உலக அளவோடு ஒப்பீடு செய்யும்போது இந்தியாவில் உள்ள எருமை மாடுகளின் எண்ணிக்கை 50.5 சதவிகிதமாகும். இந்தியாவில் இருக்கும் எருமை மாடுகளின் எண்ணிக்கை 11.33 கோடி. இந்தியாவின் அதிகரித்துவரும் பால் தேவைக்கு எருமை மாடுகளே கைகொடுத்துவருகின்றன. இதனை மேலும் அதிகப்படுத்த தேசிய பால்வள மேம்பாட்டுத்துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புது வழி ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.

இந்தியாவின் பிரசித்திபெற்ற எருமை இனமான முரா தான் அதிக பால் கொடுக்கும் இந்திய எருமை இனமாகும். அதனாலேயே இதன் விலையும் அதிகம். இந்த இன மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் பல ஆராய்ச்சிகளை தேசிய பால்வள மேம்பாட்டு ஆராய்ச்சியகம் முன்னெடுத்துவருகிறது.
NDDB_ABRO_murra என்னும் முழுமையான டி நோவா மரபணு கோர்வையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கின்றனர். இதன்மூலம் பெற்றோர் மற்றும் அதன் கன்றை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். வலிமையான மற்றும் அதிக பால் உற்பத்தி செய்யக்கூடிய எருமையை அதன் இளமைக் காலத்திலேயே மிகத்துல்லியமாக இந்த முறையை உபயோகப்படுத்தி கண்டறியலாம்.

இம்மாதிரியான மரபணு தேர்வுகள் மூலம் அதிக பால் உற்பத்தியை அடையலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. உலக மரபணு தினமான ஏப்ரல் 25 ஆம் தேதி அமெரிக்க தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தில் இந்திய முரா எருமைகளின் மரபணு மாதிரிகள் சமர்ப்பிக்கப்பட்டன. உலகின் பல அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் இந்த முயற்சியை வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இந்த ஆய்வு எதிர்கால இந்திய பால் தேவையை ஈடுகட்ட மிகமுக்கிய பங்களிப்பை செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பின் மூலம் கிராம பொருளாதரத்தை வளர்க்க ராஷ்டிரிய கோகுல் மிஷன் போன்ற அமைப்புகள் நிதியுதவி அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.