தமிழகத்தின் தேனி மாவட்டத்தில், இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையில், 1500 கோடி செலவில் இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் ( INO- India-based Neutrino Observatory) தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு கடந்த சில மாதங்களாக தமிழக மக்கள் பல்வேறு வகைகளில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஒருபுறம் மக்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக மாபெரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசானது வழக்கம் போல் இது தொடர்பாகவும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் அரசின் மீது வெறுப்பில் உள்ளனர்.
நாம் இக்கட்டுரையில் மக்களுக்கு புரியும் வண்ணம் நியூட்ரினோ திட்டம் பற்றியும், அதனால் யாருக்கு என்ன பயன், மக்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பற்றியும் சிறிது விளக்கமாக இங்கு காண்போம்.
நியூட்ரினோ என்பது என்ன?
சூரியனிலிருந்தும் விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுவின் (Atom) அடிப்படை துகள் (Elementary Particles) தான் இந்த நியூட்ரினோ(தமிழில்: நுண்நொதுமி). நாம் எவ்வாறு காற்று சூழ்ந்துள்ள இந்த உலகில் உலாவி வருகிறோமோ அதே போல், கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் நம் உடலில் புகுந்தும் வெளியேறியும் வருகிறது. இயற்கையாகவே இது நடப்பதால், நம் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. நம் உடலில் ஒரு சதுர செ.மீ- க்குள் பல லட்சம் துகள்கள் ஒவ்வொரு நிமிடமும் ஊடுருவிச் செல்வதாக கூறுகின்றனர் அறிவியல் அறிஞர்கள்.
நியூட்ரானும், நியூட்ரினோவும் ஒன்றா?
நாம் நமது பள்ளிப்படிப்பில் நியூட்ரான், எலக்ட்ரான், புரோட்டான் ஆகியவை பற்றி படித்திருப்போம். நம்மில் சிலர் நியூட்ரினோவும் நியூட்ரானும் ஒன்று என்றோ, இரண்டுக்கும் தொடர்பு இருக்கும் என்றோ நினைத்திருப்போம். உண்மையில், இவை இரண்டும் வேறு வேறு. ஒன்றுக்கொன்று தொடர்பு ஏதும் இல்லாதவை.
நியூட்ரினோ ஆய்வு தொடக்கம்
இந்தியாவில் முதன் முதலில் நியூட்ரினோ பற்றிய ஆய்வு 1962 ஆம் ஆண்டு கோலார் தங்க வயலில் தான் தொடங்கியது. பின்னர் கோலார் தங்க வயல் மூடப்பட்டதும், வேறு பல காரணங்களால் நியூட்ரினோ ஆய்வும் நிறுத்தப்பட்டது. பல்வேறு இந்திய இயற்பியலாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் நியூட்ரினோ பற்றிய ஆய்வை தொடங்க இந்திய அரசை கேட்டுக்கொண்டதால் இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடம் தேனி அருகில் தொடங்கப்படவுள்ளது.
நியூட்ரினோ ஆய்வு செய்ய வேறு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து இடம் ஒதுக்காததால் இறுதியில் வழக்கம் போல் தமிழ் நாட்டிற்கு வந்தது. தேனி மாவட்டத்தை தேர்ந்தெடுத்த பின்பு, சுற்றுச்சூழல் சீர்கேடு, தண்ணீர் பாதிப்பு போன்ற காரணங்களால் தேனி வாழ் மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் போராட்டத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரகம் அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதி வழங்கி விட்டது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பின் 30 நாட்களில் பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூட்ரினோ ஆய்வு மையத்தில் செய்யப்போவது என்ன ?
இந்த ஆய்வு மையத்தில் 50,000 டன் எடையுள்ள காந்த புலம் நிறைந்த Iron Calorimeter (ICAL), (தமிழில்: கலோரிமானி) ஒன்று வைக்கப்படவுள்ளது. இந்த கலோரிமானியைப் பயன்படுத்தி நியூட்ரினோக்கள் கண்டறியப்படும் (Neutrino Detector).
இந்த ஆய்வு மையம் பயன்பாட்டுக்கு வந்தால் உலகின் மிகப்பெரிய காந்தத்தை உள்ளே கொண்டிருக்கும் மையமாக இது இருக்கும். இங்கு வைக்கப்படும் காந்தத்தின் எடை 50,000 டன். இந்த காந்தமானது ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள CERN ஆய்வு மையத்தில் இருக்கும் 12000 டன் எடை கொண்ட காந்தத்தை விட நான்கு மடங்கு பெரியதாக அமையப்போகிறது.

இந்த ஆய்வில் நியூட்ரினோக்கள் கண்டறியப்படும். நியூட்ரினோக்கள் உற்பத்தி செய்யப்படாது என்றும் இந்திய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால், 1500 கோடி ரூபாய் செலவழித்து செய்யப்படும் இந்த திட்டத்தை அரசு சில ஆண்டுகளுக்கு பிறகு விரிவாக்கம் செய்யாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. விரிவாக்கம் செய்து, நியூட்ரினோ உற்பத்தி செய்தால் அப்பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம்.
ஏன் மலையை தேர்வு செய்தனர்?
தேனி மாவட்டத்தில் உள்ள போடி மலைத்தொடர் மிகவும் அடர்த்தியான வனப்பகுதி. இங்கு அம்பரப்பர் மலை என்ற பெயரில் பழங்குடி மக்களால் வணங்கப்படும் மலை மிகப்பெரியது. இது ஒரே பாறையால் ஆனதால், இந்த ஆய்வுக்கு மலையே இயற்கையான சுவராகவும், நல்ல தடுப்பாகவும் இருக்கும் என்பதாலும் இம்மலை தேர்ந்தெடுக்கப்பட்டது.
மலையில் செய்யப்போவது என்ன?
அம்பரப்பர் மலையின் உச்சியிலிருந்து 1.3 கி.மீ (1,300 மீட்டர்) ஆழத்தில் ஆய்வுக் கூடம் அமையவுள்ளது. அம்பரப்பர் மலையை பக்கவாட்டில் இருந்து குடைந்து 2.1 கி.மீ (2100 மீட்டர்) நீளமுள்ள சுரங்கம்(Tunnel) அமைக்கப்படும். இந்த சுரங்கத்தின் அகலம் 7.5 மீட்டர். சுரங்கத்தின் வழியே உள்ளே சென்றால் ஆய்வுக் கூடத்தை அடையலாம்.
இந்த சுரங்கம் தற்போது நமது சென்னையில் நிலத்தடியில் (Underground) செல்லும் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் போல் அமைக்கப்படும்.

11,25,000 டன் எடை கொண்ட பாறையை 1000 டன் வெடிமருந்து பயன்படுத்தி அம்மலையைக் குடைய முடிவெடுத்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் ஒலி மாசு (Noise Pollution), காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். வனவிலங்குகளும் இடம் பெயரும் நிலைக்குத் தள்ளப்படும்.
என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
- நிலம்:
- தேர்ந்தெடுக்கப்பட்டது மலைப்பகுதி என்பதால், சுரங்கம் அமைக்க 10000 கிலோ வெடி மருந்துகள் பயன்படுத்தும் போது, நில அதிர்வுகள் தோன்றலாம்.
- இதனால் அருகில் உள்ள 12 அணைகளுக்கு ஏதேனும் பாதிப்பு நேரலாம்
- நீர்:
- திட்டத்திற்கு 340000 லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு தேவை. இது, ஒரு நாளைக்கு 1,00,000 பேர் குடிக்கக்கூடிய தண்ணீரின் அளவாகும் .
- மத்திய அரசு முல்லை பெரியாறு அணையிலிருந்து நாளொன்றுக்கு 340 கிலோ லிட்டர் தண்ணீரை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இது நேரடியாக கேரளாவில் இருந்து பெறப்படும் எனின் தமிழகத்திற்கு தண்ணீர் தொடர்பாக பெரிய இழப்பு இல்லை. ஆனால், கேரளா தண்ணீர் தர மறுத்தால், தமிழகமே தண்ணீரை தரவேண்டி இருக்கும்.
- ஏற்கனவே, தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தலை விரித்து ஆடுகிறது. மக்களுக்கு தேவையான நீர் இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படுவதால் மக்களுக்கு இழப்பு தானே தவிர ஒரு நன்மையையும் இல்லை.
- காற்று:
- 10000 கிலோவுக்கும் மேல் வெடி மருந்துகள் வைத்து மலையைக் குடைவார்கள். இதனால் நச்சுக்காற்று அப்பகுதியை சூழும்.
- வெடிமருந்துகள் வெடிப்பதால், பாறையில் இருந்தும் புகை மண்டலம் கிளம்பி காற்றை கெடுக்கும்.
- ஆய்வு தொடங்கிய பிறகு, ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக்காற்றால் பிற்காலத்தில் பல பிரச்சினைகள் வரும்.
- மக்கள்:
- தண்ணீர் பற்றாக்குறை வரும்.
- விவசாயம் செழிக்காது.
- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.
- ஆய்வுகூடத்தில் சில ஆராய்ச்சியாளர்கள், மற்றும் வெகு சில உதவியாளர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள் என்பதால் வேலை வாய்ப்பு வகையிலும் மக்களுக்கு பயனில்லை.
- பழங்குடி மக்களின் வாழ்விடமாக இது இருப்பதால், அவர்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும்.
- மலைவாழ் மக்களின் முக்கிய தொழில் விவசாயம். இயற்கையை மட்டுமே நம்பி வாழும் மலைக்கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.போதுமான கல்வி அறிவும் அவர்களிடம் இல்லை. இயற்கையில் கிடைக்கக்கூடிய தேன், கிழங்குகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்று பிழைப்பை நடத்துகின்றனர்.
- விலங்குகள்:
- இயற்கைச்சூழல் மாறுவதால், பறவைகள், விலங்கினங்கள் பெரும் அவதிக்குள்ளாகி இடம் பெயரும் நிலை வரும். அதுமாதிரியான சூழலில் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது போன்ற அபாயங்கள் ஏற்படலாம் (யானைகளின் வழித்தடத்தில் கட்டப்பட்ட ஈஷா யோக மையத்தால், யானைகள் ஊருக்குள் நுழைவதை நாம் ஏற்கனவே அனுபவித்து வருகிறோம்)
யாருக்கு, என்ன பயன்?
நியூட்ரினோ திட்டமானது இந்தியாவுக்கு அறிவியலில் பெருமை சேர்க்கும். சில ஆராய்ச்சியாளர்கள் பயன் பெறக்கூடும்.
2005 ல் இந்தியா -அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போதைய பாரத பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களும், அன்றைய அமெரிக்க அதிபர் திரு.ஜார்ஜ் புஷ் அவர்களும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போதைய எதிர்க்கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் தான் இதற்கு பின்னணியா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.
இது அணுக் கதிர்வீச்சு திட்டம் இல்லை என்றால், எதற்காக இந்திய அணுசக்தி கழகம் அனுமதி வழங்கி இருக்கிறது என்பது போன்ற விடை தெரியா கேள்விகள் ஏராளம்.
இது அணுக் கதிர்வீச்சு திட்டம் இல்லை என்றால், எதற்காக இந்திய அணுசக்தி கழகம் அனுமதி வழங்கி இருக்கிறது என்பது போன்ற விடை தெரியா கேள்விகள் ஏராளம்.
என்ன செய்யப் போகின்றனர் மக்கள்?
நியூட்ரினோவினால் இப்போது உடனடி பாதிப்பு சிறிது என்றாலும், பிற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நிச்சயம் சுற்றுச்சூழல், நீர் பாதிக்கப்படும். நியூட்ரினோவால் இது வரை எந்த ஒரு பலனும் இல்லை. ஆராய்ச்சிக்கு மட்டும் ஏன் மத்திய அரசு 1500 கோடி செலவில் தொடங்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கேள்வி.
தமிழகத்தை சுற்றிச் சூழும் பிரச்சினையால் என்ன செய்யப் போகின்றனர் தமிழக மக்கள்? அரசு என்ன செய்யப்போகிறது? விடை தெரியா கேள்விகளுடன் விடை பெறுகிறேன் இப்போது.