உலகளவில் மாற்று இறைச்சிக்கான சந்தை மிக வேகமாக வளர்ந்து வரும் வேளையில், அதன் முதல்கட்டமாக ஆய்வுகூடத்தில் வைத்து வளர்க்கப்பட்ட செயற்கை இறைச்சி உணவகங்களில் விற்பனைக்கு வருகின்றது. ஆய்வகத்தில் வைத்து உருவாக்கப்பட்ட செயற்கை கோழி இறைச்சியை விற்பனை செய்ய சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சிங்கப்பூரில் அமைந்துள்ள ஷியோக் மீட்ஸ் (Shiok Meats) என்ற நிறுவனம், இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம், ஆய்வகத்தில் வளர்ந்த இறைச்சியை உணவகங்களில் விற்பனை செய்யும் உலகின் முதல் நிறுவனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் மூலம், மனித அடிமைத்தனம் (human slavery) மற்றும் (environmental concerns) சுற்றுச்சூழல் பாதிப்புகள் தடுக்கப்படும். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் இவற்றை சூப்பர்மார்க்கெட் விற்பனைக்கு கொண்டு வருவது என்பது மிகுந்த சவாலாக உள்ளது. எனவே, இதனை முதலில் ஷியோக் மீட்ஸ் (Shiok Meats) நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் விற்பனை செய்ய இருக்கிறது.
இந்நிறுவனம் வரலாற்றில் முதல் முறையாக ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சியை விற்பனை செய்யும் முதல் உணவகமாக கருதப்படுவதாக, ஆய்வக வளர்ப்பு இறைச்சி நிபுணர் சேஸ் பூர்டி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் கூறினார்.

மலிவான விலையில் விற்பனை!
இதற்கு முன்னதாக பல நிறுவனங்கள், ஆய்வக வளர்ப்பு இறைச்சி முறையை கொண்டு வந்திருந்தாலும், இதன் விற்பனை மிகவும் குறைவான விலையில், மற்ற நிறுவனங்களுக்கு முன் மாதிரியாக இருக்கும் என்றார்.
இதன் ஒரு பவுண்டுக்கான விலை, இந்திய மதிப்பில் சுமார் 1,66,000 ($2,268) முதல் வெறும் 1,15,000 ($1,588) ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டுக்குள் இதன் விலை நூறு மடங்கு மலிவாக இருக்கும் என்றார். இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில், அடுத்தகட்டமாக ஆய்வகத்தில் நண்டு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

மனிதர்கள் உண்பதற்கு பாதுகாப்பானது என்று சிங்கப்பூர் உணவு முகமை (Singapore Food Agency) இந்த செயற்கை கோழி இறைச்சியை அங்கீகரித்துள்ளது. இதன் தயாரிப்பு முறை, பாதுகாப்பு சோதனை ஆகியவற்றுக்குப் பிறகே இந்த செயற்கை கோழி இறைச்சியை விற்க அனுமதி அளிக்கப்பட்டதாக அந்த முகமை தெரிவித்துள்ளது. செயற்கை கோழி இறைச்சி முதலில் சிங்கப்பூரில் விற்பனைக்கு வர உள்ளது.
மேலும், இதன் மூலப்பொருட்களில் நச்சுத்தன்மை உள்ளதா, உணவுப் பொருளின் தரம் தொடர்பான விதிமுறைகளை இந்த செயற்கை இறைச்சி பூர்த்தி செய்கிறதா என்பன போன்றவை ஆராயப்பட்டதாகவும் சிங்கப்பூர் உணவு முகமை கூறியுள்ளது.