வைரங்களைப் பொறுத்தவரை நீல நிற வைரம் என்பது மிக அதிசயமான விஷயமாக கருதப்படுகிறது. ஏனெனில் இயற்கையாக உருவாகும் வைரத்திற்கு நிறம் கிடையாது. அதாவது வெண்மையாகத்தான் இருக்கும். செயற்கையாக வைரங்களுக்கு நிறத்தினை அளிக்கும் முறைகள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. ஆனால் தற்போது போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த நீல நிற வைரம் முழுவதும் இயற்கையாக உருவானது. வரலாற்றிலேயே சில வைரங்கள் தான் இப்படி கிடைத்திருக்கின்றன. போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய நீல நிற வைரம் இப்போது கிடைத்ததுதான்.

100 கோடி ஆண்டுகள்
இந்த வைரத்தை வெட்டி எடுத்த நிறுவனம் ஒகாவாங்கோ (Okavango). இதனால் இந்த வைரத்தை ஒகாவாங்கோ ப்ளூ என்று அழைக்கிறார்கள். இதுகுறித்து அந்த நிறுவனம் வெளிவிட்டிருக்கும் அறிக்கையில்,” இம்மாதிரியான வைரம் உருவாக 100 – 300 கோடி ஆண்டுகள் ஆகும். கடல்பரப்பில் இருந்த எரிமலைக்குழம்புகள் மண்ணுக்குள் கோடிக்கணக்கான வருடங்கள் புதைந்து இந்த அதிசயத்தை உருவாக்கியிருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெட்டி எடுக்கும்போது 41.11 கேரட் இருந்திருக்கிறது இந்த “பேன்சி ப்ளு” (இதுவும் அந்த வைரத்தின் பெயர்தான்) பட்டை தீட்டி, பாலிஷ் எல்லாம் செய்ததற்குப்பின்னர் 20.46 கேரட் தேறியிருக்கிறது.

ஹோப் வைரம்
ஒகாவாங்கோ ப்ளூவிற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டஹோப் வைரம் மிகவும் பிரசித்தி பெற்றது. 45.52 கேரட் எடை கொண்ட இந்த வைரத்தை விட சிறியது இந்த ஒகாவாங்கோ ப்ளூ. தற்போது இந்த ஹோப் வைரம் அமெரிக்காவின் வாஷிங்க்டன் நகரத்தில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதனை ஆய்வு செய்த நிபுணர்கள் இது VS1 தரமுள்ள வைரம் எனச் சான்றளித்திருக்கிரார்கள். ஆனால் ஒகாவாங்கோ ப்ளூவிற்கு VVS2 சான்றிதல் கொடுக்கப்பட்டுள்ளது.
அது என்ன VVS2 ?
வைரத்தின் உள்ளே உள்ள ஒருங்கமைவுகள், பட்டை தீட்டப்பட்ட விதம், தூய்மை ஆகியவற்றை 10 மடங்கு திறனுள்ள உருப்பெருக்கியால் எளிதாக அடையாளம் காணமுடிந்தால் அது VS1 ரகம் எனப்படுகிறது. VS1 என்றால் Very Slightly Included என்று பொருள்.

மேற்கண்ட குணங்களை அதே 10 மடங்கு திறனுள்ள உருப்பெருக்கியால் கண்டுபிடிக்க கடினமாக இருப்பவை VVS2 (Very, Very Slightly Included) எனப்படுகிறது.
மில்லியன்கள்
இம்மாதிரியான அடர் நீல நிற வைரங்கள் கிடைப்பது அரிதிலும் அரிது. உலக வரலாற்றில் மிகக்குறைந்த அளவிலான நீல நிற வைரங்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. சந்தேகமே இல்லாமல் இது ஒரு அதிர்ஷடம் தான். எப்படியும் இதன் ஆரம்ப விலை மில்லியன் டாலரில் இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் ஒகாவாங்கோ நிறுவனத்தின் தலைவர் டேர் ஹார் (ter Haar).
ஆரம்பம்
இந்தியாவில் (கோல்கொண்டா) தான் முதன்முதலில் இந்தவகை நீல நிற வைரங்கள் முதன்முதலில் வெட்டி எடுக்கப்பட்டன. அதன்பின்னர் தான் உலகம் முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நீல நிற வைரங்கள் அவ்வப்போது தலைகாட்டத் தொடங்கின.