சிறு வயதில் நீங்கள் அதிகம் கேட்ட, பிடித்த கதை என்ன என்றால் உடனே மறக்காமல் சொல்ல ஆரம்பிக்கும் நாம், நேற்று மதியம் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டவுடன் யோசிக்க ஆரம்பித்து விடுவோம்! என்றோ கேட்ட கதை ஞாபகம் இருக்கும் அளவிற்கு கூட அண்மையில் நடந்தவை ஞாபகம் இருப்பதில்லை. இது எதனால்? நம் வாழ்வில் எத்தனையோ பேரை, எத்தனையோ சூழ்நிலைகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் அவற்றில் சில மட்டும் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன. சில உடனேயே மறந்து போகின்றன. சரி… இதெல்லாம் எதனால்? நாம் முக்கியத்துவம் கொடுப்பவை மட்டும் தான் ஞாபகம் இருக்கும் என நமக்கு புரிந்தாலும் அது எப்படி மூளையில் நிகழ்கிறது தெரியுமா?

எவ்வளவோ ஆராய்ச்சிகள் செய்த போதும் மனித மூளை எப்படி செயல்படுகிறது என்பது மட்டும் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை. விளைவு, நாளுக்கு நாள் ஆராய்ச்சிகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.
அப்படி தான் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் இதற்காக ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு விடையையும் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக ஆராய்ச்சி குழிவினர் ஒரு எலியை தேர்ந்தெடுத்து, புதிய இடத்தை ஞாபகம் வைத்து கொள்ளும் அதன் மூளையில் நடக்கும் நரம்பியல் செயல்பாட்டை கவனித்து விடையை கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு வலுவான மற்றும் நிலையான நினைவை உருவாக்குவதற்கு, நியூரான்கள் ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பிக்கும்!!
சோதனை
முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எலியை சுமார் 5 அடி நீளமுள்ள சுவர்கள் உள்ள இடத்தில் குழிவினர் அடைத்து வைத்தனர். ஏற்கனவே அந்த சுவரின் சில இடங்களில் வித விதமான சின்னங்கள் அதாவது கூட்டல் குறி (+), ஸ்லாஷ் குறி ( / ) என குறிக்கப்பட்டிருந்தன. பாதையின் இரு முனைகளிலும் எலிகளுக்கு மிகவும் பிடித்த சர்க்கரை நீறையும் வைத்திருந்தனர். பின்பு குழுவினரால் எலியின் ஹிப்போகேம்பஸ் (புதிய நினைவுகள் பதிவாகும் இடம்) பகுதியில் உள்ள நியூரான்கள் தொடந்து கண்காணிக்கப்பட்டன.

முதலில் எலியை அங்கு விட்டவுடன் அதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் இடது பக்கம் வலதுபக்கம் என அங்கும் இங்குமாக அலைந்தது. இப்படி அலைந்த போது சுவரில் இருந்த எதாவது ஒரு சின்னத்தை எலி கவனித்த போது அதன் மூளையில் ஒற்றை நியூரான்கள் மட்டும் செயல்படுத்தப்பட்டன. இது போல பல முறை எலி அலைந்த திரிந்த பின்பு எலிக்கு அந்த இடம் கொஞ்சம் பரிட்சயமானது. கூடவே சர்க்கரை நீர் இருந்த இடங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள ஆரம்பித்தது. எலிக்கு அந்த இடம் இன்னும் பரிட்சயமானவுடன் அது ஏற்கனவே பார்த்த சின்னங்களை பார்த்த போதெல்லாம் மேலும் மேலும் நியூரான்கள் செயல்படுத்தப்பட்டன. ஒரு வலுவான மற்றும் நிலையான நினைவை உருவாக்குவதற்கு, நியூரான்கள் ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்தன. அதாவது அது பார்த்த சின்னங்களையே மீண்டும் மீண்டும் பார்க்கும் போது தான் அந்த பாதையில் எங்கு இருக்கிறோம் என்பதும் சர்க்கரை நீரை எடுக்க எங்கு செல்ல வேண்டும் என்பதும் அதற்கு புரிந்தது.
நியூரான் தொகுப்பு
சரி இந்த நினைவுகள் என்ன ஆகும்? எவ்வளவு நாள் மனதில் நிற்கும்? இதை கண்டறிய குழு அந்த எலியை 20 நாட்களுக்கு பிறகு அதே இடத்திற்கு அனுப்பி சோதித்தனர். ஏற்கனவே செய்த சோதனையின் போது உருவான நியூரான் தொகுப்பு மூலம் எலியால் அந்த நினைவுகளை மீதும் எளிதாக கொண்டு வர முடிந்தது. அதிலும் ஆரம்பத்தில் உருவான சில மூல நியூரான்கள் சேதமடைந்து, சில நியூரான்கள் வேறுபட்ட செயல்பாட்டை செய்த போதும் கூட எலியால் சரியாக சர்க்கரை நீர் இருந்த இடத்திற்கு செல்ல முடிந்தது. சரி மூல நியூரான்கள் சேதமடைந்திருந்தால் இது எப்படி சாத்தியம்?

உங்களிடம் ஒரு பெரிய கொஞ்சம் குழப்பமான ஒரு கதை இருக்கிறது என வைத்து கொள்ளுங்கள். அதை நீங்கள் உங்கள் நண்பர்கள் 5 பேரிடம் சொல்லுகிறீர்கள். அதன் பிறகு எப்போதாவது அவர்கள் அனைவருடனும் சேர்ந்து கதையை மீண்டும் கேட்கும் போது மற்றும் ஒரு நபர் மறந்துவிட்ட சில பகுதிகளை இன்னொருவர் மறக்காமல் சொல்ல அதிக வாய்ப்புள்ளது. மொத்தத்தில் அனைவரும் சேர்ந்து கதையை பற்றி பேசும் போது முழு கதையும் தெரிந்து விடும். நீங்கள் மறந்திருந்தால் கூட!! யாரவது ஒருவருக்கு ஞாபகம் இருந்தால் கூட போதும். அதே போல ஒவ்வொரு முறை ஒவ்வொருவரிடமும் நீங்கள் கதையை சொல்லும் போதும் அது உங்களுக்கு மறக்காமல் நன்றாக நினைவில் ஆழமாக பதியும். அது போல தான் உங்கள் மூளையில் உள்ள நியூரான்கள் ஒன்றுக்கொன்று உதவி செய்து உங்கள் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும். வலுவான மற்றும் நிலையான நினைவு தேவை என்னும் போது ( அதாவது நீங்க அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு விஷயம் )மூளை இப்படி தான் சாமர்த்தியமாக பல நியூரான்களை செயல்படுத்தும்.
மறதி
இந்த ஆய்வில் இருந்து வயதாகும் போது ஞாபக மறதி அதிகமாகும் என்பது தெளிவாகிறது. ஏனெனில் முதுமை மற்றும் நீண்ட கால மன அழுத்தம் காரணமாக நியூரான் உற்பத்தியை வெகுவாக குறைத்துவிடும் என்பதால் அப்போது ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்து கொள்ள அவர்களுக்கு சில நியூரான்கள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். ஒருவேளை எந்த ஒரு நியூரானும் செயல்பட தவறும் போது தான் எந்த ஞாபகமும் இருக்காது. தான் யார் என்பது கூட தெரியாத நிலை ஏற்படும். அதே போல அதிக எண்ணிக்கையிலான நியூரான்கள் ஒரு நிகழ்வு நடக்கும் போது செயல்பட்டால் அது கண்டிப்பாக விரைவில் மறக்காது. அந்த நிகழ்வின் போது செயல்பட்ட எந்த நியூரானும் செயல்படவில்லை என்னும் பட்சத்தில் தான் அந்த நினைவு மறக்கும்.
நினைவுகள் மறக்காமல் இருக்க அதிக எண்ணிக்கையிலான நியூரான்களை ஈடுபடுத்த வேண்டும்!!
மனிதர்களை பொறுத்தவரை ஞாபகம் என்பது மிக மிக முக்கியம். மறதி பல பிரச்சனைகளை உருவாக்கும். வயதாக வயதாக மறதி ஏற்படுவது சகஜம் தான் என்றாலும் அது மற்றவர்களுக்கு தான். பாதிக்கப்பட்ட முதியவர்களை பொறுத்தவரை பெரிய குறைபாடாக தான் தோன்றும். சில நோய்களாலும் கூட மறதி ஏற்படும். எடுத்துக்காட்டாக அல்சைமர். இது பாதிக்கப்பட்டவரின் தினசரி நடைமுறைகளில் இருந்து தன் உறவினர்கள் யார் என வளர்ந்து தான் யார் என்று கேட்கும் வரை கூட கொண்டு போய் விடும்!
முடிவுகள்
பொதுவாக தொடர்ந்து ஒரு விஷயத்தை செய்யும் போதோ, பேசும் போதோ அது அதிக எண்ணிக்கையிலான நியூரான்களின் செயல்பாட்டிற்கு வழி செய்வதால் தான் எளிதில் மறப்பதில்லை. இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் ஒரு நிகழ்வு மறக்காமல் ஞாபகம் இருக்க குறிப்பிட்ட ஒரு நியூரானை வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய நிலையில் இந்த ஆய்வு நினைவுகள் மறக்காமல் இருக்க அதிக எண்ணிக்கையிலான நியூரான்களை ஈடுபடுத்த வேண்டும் என ஒரு புதிய கருத்தை விளக்குகிறது. இதன் மூலம் மறதி சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு ஏற்ற சிகிச்சை முறைகளை கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்!!