கடலுக்கடியில் தங்குவதற்கு டென்ட் – ஆராய்ச்சியாளர்களுக்கு வரப்பிரசாதம்

Date:

வழக்கமான ஸ்கூபா டைவிங்கில் அனுமதிக்கப்படும் ஆழத்தை விட அதிகமான ஆழத்திற்கு செல்ல விரும்புவர்களுக்கு உதவியாக Ocean Space Habitat என்ற அமைப்பை வடிவமைத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இது கடலில் ஆழத்திற்கு செல்பவர்களுக்கு உதவும் சிறிய உயிர் காக்கும் அமைப்பு. இந்த ஊதப்பட்ட டென்ட் போன்ற அமைப்பில் ஒரே நேரத்தில் கடலுக்கடியில் இருக்கும் பல நபர்கள் வந்து ஓய்வு எடுக்க முடியும். இது கடலுக்கடியில் ஒரு கேம்ப் போல செயல்படும்.

1940 களில் Jacques Cousteau என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கூபா டைவிங்கிற்கு பிறகு கடலில் ஆராய்ச்சி செய்பவர்கள் கடலுக்கடியில் வெகு நேரம் இருக்க வழியை தேடி கொண்டே தான் இருந்தார்கள். ஏனெனில் காற்று டேங்கின் அளவு, அழுத்தத்தில் மனிதனில் உடலின் நடக்கும் மாற்றங்கள் போன்ற காரணங்களால் ஸ்கூபா டைவிங் செய்பவர்கள் கடலுக்கடியில் சென்ற உடனே அவ்வப்போது காற்றுக்காக வெளியே வந்தாக வேண்டும். இந்த கட்டுபாடுகளை நீக்க, கடலுக்கடியில் தங்க ஒரு டென்ட் போன்ற அமைப்பை வடிவமைத்துள்ளார்கள்.

இந்த அமைப்பை Michael Lombardi (Lombardi Undersea LLC) மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இணை பேராசியராக இருக்கும் Winslow Burleson வடிவமைத்து அண்மையில் அதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளனர்.

scuba diving

SCUBA

Self-Contained Underwater Wreathing Apparatus (SCUBA) என்பது கடலுக்கடியில் செல்லும் போது மூச்சுவிடுவதற்காக உபயோகப்படுத்தும் கருவி. அதாவது கடலுக்கடியில் மூழ்குபவர் சுவாசிக்க ஆக்சிஜன் வழங்கும் சிலிண்டரை எடுத்து செல்வார். இதன் உதவியால் நீருக்கடியில் செல்வதை Scuba diving என்கிறோம்.இதன் மூலம் ஓரளவு எளிதாக நீந்த முடியும். பொதுவாக ஸ்கூபா மூலம் சுமார் 40-50 மீட்டர் வரை தான் செல்ல முடியும். குறைந்த ஆழத்தில் இருப்பதானால் சிலிண்டரிலிருந்து கிடைக்கும் காற்றின் அழுத்தம் சாதாரணமாக இருந்தால் போதும். மேலும் ஆழத்தில் இறங்கும்போது அந்த ஆழத்தில் இருக்கின்ற அழுத்தத்திற்கு ஏற்ப சிலிண்டரிலிருந்து அதிக அழுத்தத்தில் காற்றைப் பெற வேண்டும். இப்படி மாற்றிக் கொள்ள சிலிண்டரில் அமைப்புகள் இருக்கும்.

தடைகள்

நீருக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவது என்பது சுலபமான விஷயம் அல்ல. ஓரளவு ஆழத்திற்குச் செல்ல உதவும் ஸ்கூபா டைவிங்கில் கூட சில தடைகள் இருக்கிறது.

கடலின் ஆழத்திற்கு செல்ல செல்ல மனித உடல் காற்றை வேகமாக எடுத்துக்கொள்ளும். அதனால் கடலுக்கடியில் அதிக தூரம்  செல்லும் பொது காற்று தீர்ந்து விடுவதால் சீக்கிரம் வர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இந்த டென்ட் அமைப்பில் நீந்துபவர்கள் கருவிகளை நீக்கி விட்டு பேசலாம், சாப்பிடலாம், சேகரித்த மாதிரிகளை சோதிக்கலாம்!

அழுத்த வேறுபாடு

பொதுவாக நம் தலைக்கு மேலே உள்ள காற்றானது நம்மை நாலா புறங்களிலுமிருந்து சதுர சென்ட்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்திக்கொண்டிருக்கிறது. இதைத் தான்  காற்றழுத்தம் என்பார்கள். எப்போதும் இது நடப்பதால் இந்த அழுத்தத்தை நாம் உணருவதில்லை. தண்ணீருக்கும் எடை உண்டு என்பதால் நீருக்குள் இறங்கும் போது காற்றின் எடையுடன் நீரின் எடையும் சேர்ந்து நம்மை அழுத்த ஆரம்பிக்கும். கடலில் மேலும் மேலும் ஆழத்தில் இறங்கும் போது அழுத்தம் அதிகரித்துக்  கொண்டே போகும். கடலில் 30 மீட்டர் ஆழத்தில் அழுத்தம் நான்கு மடங்காகி விடும்.மேலும் கடலின் ஆழத்திற்கு செல்ல செல்ல மிகவும் குளிர்ச்சியாகவும் இருட்டாகவும் இருக்கும்.

கடலுக்கு வெளியே ஒருவர் சுவாசிக்கும்போது நுரையீரலானது காற்றில் அடங்கிய ஆக்சிஜன் வாயுவை மட்டும் எடுத்துக் கொள்ளும். காற்றில் அடங்கிய நைட்ரஜன் வாயு உட்பட பிற வாயுக்கள் வெளி மூச்சுடன் வெளியே வந்துவிடும். ஆனால் கடலுக்குள் ஆழத்தில் இறங்கும் போது சிலிண்டரில் உள்ள காற்றில் அடங்கிய நைட்ரஜன் வாயுவும் ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும். ஆழத்திற்கு செல்ல செல்ல ரத்தத்தில் கலக்கும் நைட்ரஜன் அளவும் அதிகமாகி கொண்டே போகும். அப்படிக் கலப்பதால் உடனடியாக ஆபத்து எதுவும் ஏற்பட்டு விடாது.

gas bubble

Credit: Diver Clinic

பெண்ட்ஸ்

கடலில் நல்ல ஆழத்தில் செயல்படுகிற ஒருவர் திடீரென மேலே வர முற்பட்டால் ஆபத்து. முறையற்ற ஏற்றதினால் பெண்ட்ஸ் (Bends or Decompression Sickness ) ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்குப் பிடிப்பு ஏற்படும். உடலின் மூட்டுகள், நுரையீரல், இதயம், தோல் போன்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். சில சமயம் இறப்பு  கூட ஏற்படலாம்.   ஏனெனில் உடனடியாக மேலே வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள நைட்ரஜன் வாயுவானது குமிழிகளாக மாறி அவை ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை உடைத்து வெளி வர வாய்ப்புள்ளது. எனவே அதிக ஆழத்தில் இருந்து கொஞ்சம் உயரே வந்து அங்கே சிறிது நேரம் தங்கி இருக்க வேண்டும். பிறகு இன்னும் கொஞ்சம் மேலே வந்து அங்கு கொஞ்ச நேரம் இருக்க வேண்டும். இதன் மூலம் உடலில் கரைந்த மந்த வாயுக்களை வெளியேற்ற முடியும் (Decompression).

அப்படியின்றி அவர் உடனே மேலே வருவதாக இருந்தால், அழுத்தக் குறைப்புக் கூண்டுக்குள் (Decompression Chamber) பல மணி நேரம் தங்கி விட்டுப் பிறகு வெளியே வரவேண்டும். அழுத்தக் குறைப்பு கூண்டுக்குள் படிப்படியாக அழுத்தத்தைக் குறைக்கிற அம்சம் இருக்கும்.

portable underwater decompression habitat

Credit: Subslave USA

சிறப்பம்சங்கள்

இந்த தடைகளை சமன் செய்யும் விதத்தில் அந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சுவாசிக்கும் அறை இருக்கும். ஒரே நேரத்தில் பலர் வந்து ஓய்வு எடுக்கலாம், அவர்கள் கருவிகளை நீக்கி விட்டு பேசலாம், சாப்பிடலாம், அவர்கள் சேகரித்த மாதிரிகளை சோதிக்க கூட செய்யலாம். மீண்டும் அதனை பேக் செய்து செல்லும் இடத்திற்கு கொண்டு செல்லலாம். ஏன் உடலில் Decompression நடக்கும் வரை தூங்க கூட செய்யலாம். இதில் ஒரு இரவு முழுக்க இருவர் தங்க முடியும். இங்கு தங்கி ஆபத்தான விலங்குகளிடம் இருந்து கூட தப்பிக்கலாம்.

ஏதாவது அவசரம் என்றால் இங்கு வந்து  பிறருடன் தொடர்பு கொள்ளவும் முடியும். புகைப்படம் எடுப்பவர்கள், கடல் உயிரினங்களை ஆராய்ச்சி செய்பவர்களை பொறுத்தவரை ஒவ்வொரு நொடியும் முக்கியம் தான். தேவையற்ற நேரங்களில் தொடர்ந்து நீரில் இருக்காமல் இங்கு தங்கி தேவைப்படும் போது மட்டும் நீருக்குள் இறங்கலாம். உண்மையில் இது ஒன்றும் புது யோசனை அல்ல. ஏற்கனவே அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக கடலுக்கடியில் Aquarius என்ற ஆய்வகம் உள்ளது. இதனை National Oceanic and Atmospheric Administration (NOAA) என்ற நிறுவனம் ஆராய்ச்சிகளுக்காக அமைத்தது. ஆனால் இது நகர கூடியது அல்ல.

தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள டென்ட் போன்ற அமைப்பை தேவைப்படும் போது ஊதி உபயோகப்படுத்தலாம். இதன் விலையும் குறைவு தான். இதன் மூலம் நாம் செய்ய நினைத்ததை நிதானமாக செய்ய முடியும். மேலும் கடலுக்கடியில் செல்ல நினைப்பவர்களுக்கு இதன் வடிவமைப்பார்கள் இதனை  வழங்கவும் முன்வந்துள்ளார்கள்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!