இடப்பெயர்ச்சி தான் உயிர்களுக்கு இன்றியமையாதது. கால்களாகட்டும் கார்களாகட்டும் அல்லது சனி, ராகு – கேது போன்ற கிரகங்கள் ஆகட்டும் அவை நகர்ந்தால்தான் மனித இனம் இயங்கும். ஆப்பிரிக்காவில் முதலில் தோன்றிய மனித இனமும் அதே ஆப்பிரிக்காவில் தோன்றிய எச்ஐவி கிருமியும் உலகம் முழுதும் பரவ இதே பெயர்ச்சிதான் காரணம். அப்படிப்பட்ட அதிவேக பெயர்ச்சி தான் இந்த ஹைபர்லூப் (Hyper loop).

சுமார் கிமு 5800 வில் மனிதன் நடந்து இடம்பெயர ஆரம்பித்தான். கிமு 3500 யில் சக்கரம், கிமு 3000 ல் ஓட்டகங்கள், கிபி 1400 களில் குதிரை மற்றும் மாட்டுவண்டிகள், 1804 ல் உலகின் முதல் இரயில், 1885 ல் முதல் தானியங்கிகள், 1903 ல் விமானம், 1961 ஆம் ஆண்டில் விண்வெளிப் பயணம் என இடப்பெயர்ச்சி பரிமாணம் அடைந்து கொண்டே வந்திருக்கிறது. விண்வெளி பயணத்திற்குப் பிறகு இந்த குறிப்பிட்ட வாகனங்களே காலப்போக்கில் தொழில்நுட்ப உதவியால் மேம்படுத்தபட்டதே ஒழிய புதியதொரு பயணத்தை யாரும் கண்டறிந்து பிரம்மிப்பை ஏற்படுத்தவில்லை. அப்படியான அடுத்த தலைமுறை பிரயாணம்தான் இந்த ஹைபர்லூப்.
Elon Musk
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா கார் நிறுவனங்களைத் தோற்றுவித்த எலான் மஸ்க் (Elon Musk) இன்றைய தொழில்நுட்ப தலைசிறந்த பொறியாளர்களுள் முக்கியமானவர் ஆவார். இவரால் 2012 ல் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த ஹைபர்லூப் யோசனை. பொதுவாக பயணங்களை எது தாமதப்படுத்துகிறது? காற்றுத் தடை மற்றும் உராய்வுகளே. இந்த இரண்டு தடைகளும் இல்லாவிட்டால் என்ன வேகத்தில் ஒருவர் பயணிக்க முடியும்? இப்படித்தான் மஸ்க் அவர்களுக்கு ஹைபர்லூப் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக்கொண்டது. ஏற்கனவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமெரிக்கா தன் சொந்த மண்ணில் இருந்து விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அழைத்துச்செல்லும் டிராகன் 2 (dragon 2) மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய ராக்கெட்டுகள் என பழையபுராணங்களுக்கு புதுமையூட்டிவர் இவர். “ஓபன் சோர்ஸ் (open source) “ முறையில் இந்த ஹைபர்லூப் யோசனையை யார் வேண்டுமானாலும் ஸ்பேஸ் எக்ஸ் உதவியோடு கட்டமைக்கலாம் என அவர் அறிவித்திருந்தார். அதன்படி வருடந்தோறும் நடைபெறும் ஹைபர்லூப் போட்டியில் வடிவமைப்பு மற்றும் செயலாக்கம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் குழுக்களைத் தேர்வு செய்து அவர்களது ஆராய்ச்சிக்கு ஸ்பேஸ் எக்ஸ் உதவும். ஹபர்லூப்பின் எதிர்கால பயன்பாட்டை உணர்ந்த trabspod, virgin one, Hyperloop transmission technology போன்ற பல நிறுவனங்கள் மனிதனை அதிக வேகத்தில் நகர்த்த முழு வீச்சில் இயங்க ஆரம்பித்தன.

ஹைபர்லூப் (Hyperloop)
“கேப்ஸ்யூல்” எனப்படும் சிறிய அறையில் மனிதர்களை பலநூறு கிலோமிட்டர் தொலைவுக்கு சில மணி நேரத்தில் அனுப்பக்கூடியதே இந்த ஹைபர்லூப்பின் சிறப்பம்சம். ரோலர் கோஸ்டர் போன்றுதான் இதன் செயல்பாடு. பல கிலோமீட்டர் நீண்ட உலோகக் குழாயில், முழுவதும் வெற்றிடம் (vaccum) என்று சொல்லக்கூடிய அளவிற்கு காற்றை உறிஞ்சி எடுத்துவிடுவார்கள். அக்குழாயில் சில அடி இடைவெளியில் “ஸ்டேட்டர் மேக்னட் (stator magnet) எனப்படும் காந்தங்கள் பொருந்தியிருக்கும். இது கேப்ஸ்யூலை மேற்புறமாக உயர்த்தும். அதே நேரத்தில் முன்னோக்கியிம் நகர்த்தும். அதாவது காந்தத்தின் எதிரெதிர் முனைகள் ஒன்றையொன்று விலக்குவது போல. கேப்ஸ்யூலைப் பொருத்தவரை இதன் மூக்குப் பகுதியில் இருக்கும் “ஏர் கம்ப்ரஸர் (Air compressor) ஆனது முன்புறம் உள்ள சிறிய அழுத்தம் கொண்ட காற்றையும் உறிஞ்சி பின்பக்கம் மற்றும் அடிப்பக்கம் செலுத்திவிட்டு மற்றும் கேப்ஸ்யூல் தொடர்ந்து மிதப்பதை உறுதிசெய்யும்.

இத்தகைய யோசனை 1847 ஆம் ஆண்டு யுகேவின் “ kingdom Brunel’s atmospheric railway” யில் “Exeter முதல் Plymouth என்ற இரு நகரங்ககளுக்கிடையே இயங்கி வந்த ஒரு ரயிலை முன்னோடியாகக் கொண்டது. அதில் இரண்டு தண்டவாளங்களுக்கு இடையே குழாய் ஒன்று இணையாக வந்துகொண்டிருக்கும். அதில் அதிக அழுத்தத்தில் காற்றானது இரண்டு மைல் இடைவெளியில் உள்ள ரயில் நிலையங்களால் தொடர்ந்து அழுத்தி அனுப்பப்பட்டுகொண்டே இருக்கும். ரயிலானது அந்த காற்றை எரிபொருளாகக் கொண்டு இயங்கியது. பராமரிப்பு செலவு மற்றும் காற்று இடைவெளியில் வெளியேறுவது போன்ற சிக்கல்களால் இந்த ரயில்சேவை ஒரே ஆண்டில் நின்றுபோனது.
வடிவமைப்பு
குழாயினுள் காற்றழுத்தமானது கடல்பரப்பில் இருந்து 20,000 அடி உயரத்தில் இருக்கும் அழுத்தத்தை ஒத்திருக்கும். இதனால் உராய்வற்ற மற்றும் அதிர்வற்ற பயணத்தை நிச்சயம் அனுபவிக்க முடியும். உராய்வின்மையால் அதிகபட்சமாக மணிக்கு 1000 மைல் வேகத்தில் பயணிக்க முடியும். அத்தகைய தொழில்நுட்பம் இன்னும் முழுமையடையாததால் தற்போது அதிகபட்சமாக 700 மைல் வேகத்தில் செல்லமுடியும் என பொறியாளர்கள் நம்புகின்றனர். இதற்காக செலவிடப்படும் பணமும் மின்சாரமும் மிகக் குறைவே.

இந்த குழாயைத் தாங்கும் இருப்புத்தூணாணது எத்தகைய நிலநடுக்கத்தையும் தாங்கும் வண்ணம் இருக்கும். குழாயினுள்ளிருக்கும் அழுத்தமானது, சிறிதளவும் கூடாமல் இருக்க அதிநவீன கம்ப்ரஸர்கள் இயங்கிக்கொண்டே இருக்கும். ஏதேனும் ஒரு துளை வழியாக காற்று உள்நுழைந்தால் அழுத்தம் அதிகரித்து பயணத்தின்போது உராய்வின் காரணமாக வேகம் குறைந்து கேப்ஸ்யூல் நின்றுவிடும். அவ்வாறு நேராதவாறு இருக்க ஒட்டுமொத்த குழாயும் சிறு சிறு பகுதிகளாக (compartment) பிரிக்கப்பட்டு தானியங்கி கதவுகளைக் கொண்டிருக்கும் . இதன்மூலம் தேவையான பகுதியில் (Compartment) பழைய அழுத்தம் கம்ப்ரஸர்கள் உதவியால் நிலைநிறுத்தப்படும். அவ்வாறு கேப்ஸ்யூல் நின்று போனால் தானாகவே மிதமான வேகத்தில் இலக்கையோ, அருகில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்தையோ சென்றடையும். நவீன மென்பொருள்கள் மூலமாக இயங்கும் இந்த கேப்ஸ்யூலில் முழு வேகம் மற்றும் நிறுத்தத்தின் போது ஏற்படும் மாற்றங்களை உள்ளிருப்பவர்களால் உணரவே முடியாது. கதவை மூடி கதவைத் திறந்தால் வேறு நகரம் அவ்வளவுதான்.
இந்தியாவில் ஹைபர்லூப்
உலகெங்கிலும் ஹைபர்லூப் திட்டத்திற்காக சுமார் 2600 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு அதில் யுகே, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்தியா உள்ளிட்ட பத்து நாடுகளில் 35 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்தியாவில் ஹபர்லூப்பை செயல்படுத்த உள்ள Virgin நிறுவனம் ட்விட்டரில் இதற்கான ஓட்டெடுப்பை நடத்தியது. சென்னை – பெங்களூர், மும்பை-சென்னை போன்ற நகரங்கள் முதலில் தேர்வு செய்யப்பட்டாலும் பின்னர் சோதனை மற்றும் சிறிய முயற்சியாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் புனே (150 கிமீ) நகரங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய 3 முதல் 6 மணிநேர பயணத்தை அரை மணிக்குள் பயணித்துவிட முடியும்.

இதே நிறுவனம் கலிபோர்னியாவிலும் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது நவேடா (naveda) பாலைவனத்தில் நடந்த சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து உலகின் மற்ற நகரங்களில் திட்டம் வேகமெடுத்து வருகிறது. அதிகாரப்பூர்வ திட்டமாக அந்தஸ்து பெற்ற இந்த சோதனை முயற்சி வெற்றிபெற அரசாங்கமும் மக்களும் நல் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். அதிரடி ஆந்திராவிலும் இந்த திட்டம் வரப்போகிறது. துளிகூட இயற்கையை மாசுபடுத்தாத இந்த குழாய் கூடிய விரைவில் உலகின் பெருநகரங்களை இணைக்ககூடும். எதிர்காலத்தில் வேலைக்குச் செல்வோர் அலுவலகத்திற்கு அருகிலேயே வீட்டை எதிர்நோக்க அவசியமில்லை. எத்தகைய நிலப்பரபிலும், ஏன்? எவரும் எளிதில் செல்லமுடியாத எவரெஸ்ட் முகடுக்கும் இவற்றை கொண்டு பயணிக்க முடியும். குறிப்பாக அதிவிரைவாக ராணுவத்தை ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு கொண்டுசெல்ல முடியும்.