பிளாஸ்டிக் குப்பைகள் நமது பூமிக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது நமக்கு நன்றாக தெரிந்த விஷயம் தான். ஏனெனில் பிளாஸ்டிக்கின் மட்கும் காலம் அதன் தன்மையை பொறுத்து 50 முதல் 1000 ஆண்டுகள் என நீளும். இவை நிலத்தில் மட்டுமல்ல கடலிலும் கூட இருப்பதால் உலகின் மொத்த சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதற்கு ஒரு இயற்கையான தீர்வு தான் பிளாஸ்டிக்கை உண்ணும் கடல் நுண்ணுயிர்கள். ஆம்! சில நுண்ணுயிர்களால் பிளாஸ்டிக்கை உண்ண முடியும்.

இந்த நுண்ணுயிர்கள் பிளாஸ்டிக்கை எப்படி கையாளுகின்றன என்பதையும் அவற்றை வேகப்படுத்தி அதன் மூலம் கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தீர்வு காணவும் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டு அதில் நல்ல முடிவையும் பெற்றுள்ளனர்.
பிளாஸ்டிக்
பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கலான பாலிமர்களைக் கொண்டவை. அவை நீளமாகவும், தண்ணீரில் கரைக்க முடியாத மூலக்கூறுகளின் தொடர் சங்கிலிகளை கொண்டிருக்கும். இதனால் தான் இவை மட்க பல ஆண்டுகள் ஆகிறது.
நுண்ணுயிரிகள் பிளாஸ்டிக்கின் மூலக்கூறு அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதால் பிளாஸ்டிக்கை எளிதில் சிதைக்கின்றன!!
பொதுவாக பிளாஸ்டிக் அதிக நேரம் சூரிய ஒளியில் பட்டவுடன் அது எளிதில் உடைய கூடியதாக மாறி விடும். கடலில் ஒரு முறை பிளாஸ்டிக் சென்றவுடன் அங்கு உள்ள UV கதிர்வீச்சு, ஏற்ற இறக்க வெப்பநிலை, உப்பு மற்றும் கடல் நீரில் உள்ள சிராய்ப்பு விசைகள் போன்றவை அந்த பிளாஸ்டிக்கை சிறிய சிறிய துண்டுகளாக உடைக்கும்.
பொதுவாக கடல் உயிரினங்கள் அவற்றின் செல்களின் உள்ளே மூலக்கூறுகளை கட்டமைக்க கார்பனை பயன்படுத்தும். அதனால் பிளாஸ்டிக்கை உண்ணும் நுண்ணியிரிகள் ஒரு வித நொதியை சுரந்து பிளாஸ்டிக்கின் வலிமையான இணைப்புகளை உடைத்து அதில் உள்ள கார்பனை உணவாக எடுத்துக் கொள்ளும். இது முற்றிலும் ஒரு இயற்கை உயிரியல் இயக்கம். இதனால் இது எந்த வித பாதிப்புகளும் இல்லாதது. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் இது மிகவும் மெதுவாக தான் நடக்கும்.

ஆராய்ச்சி
இந்த இயற்கை உயிரியல் இயக்கத்தை வேகப்படுத்த முடியுமா என்பதை ஆராய, ஆராய்ச்சி குழு கிரீஸிலுள்ள இரு கடற்கரைகளில் இருந்து பொதுவாக மளிகை பைகள் மற்றும் ஷாம்பு பாட்டில்கள் என எல்லா பிளாஸ்டிக்கிலும் காணப்படும் பாலிஎத்திலீன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களையும், உணவு மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் வழங்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள பாலிஸ்டைரின் எனப்படும் கடின பிளாஸ்டிக்கையும் தேர்வு செய்து எடுத்துள்ளனர். பின்னர் இந்த சேகரித்த பிளாஸ்டிக்கை கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக உடைத்து கடல் நீர் போல இருக்கும் உப்பு கரைசலில் போட்டு வைத்துள்ளனர்.
இறுதியாக இந்த துண்டுகள் கடலில் இயற்கையாக காணப்படும் இரண்டு வெவ்வேறு வகையான நுண்ணுயிர் வகைகளிடம் வைக்கப்பட்டன. அதே சமயம் பிளாஸ்டிக் மேற்பரப்பில் வலுவான ஒரு உயிரிபொருளை உருவாக்க, விஞ்ஞானிகளால் உயிரியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட நுண்ணுயிரிகள் உள்ள இடத்திலும் பிளாஸ்டிக் துண்டுகள் வைக்கப்பட்டன.
முடிவுகள்
5 மாதங்களுக்கு பின்பு இந்த பிளாஸ்டிக் துண்டுகளின் எடையை அளவிட்ட போது, பாலிஸ்டைரின் பிளாஸ்டிக்கின் எடை 11 சதவீதமும், பாலிஎத்திலீன் எடை 7 சதவீதமும் இந்த நுண்ணுயிரிகளால் குறைந்திருந்தது தெரியவந்தது.
பிளாஸ்டிக்கை உண்ணும் நுண்ணுயிரிகள் பிளாஸ்டிக்கின் மூலக்கூறு அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதால் அவை பிளாஸ்டிக்கின் பரப்பில் சில இரசாயன மாற்றங்களை அதாவது கார்பனைல் குழுக்களை உருவாகி அவற்றை எளிதாக சிதைத்துள்ளன. அதுவும் ஐந்தே மாதத்தில். இது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் என்கின்றனர் ஆராய்ச்சிக் குழுவினர்.

இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் தயாரித்த உயிரியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட நுண்ணுயிரிகள் முக்கிய பங்கு வகுத்துள்ளன. இவை பிளாஸ்டிக்கை அதிகம் சாப்பிடவில்லை என்றாலும், அதிக அளவில் உயிரி பொருளை உருவாக்கியுள்ளன என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. இந்த உயிரி பொருள் தான் இயற்கையான நுண்ணுயிரிகள் உண்ணும் வகையில் பிளாட்டிக்கிற்கு சுவையை தந்துள்ளன என்பதும் தெளிவாகியுள்ளது.
பிளாஸ்டிக்கை உண்ணும் நுண்ணுயிரிகளைக் கொண்ட ஆராய்ச்சிகள் எவ்வளவோ நடந்தாலும் இந்த ஆராய்ச்சி முடிவு நல்ல பலனைத் தருவதால் இது குறித்த அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் நிச்சயம் பிளாஸ்டிக் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும் என்று நம்பிக்கை அளித்துள்ளனர் இந்த குழுவினர்.
பிளாஸ்டிக் இயற்கைக்கு கெடுதல் என்றாலும் அதை முழுமையாக பயன்படுத்துவதை தடை செய்ய முடியவில்லை என்பதே உண்மை. அதனால் செயற்கை வழிமுறைகளை தவிர்த்து இது போன்ற இயற்கை முறைகள் மூலம் தீர்வு காண்பதே சிறந்த வழியாகும்!!!