே மண்ணில் தங்கி விடுகின்றன. வறண்ட காலங்களுக்குப் பிறகு மழை பெய்யும் போது மழை நீர் படும் வேகத்தில் இந்த வித்துக்களுடன் ஜியோஸ்மின் காற்றில் கலந்து வேதிவினை நடப்பதால் அந்த இனிய வாசனையை தருகின்றன.
Credit: Video Blocks
பொதுவாக வெகு நாட்களுக்குப் பிறகு முதல் முறை பெய்யும் போது தான் இந்த மண் வாசனையை நுகர முடியும். அதற்குக் காரணம் அப்போது தான் நிலத்தில் அதிக அளவு வித்துக்கள் இருக்கும். முதல் மழை பெய்த பிறகு பாக்டீரியா வித்துக்கள் காற்றில் கலந்து விடுவதால் ஜியோஸ்மின் அளவு குறைந்து வாசனையை உணர முடியாது. ஜியோஸ்மின் மிகவும் ஆற்றல் மிக்க மூலப்பொருளாக இருப்பதால் இதனை மிகவும் நீர்த்து போகச் செய்தாலும் கூட நம்மால் எளிதாக அந்த வாசனையை கண்டுபிடித்து விட முடியும். மனிதர்கள் சிலரால் மிக மிக சிறிய அளவு அதாவது ஒரு ட்ரில்லியனில் 5 பகுதிகள் என்ற அளவு ஜியோஸ்மினைக் கூட நுகர முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
வாசனைக்கு காரணமான இந்த பாக்டீரியாக்கள் தற்போது பல ஆன்டிபயாடிக் மருந்து தயாரிப்பில் பயன்படுகின்றன. அதே போல ஜியோஸ்மின் பல வாசனை திரவியங்களில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
செடிகள்
வறட்சிக் காலத்தில் சில தாவரங்கள் நீர் பற்றாக்குறையை கட்டுப்படுத்த ஒருவித எண்ணெய் கலவையை சுரக்கின்றன. பல தாவரங்களில் ஸ்டீரியிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலம் (Stearic acid, palmitic acid) போன்ற எண்ணெய்கள் தான் பரவலாக காணப்படும். தாவர இலை முடியில் இந்த தாவர எண்ணெய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. வறட்சிக்குப் பிறகு மழை பெய்யும் போது இந்த எண்ணையில் உள்ள சேர்மங்கள் கலந்து காற்றில் வெளியேற்றப்படுவதாலும் மண்வாசனை உருவாகிறது.
Credit: Mental Floss
வறண்ட காலநிலையில் தாவரத்தின் வளர்சிதை மாற்றம் தாமதமாகும். மழை பெய்யும் போது அவை புத்துணர்வு அடைவதால் கூட தாவரங்கள் இந்த வாசனையை வெளிவிடுகின்றன என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். செடிகளின் இயல்பான வாசனைக்குக் காரணமான டெர்பென்களுக்கும் (Terpene) ஜியோஸ்மின் மூலக்கூறுகளுக்கும் கூட தொடர்பு இருக்கக்கூடும் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
ஓசோன்
சில சமயம் மழை வருவதற்கு முன்பாகவும் ஒரு வாசனை வரும். அதனைக் கொண்டே மழை வரும் என்று சிலரால் சொல்ல முடியும். அது ஓசோனின் (O3) வாசனை. குறிப்பாக இடி மின்னலுடன் மழை வரும் போது உருவாகும் மின்சாரம், வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், நைட்ரஜன் மூலக்கூறுகளைப் பிளக்கும். அவை இணைந்து நைட்ரிக் ஆக்சைடாக (NO) மாறி வளிமண்டலத்தில் உள்ள மற்ற வேதிப்பொருட்களுடன் இணைந்து ஓசோனை உருவாக்கும்.
Credit: Bignews English
ஒரு பகுதியை நோக்கி புயல் மேகங்கள் வரும் போது கூடவே இப்படி உருவான ஓசோனைக் கொண்டு வரும். அதனால் தான் இந்த வாசனையை தான் நம்மால் மழை வருவதற்கு முன்பே நுகர முடிகிறது.
மண்வாசனைக்கு காரணம்
பழங்காலத்தில் உலகத்திற்கு கிடைத்த ஒரே வளம் மழை தான் என்பதால் நமது முன்னோர்களுக்கு மழை மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது. அந்த பண்பு மரபணுக்கள் மூலம் கடத்தப்பட்டு, நமக்கும் மண்வாசனை பிடித்தமான விஷயமாக இருக்கிறது என பல ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தரும் இந்த வாசனைக்கு காரணங்கள் பல இருந்தாலும் அது மனிதர்கள் எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது.