உலகின் மிக ஆழமான கடல் பகுதியில் பிடித்த மீன் வயிற்றில் பிளாஸ்டிக்! கடல் உணவும் ஆபத்தா?

Date:

பூமியின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் நீர்ப்பரப்பு, கடல். மனிதனின் அதி அறிவார்ந்த செயல்பாடுகளால் மலை போல் குவியும் பிளாஸ்டிக் (தமிழில்: நெகிழி) கழிவுகள் கடலையும் கலங்கடித்துக் கொண்டிருக்கின்றன.

கழிவுகள் பொதுவாக திடக்கழிவு, நெகிழி கழிவு, மின்னணு கழிவு, ஆபத்தான கழிவு, மருத்துவக் கழிவு, கட்டிடக் கழிவு என பல வகைப்படும்.

ஒரு பழமொழி சொல்வார்கள். கடலில் கரைத்த பெருங்காயம் போல என்று. அதாவது கடல் அவ்வளவு பெரியது, அதில் பெருங்காயத்தை கரைத்தால் மணக்கவா போகிறது என்னும் பொருளில் அப்படி கூறுவர். அதிகரித்துவரும் நெகிழி பயன்பாடுகளால் அதன் கழிவுகளும் அதிகமாகிறது. ஆனால், இப்படிப்பட்ட கழிவுகளால் கடல் சீர்படுத்தமுடியாத அளவுக்குச் சேதத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா. சபையின் பெருங்கடல்களுக்கான பிரிவின் தலைவர் லிசா ஸ்வென்சன் அறிவித்து அபாய மணியை பலமாக தட்டுகிறார். பெருங்கடலுக்கே இந்த நிலை என்றால், பிற நீர்நிலைகளை பற்றி கேட்கவே வேண்டாம்.

கடலில் குவியும் நெகிழி மற்றும் வேதிக்கழிவுகளால் மீன் உணவுகள் கூட அபாயகரமானவையாக மாறிவருகின்றன.

சட்டங்கள், ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், அனைத்து கடலோர நாட்டு அரசுகளும், அவற்றின் குடிமக்களும் வரைமுறையின்றி கடலில் கழிவுகளைக் குவித்து வருகின்றனர். கடலில் குவியும் நெகிழி மற்றும் வேதிக்கழிவுகளால் மீன் உணவுகள் கூட அபாயகரமானவையாக மாறிவருகின்றன என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகின் கடல் பகுதிகளிலெல்லாம் மிகவும் ஆழமான பகுதி மரியானா அகழி (Trench). இது 35,840 அடி ஆழம் கொண்டது.

அறிந்து தெளிக!
35,840 அடி என்பது 10,924 மீட்டர் ஆகும்.  அதாவது, 10.9 கி.மீ ஆழம் ஆகும். (1 மீட்டர் = 3.2 அடி)

மரியானா ஆழ்கடல் பகுதி அமைந்திருக்கும் இடம்.

அறிந்து தெளிக!
இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 29092 அடியாகும். மரியானா அகழி பகுதியானது 35,840 அடி ஆழம் கொண்டது. இது, எவரெஸ்ட் சிகரத்தையே மூழ்க வைக்கக் கூடியது.

ஓட்டுமீன்கள் (crustaceans) இக்கடல் அடி மட்டத்தில் வசிக்கும் ஓர் கடல் வாழ் உயிரினம். கிட்டத்தட்ட 36 ஆயிரம் அடி ஆழத்தில் வசிக்கும் மீன்களின் குடல் பகுதியில் நுண்ணிய நெகிழி கழிவுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு மீனின் குடலிலும் இவ்வகை நெகிழிக் கழிவுகள் இருப்பதாக ஆய்வு முடிவு கூறுகிறது.

உண்மையில் பசிபிக்கின் ஆறு ஆழ்கடல் பகுதிகளில் ஒன்றில் கூட நெகிழிக் கழிவுகள் இல்லாமல் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். யுனைடெட் கிங்டமில் நியூகேஸில் (Newcastle) பல்கலைக்கழகத்தில் ஒரு கடல் சூழியல் வல்லுநரான ஆலன் ஜேமிசன், “கடல்களில் கொட்டப்படும் கழிவுகளானது, ஒன்று கடலுக்கு அடியில் சென்று விடும் அல்லது கரையோரமாக ஒதுங்கி விடும். வேறு எந்த வழியும் இல்லை” என்கிறார்.

இந்த ஆய்வானது பெருங்கடல் மாசுபாட்டை எதிர்ப்பதற்காக Sky Ocean Rescue என்ற ஐரோப்பிய நிறுவனத்தின் நிதி உதவியினால் மேற்கொள்ளப்பட்டது. ஆழமான கடல்பகுதிகள் பாலிக்குளோரைடு பைபினைல்ஸ் (PCB) மற்றும் பாலிப்ரமினேட் டைபினைல் ஈதர்ஸ் (PBDE) மூலம் மாசுபட்டன. PCB கள் பல தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மெழுகு அல்லது எண்ணெய் போன்ற வேதியியல் காரணி; நச்சுத்தன்மையின் காரணமாக இவற்றை 1979 ல் இருந்தே தடை செய்திருக்கிறார்கள். PBDE – யும் தடை செய்யப்பட்டது தான். இனப்பெருக்கம், நோய் எதிர்ப்பு மற்றும் நரம்பு மண்டலங்களை சீர்குலைக்கும் என்பதால் இவை இரண்டும் தடை செய்யப்பட்டது.

இது பூமிப்பந்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி. நம் வசதிக்காக நெகிழியைக் கண்டுபிடித்த நாம், சில பத்தாண்டுகளிலேயே அதன் மூலம் கடலின் சுற்றுச்சூழலை அழிக்கத் தொடங்கிவிட்டோம்.

marianna-trench-plastic-in-stomach-of-fish-amphipods
நீல நிறத்தில் தெரிவது மீனின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக். Credit: BBC

கடலில் கழிவுகளைத் தடுக்க என்று ‘வெற்றி பெற்ற முறை’ என்பது இதுவரை இல்லாதது பெரும் தோல்விக்கு வித்திடுவதாக சில சுற்றுச்சூழல் வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.

உலகிலேயே நெகிழி மாசுபாட்டை ஏற்படுத்தும் நாடுகளில் முதலிடத்தில் சீனா உள்ளது.  இரண்டாவது மிகப் பெரிய நெகிழி மாசுபாட்டை ஏற்படுத்தும் நாடான இந்தோனேசியா 2025-ல் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை 75 சதவீதம் குறைப்பதாக உறுதியளித்துள்ளது. ஆனால், இதைச் செய்ய அந்நாட்டுச் சட்ட விதிகள் போதுமானதாக இருக்கிறதா எனச் சில நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

வழக்கத்தை விட அதிகளவிலான மீன்பிடிப்பு, கழிவுநீர் கலப்பு, ரசாயன மாசுபாடு, கடலோரப் பகுதிகளின் வளர்ச்சி, பருவநிலை மாற்றம், கடல் அமிலம் மற்றும் அதிக சுரண்டலுக்கு உள்ளாகும் பவளப் பாறைகள் போன்ற பல்முனை தாக்குதல்களை கடலும், கடல்-வாழ் உயிரினங்களும் எதிர்கொள்கின்றன.

வழக்கத்தை விட அதிகளவிலான மீன்பிடிப்பு, கழிவுநீர் கலப்பு, ரசாயன மாசுபாடு, கடலோரப் பகுதிகளின் வளர்ச்சி, பருவநிலை மாற்றம், கடல் அமிலம் மற்றும் அதிக சுரண்டலுக்கு உள்ளாகும் பவளப் பாறைகள் போன்ற பல்முனை தாக்குதல்களை கடல் எதிர்கொள்கிறது.

ஆனால், பூமியின் பருவ நிலைகளுக்கு ஆதாரமாக இருக்கும் கடலைக் களங்கப்படுத்துவதை நாம் நிறுத்தவில்லை.


இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 15000 டன் நெகிழி கழிவு உற்பத்தி ஆகிறது; அதில் 9000 டன் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றது.

கடலில் 5 டிரில்லியன் எண்ணிக்கை அளவிலான தனித்தனி நெகிழித் துண்டுகள் உள்ளன என்றும், இவை 250,000 டன்  (227,000 மெட்ரிக் டன்) எடையுள்ளவை என்றும் 2014-ஆம் ஆண்டின் ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, ஒவ்வொரு ஆண்டும் கடற்கரையோரத்தில் 2.4 மில்லியன் டன் (2.2 மில்லியன் மெட்ரிக் டன்) பிளாஸ்டிக் கழிவுகள் ஒதுங்குவதாகவும், அவற்றில் 86% ஆசியாவின் நதிகளிலிருந்து கலப்பதாகவும் கூறுகிறார்கள்.


ஆழ் கடல்வாழ் உயிரினங்கள் சிறிய உணவுப் பொருட்களிலிருந்து தங்கள் ஆற்றலைப் பெறுகின்றன. அவை ஆழமான கடலுக்குக் கீழே செல்கின்றன. பிளாஸ்டிக்கின் சிறிய துண்டுகள் இந்த கடலில் கலந்தால் கூட, அந்த துண்டுகள் கடல்வாழ் உயிரினங்களால் உண்ணப்படும்.

இந்த மானுடவியல் சூழலமைப்புகள் பிற மிருகங்களால் பாதிக்கப்படுவதில்லை; முற்றிலும் மனிதனாலேயே பாதிக்கப்படுகின்றன.

நம் மக்கள் பெரும்பாலும் கறிக்கோழிகளை உண்டு வந்த நிலை மாறி, கடல் உணவு தான் பாதுகாப்பானது என்று அண்மைக் காலமாகத்தான் அதிகமாக அதை உண்ணத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், ஆழ்கடல் வாழ் மீன்களிலும் பிளாஸ்டிக் என்பது நிச்சயம் அசைவ உணவு விரும்புவோருக்கு பேரிடியாகும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!