மனிதனை கடவுள் ஆதாம், ஏவாள் மூலமே உலகில் படைத்தார். இவ்வாறு ஒரு புறம் கூறப்படும் நிலையில், மனிதன் குரங்கிலிருந்தே தோன்றினான் என்று அறிவியல் கூறுகிறது.
ஆதாம், ஏவாள் என்ற கதையை மக்கள் நம்பினாலும், நம்பாவிடினும் சில அறிவியல் முடிவுகளை நிச்சயம் நம்பித்தான் ஆக வேண்டும். மனித வாழ்வில் இருக்கும் சில ஆச்சரியமூட்டும் பரிணாம வளர்ச்சி அறிவியல் தகவல்களை இங்கு பார்க்கலாம். மேலும், இந்த கட்டுரையில் நம் உடலின் பல உறுப்புகள் எப்படி மாறின என்பதையும் பார்க்கலாம்.

உடல்
60,000 வருடங்களுக்கு முன்பு மனிதன் ஆப்பிரிக்க நிலநடுக்கோடு பகுதியில் இருந்து பிரிந்து வந்துள்ளான். அந்நாள் வரை மனிதனில் இருந்த தோல் நிறம், முடிகள், முக அமைப்பு ஆகியவை, பின் மாறுபட்டதாக அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் அறியமுடிகிறது.
மனிதனின் நிறம் பல நிறங்கள் கொண்டதற்கு அவர்கள் வாழும் நிலப்பரப்பும் முக்கிய காரணமாக அமைகிறது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
50,000 வருடங்களுக்கு முன் மனிதனின் எலும்பு தற்போது இருப்பதை விட கடினமானதாகவே இருந்துள்ளது. அதாவது 50,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்க்கை முறை கடினமாக இருந்ததால், எலும்புகள் வலுவாக இருந்துள்ளது. ஆனால் தற்போதைய வாழ்க்கையில் உடல் வேலை அதிக அளவு குறைந்ததால், எலும்புகள் கடினத்தன்மையை இழந்துள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
முதுகெலும்பு
இன்றைய காலகட்டத்தில் பலரும் பெரும்பாலும் முதுகு வலியினால் பாதிக்கப்பட்டு வருகின்றோம். காரணம் ஆரம்ப காலத்திலுள்ள வாழ்வியல் தற்போது இல்லை. மனிதனின் முதுகெலும்பில் பரிணாம வளர்ச்சி எதுவும் அடையவில்லை. இதன் காரணமாகதான் தற்போதைய வாழ்வியல் முறைகள் முதுகெலும்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
ஆனால், இது தற்போதைய விளம்பரதாரர்களுக்கு வாய்ப்பாக உள்ளது. ஏனெனில் முதுகு வலிக்கு இந்த மருந்தை பயன்படுத்துங்கள்!. முதுகுவலி வராமல் தடுக்க இந்த காலணி அணியுங்கள்!.. என்று தினம் தினம் விளம்பரங்கள் நீங்கள் பார்க்கலாம்.
வேகவைக்கப்பட்ட இறைச்சி
790,000 ஆண்டுகளுக்கு முன்பே இறைச்சியை வேக வைத்து உண்ணும் பழக்கம் மனிதர்களிடையே இருந்துள்ளது. இது, மனித உடலை பாக்டீரியாக்களில் இருந்து தப்பிக்க செய்துள்ளது. இதனால் உடல் நலத்துடன் வாழ வழிவகை செய்துள்ளது.

நவீன விவசாயம் 23,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் துவங்கப்பட்டுள்ளது. வேளாண்மை மனித கலாச்சாரத்தின் அடித்தளமாக மாறியுள்ளது. தற்போதைய நவீன சமூக வளர்ச்சிக்கு இதுவே காரணம்.
பழுப்பு நிற கண்கள்
7,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதனின் கண்கள் பழுப்பு நிறத்தில் மட்டும் இருந்தது. ஆனால், தற்போது உலகில் 8 சதவீதம் பேர் நீல நிற கண்களுடன் காணப்படுகின்றனர். அதற்கு மரபணு மாற்றமே காரணம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வால்
ஆரம்ப காலத்தில் மனிதனுக்கும் குரங்கை போன்று வால் பகுதி இருந்துள்ளது. ஆனால், காலம் செல்லச் செல்ல வால் பகுதி சுருங்கி போனதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தற்போதும் மனிதனுக்கு வால் எலும்பு உள்ளது. குழந்தை பிறக்கையில் கருப்பையில் இந்த வால் அமைப்பை காண முடியும்.
முடி
அனைவரும் கவனித்திருக்க முடியும், குரங்குகளை விட மனிதர்களுக்கு முடி குறைவாகவே இருக்கும். இதற்கு காரணம், மனிதன் வாழும் சூழல் தற்போது அதிக மாற்றங்கள் கண்டுள்ளது. அது பரிணாம வளர்ச்சியில் முகம் கழுத்து உள்ளிட்ட பகுதியில் முடி வளர்வதை தடுத்திருக்கலாம்.
ஆனால் நீங்கள் இதை மட்டும் சிந்தித்து பாருங்கள், ஒரு வேளை உங்களுக்கு முகம், கழுத்து உள்ளிட்ட உடல் முழுக்க முடிகள் இருந்தால்? எவ்வளவு Shampoo, Conditioners தேவைப்படும் என்று…!

ஈர்ப்பு: ஆண் >< பெண்
ஆண், பெண் ஈர்ப்பு அடுத்த சந்ததியினரை உருவாக்கும் துவக்கமாகவே இருக்கிறது. இது பரிணாம வளர்ச்சியிலும் பெரும் மாறுபாடுகள் அடையவில்லை. ஒரு பெண்ணுக்கு அகலமான தாடை உடைய ஆண்கள் மீது ஈர்ப்பு தோன்றும். அதுவே ஆணுக்கு குறுகிய கன்னம் கொண்ட பெண்கள் மீது ஈர்ப்பு தோன்றும் என்கின்றன சில ஆய்வு முடிவுகள்!
மூளை
மனித மூளை பற்களின் அளவு குறுக குறுக பெரிதாகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் பற்கள் குறுகியதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும், புரோட்டின் தான் மனித மூளையை வளரச்செய்கிறது.
காரணம் மனிதன் மாமிசம் போன்ற ப்ரோடீன் அதிகம் உள்ள உணவுகளை உண்பவனாக இருக்கிறான். ஆனால், மனிதனின் மூதாதையர்கள் என்று கருதப்படும் கொரில்லாக்கள் மாமிசம் உண்பதில்லை. எனவே மனித மூளை வளர்ச்சியடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
மனிதனின் பரிணாம வளர்ச்சி இன்னும் மாறுபடலாம். தற்போதை சமூக சூழலில் உடல் இயக்கத்தை விட மனிதனின் மூளையின் இயக்கமே அதிகமாக உள்ளது. எனவே மனிதனின் தலை பெரிதாக வளரும் என்று ஆராய்ச்சியார்கள் கருதுகின்றனர்.
மனிதனின் மூளை எப்படிப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா? மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?