தென்னிந்தியாவில் விழுந்த பிரம்மாண்ட விண்கல்!!

0
93
artist-impression-asteroid-impact-earth
Credit: ExtremeTech

விண்வெளியிலிருந்து பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் விண்கற்கள் பெரும்பாலும் கடலில் விழுந்துவிடும். சில சமயம் தரையில் வந்தும் விண்கற்கள் மோதுவதுண்டு. அப்படியான நிகழ்வு தென்னிந்தியாவில் நடந்ததற்கான சான்றுகளை கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். கடல்சார் புவியியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த K.R. சுப்ரமண்யா மற்றும் புவியியல் ஆராய்ச்சித்துறை பேராசிரியர் K.N. பிரகாஷ் நரசிம்மா ஆகியோர் இந்த ஆராய்ச்சியினை மேற்கொண்டு ஆய்வுக்கட்டுரை ஒன்றினை சமர்பித்திருகின்றனர். இந்த கட்டுரை கடந்த ஆண்டின் சிறந்த ஆய்வுக்கட்டுரைக்கான இராதாகிருஷ்ணன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

Kaviri Crater
Credit: Twitter

இதற்காக பேரிய மற்றும் நுண்ணிய முறை நில ஆய்வுகள் தென்னிந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்டிருகின்றன. இதன்மூலம் 800 – 550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய விண்கல் தென்னிந்தியாவில் மோதியது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆய்வுக்கட்டுரை

ஆதிகாலத்தில் வாழ்ந்த டைனோசர்கள் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை மோதியதால் அழிந்துபோயின. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்வும் அப்படியொரு அழிவினை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆய்வு முடிவுகளின் படி விண்கல் வந்து மோதிய இடத்தில்  சுமார் 120 கிலோமீட்டர் சுற்றளவில் பிரம்மாண்ட பள்ளம் உருவாகியிருக்கிறது.

புவியியல் தரவுகளின்படி மோதிய விண்கல் சுமார் ஐந்து கிலோமீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பள்ளம் அமைந்திருக்கும் இடம் நீலகிரி மலைத்தொடருக்கும், கொடைக்கானலுக்கும் இடையே இருக்கிறது. இதற்கு “காவிரிப் பள்ளம்” என்று பெயரிட்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திம்பம் காடுகள், கேரளாவில் உள்ள பாலக்காடு மற்றும் கர்நாடகாவில் உள்ள சிவனசமுத்ரம் ஆகியவை இந்த காவிரிப்பள்ளத்திற்குள் இருக்கிறது. அளவில் மிகப்பெரியது என்பதால் செயற்கைக்கோள் உதவியுடன் மட்டுமே இதனைத் தெளிவாகப் பார்க்க முடியும். பூமியில் விண்கல் பாதிப்பினால் உருவான நான்காவது பெரிய பள்ளம் இதுவாகும்.

டைனோசர்கள் காலம்

தற்போதைய தரவுகளின் படி டைனோசர்கள் அழிந்த காலம் என வரையறுக்கப்படுவது 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்தான். இந்த பள்ளம் உருவானது அதற்கும் பல்லாண்டுகளுக்கு முன்னர் என்பதால் இதனுடைய தாக்கம் எப்படி இருந்திருக்கக்கூடும் என்பது பில்லியன் டாலர் கேள்வியாக எஞ்சுகிறது. மேலும் டைனோசர்களின் அழிவின் ஆரம்பப்புள்ளியாக இந்த விண்கல் தாக்குதல் இருந்திருக்கக்கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

artist-impression-asteroid-impact-earth
Credit: ExtremeTech

எல்லாம் சரி, இத்தனை பெரிய பள்ளம் உருவாகக் காரணமாக இருந்த விண்கல்லின் அளவு எப்படி இருந்திருக்கும்? அதற்கும் விடை கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். புவியியல் தரவுகளின்படி மோதிய விண்கல் சுமார் ஐந்து கிலோமீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.