இந்த பரந்த உலகில் இயற்கையை அதிகமாக வேண்டுவது, அதனிடமிருந்து அதிகம் பெறுவது மனிதர்களாகிய நாம் தான். அதேபோல இயற்கையின் மீது ஈவு இரக்கமற்ற தாக்குதலை நம்மை விடத்திறம்பட வேறுயாராலும் நிகழ்த்த முடியாது. உண்மையில் மனிதன் பாலூட்டி வகையைச் சேர்ந்தவன் அல்ல. மாறாக அவன் ஒரு வைரஸ். ஏனெனில் பாலூட்டிகள் தங்களது இனத்தின் மீது எல்லையற்ற பாசம் கொண்டிருக்கும்.

வைரஸ் மட்டுமே தான் இருக்கும், வாழும் இடத்தை இடம்தெரியாமல் சிதைத்து கடைசியில் தாமும் வாழ முடியாமல் மடிந்துபோகும். அப்படி இதுவரை மனிதன் சென்ற, செய்த அனைத்து செயல்களுக்குமான எதிர்வினையை நாம் இப்போது சந்தித்து வருகிறோம். ஆராய்ச்சி என்னும் பெயரில் இந்த இயற்கைக்கு நாம் வெடிகுண்டுகளை பரிசளிக்கவே முயன்று வருகிறோம். யாரும் நெருங்க முடியாத ஆழ்கடல் முதல் லட்சக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நிலவு வரை மனிதன் தன்னுடைய “காலடித் தடங்களை” பதித்திருக்கிறான். அவற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளைக் கீழே காணலாம்.
அண்டார்டிகாவில்…
தென்னரைக்கோளத்தின் முனையில் அமைந்துள்ள அண்டார்டிக்கா கண்டம் நம்மால் நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்குப் பனிப்பாறைகளைக் கொண்டது. அந்தக் கண்டத்தின் மொத்த நிலப்பரப்பில் ஒரு சதவிகிதம் மட்டுமே தாவரங்கள் வாழ்வதற்கான அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக அண்டார்டிக்காவிற்கு அருகில் அமைந்துள்ள சைனி தீவு (Signy Island) அங்குள்ள புல்வெளிகளுக்கு பெயர்பெற்றது. மேலும், பூக்கள் வளரும் தாவரங்களும் இங்கு இருக்கின்றன. அங்கு நடைபெறும் ஆராய்ச்சிகள் அதற்கு வேட்டு வைத்திருக்கிறது.

வருடத்திற்கு ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சோதனைகளுக்காக அன்டார்டிக்காவிற்குப் பயணிக்கின்றனர். இப்படி இவர்கள் அன்தக் கண்டம் முழுவதும் பயணிக்கும்போது இவர்களுடனே Eretmoptera murphyi எனப்படும் நுண்ணுயிரும் பயணித்து தற்போது அந்த கண்டத்தையே சூழ்ந்துவிட்டது. பெர்மிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனைத் தெரிவிக்கும்போது, இந்த நுண்ணுயிரி அண்டார்டிக்காவைச் சேர்ந்ததில்லை, அங்குவரும் ஆராய்ச்சியாளர்களின் கால் ஷூக்கள் மூலம் இந்த வகை உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பரவி தற்போது அங்குள்ள தாவர வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன” என்றார்கள். இதனைத் தடுக்க பிரத்யேக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பசிபிக்கும் பிளாஸ்டிக்கும்
வருடந்தோறும் கடலில் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் அளவு மில்லியன் டன் கணக்கில் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் கடல்வாழ்வு சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு ஏராளமான திமிங்கிலங்கள் இதனால் மடிந்து கரை ஒதுங்குகின்றன. உலகின் பெருங்கடல்கள் அனைத்தும் இதே நிலைமையில் தான். உலகின் மிக ஆழமான பகுதியான மரியானா ட்ரென்ச் பகுதி பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. 35,787 அடி ஆழமுள்ள இந்தப் பகுதியில் உள்ள கடல்நீரில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிகின் அளவு மற்றைய கடல் பரப்பை விட அதிகம் என்கிறது சீன கடல்சார் ஆராய்ச்சிக்குழு.

இதற்குக் காரணம் இருக்கிறது. மரியானா பகுதிக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். இதனால் மாசுபாடும் அதிகமாகிறது. அதேபோல் வெளிப்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், பூகம்பம் மற்றும் கண்ட நகர்தல் காரணமாக அடிப்பகுதிக்கு சென்றிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேயும் நிலவு
மனிதனின் இந்த பாசக்கரம் நிலவையும் விட்டுவைக்கவில்லை. 1970 களில் நிலவின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தினை கண்காணிக்க சென்சார்களை பொருத்தியது. வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடானது தொடர்ந்து குழப்பமளிக்கும் விதத்தில் இருந்திருக்கிறது. டெக்சாஸ் பல்கலைகழகம் அளித்துள்ள அறிக்கையின்படி நிலவின் வெப்பநிலை உயர்ந்துள்ளது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதனை அவர்கள் புகைப்படங்கள் மூலம் நிறுவுகின்றனர். அதாவது ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தெளிவாகவும், ஒருவித வெண்ணிறத்திலும் இருந்திருக்கிறது. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கருமையாகவும், தெளிவில்லாமலும் இருக்கின்றன. இதற்குக் காரணம் நிலவின் ஒரே பகுதியில் ஆராய்ச்சிகள் நடைபெறுவதுதான். இதனால் அந்த நில அமைப்பே பாதிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது இதுவரை மனிதர்களால் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் அனைத்தும் நிலவின் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன. இதனால் நிலவின் சமநிலையானது பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த உலகம் முழுவதும் நமக்கானது என்ற எண்ணமும், இயற்கையின் விதிகளைப் புரிந்துகொள்ள எத்தனிக்கிற மானுட அறிவும் தான் மனிதர்களுடைய ஆயுதம். இயற்கையின் பெருங்கருணையை தங்களது அறிவுக்கோடாரியால் சோதித்துப்பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் இயற்கை பதிலளிக்கும் காலத்தின் கொடுமையை அறிந்தும் மனிதர்கள் இதயேதான் மனிதர்கள் திரும்பத் திரும்ப செய்கிறார்கள்.