வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது குண்டு ரெட்டியூர். அவ்வூரில் கி.பி. 10 மற்றும் 11 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்கள் உள்ளன. அவற்றில் நான்கினை ஏற்கனவே ஆய்வு செய்து முடித்த அதிகாரிகள் கடைசி நடுகல்லை ஆராய்ச்சிப்படுத்த சென்றபோதுதான் ஒரு விசித்திரத்தைப் பார்த்திருந்திருக்கின்றனர். மலையின் அடிவாரத்தில் உள்ள சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பு முழுவதிலும் மண்பானை ஓடுகள் சிதறிக் கிடந்திருக்கிறது. அதனை எடுத்து ஆராய்ந்ததில் அவை மிகப்பழமையானவை என்பது தெரியவந்திருக்கிறது. மேலும் புதிய கற்காலத்தின் போது பயன்படுத்தப்பட்ட குகைகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இரும்பினாலான பாதுகாப்புப் பொருட்களை இங்குதான் மக்கள் செய்திருக்கிறார்கள். கீழடியைத் தொடர்ந்து பழந்தமிழர்களின் நாகரீத்தினைப் பறைசாற்றும் விதமாக குண்டு ரெட்டியூரிலும் ஆராய்ச்சிகள் நடைபெற்றால் வரலாற்றில் பழைய புதிர்களுக்கு விடை கிடைக்கும்.
இரும்பு ஆலை
எட்டு நாட்கள் தொடர்ந்த ஆய்வில் சுடுமண் ஊது குழாய்கள், கறுப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், தடிமனான சிவப்புப் பானை ஓடுகள், சிவப்பு வண்ணப்பூச்சு கொண்ட பானை ஓடுகள், உடைந்த கெண்டிகள், இரும்புத் தாதுகள், கழுத்தில் அணியும் ஆபரணத்தின் மணி, புதிய கற்காலக் கருவிகள், கருமையான எலும்புத் துண்டுகள், சுட்ட செங்கற்கள் ஆகியவை கிடைத்திருக்கின்றன.

எகிலேரி என்னும் நீர்நிலைப் பகுதியின் அருகே இரும்பு ஆலை ஒன்று இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இரும்பை உருக்கப் பயன்படும் சுமார் 7 சுடுமண் ஊதுகுழாய்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவை இரும்பு உருக்கு உலையில் காற்றைச் செலுத்தப் பயன்படுபவை. குழாய்களில் இரும்புச் சுவடுகள் காணப்படுகின்றன. மலையடிவாரத்தில் 10 புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 குத்துக் கற்கள், 5 அரவைக் கற்கள், 6 கற்கோடாரிகள் அடங்கும். தடிமன் குறைந்த மண்பானை ஓடுகள் புழங்கு பொருள்களாகவும், சற்றுத் தடிமனான ஓடுகள் தானியங்கள் சேகரிக்கவும் பயன்பட்டிருக்கக் கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
மனிதர்கள் தங்கிய குகை
ஏலகிரியில் பாயும் காட்டாறுகள் இந்த எகிலேரி நீர்நிலையில் தான் கலக்கின்றன. அதற்கு அருகில் பல கற்குகைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 10 வசிக்கக்கூடிய அளவிற்கு போதுமானதாக இருந்திருக்கிறது. மேலும் குகைகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் கெவிகல் என்று அழைக்கின்றனர். கெவிகல் என்றால் பள்ளம், கற்குகை என்ற இரு பொருள் உண்டு.

கிடைத்த பொருட்களை எல்லாம் ஆய்வு செய்த அதிகாரிகள் அவை ஏறத்தாழ 2000 ஆண்டுகள் பழமையானவை என்று தெரிவிக்கின்றனர். போதிய ஆராய்ச்சிகள் நடைபெறும் பட்சத்தில் தமிழர்களின் பழங்கால வரலாற்றில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுக்கள் அவிழும்.