உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண், பெண் என இருவருக்கும் பொதுவானது தான். இன்றைய இயந்திர உலகத்தில் தவறான வாழ்க்கை முறையால் ஏறிப் போன எடையை குறைக்க பின்பற்றப்படும் வழிகள் ஏராளம் என்றால், சட்டென எடை குறையவைல்லையே என கவலைப்படுபவர்களும் ஏராளம். சரி! உடல் எடை விஷயத்தில் ஆண்களுக்கு இயற்கையாகவே ஒரு நன்மை நடக்கிறது தெரியுமா? ஆம்! உடல் எடை குறைப்பில் ஆண் பெண் என்று பார்க்கும் போது பெண்களை விட ஆண்களால் தான் உடல் எடையை சீக்கிரம் குறைக்க முடியுமாம். இது அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.
Credit: Montagu dried fruit nut
ஆய்வு
இதற்காக ஆராய்ச்சியாளர்கள் அதிக உடல் எடை உடைய சுமார் 2000 பங்கேற்பாளர்களைக் கொண்டு ஆய்வு செய்துள்ளனர். இதில் பங்கேற்பாளர்கள் 8 வாரத்திற்கு தினமும் 800 கலோரி அளவு உணவு மட்டுமே உண்ண வேண்டும். அதிலும் பெரும்பாலும் நீர்ம ஆகாரங்களான சூப், பழச்சாறு போன்றவற்றையும் சுமார் 375 கிராம் குறைந்த கலோரி உள்ள தக்காளி போன்ற காய்கறிகளையும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
HDL கொழுப்பு தான் நம் உடலில் இருக்கும் நல்ல கொழுப்பு . இதன் அளவு குறைந்தால் இதய நோய்க்கான ஆபத்து அதிகமாகும்!!
முடிவுகள்
8 வாரங்களுக்குப் பிறகு அவர்களை சோதனை செய்ததில் பங்கேற்பாளர்களில் 35 சதவீத ஆண்கள் மற்றும் பெண்கள் சாதாரண தேவையான அளவு குளுகோஸ் அளவுடனும் நீரிழிவு நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தனர். அதே சமயம் ஆண் பங்கேற்பாளர்களின் சராசரி எடை இழப்பு 11.8 கிலோ கிராமாகவும் அதுவே பெண் பங்கேற்பாளர்களின் சராசரி எடை இழப்பு 10.2 கிலோகிராமாகவும் இருந்தது. இதன் மூலம் பெண்களை விட ஆண்களால் தான் உடல் எடையை சீக்கிரம் குறைக்க முடியும் எனபது தெளிவாகிறது.
சரி, உடல் எடையில் மட்டும் தான் இந்த மாற்றம் என்றால் அதுவும் இல்லை!!! பெண்களை விட ஆண்களுக்கு, உடல் கொழுப்பு, இதய துடிப்பு வேகம், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களுக்கான வாய்ப்பு ஆகிய அனைத்தும் குறைந்திருந்ததும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
எதிர்மறை விளைவுகள்
அடுத்து, பெண்களைப் பொறுத்த வரை இந்த உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஆண்கள் அளவுக்கு இல்லை என்றாலும் எடை குறைந்துள்ளது உண்மை தான். எப்படியோ இதுவும் நல்ல விஷயம் தான். அதே போல ஆண்களை விட பெண்களின் இடுப்பு பகுதி அளவும் அதிகமாக குறைந்துள்ளது. ஆனாலும் இதில் சில எதிர்மறையான விளைவுகளும் நிகழ்ந்துள்ளன. ஆம்! ஆய்வில் ஈடுபட்ட ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களில் HDL கொழுப்பின் அளவு அதிகமாக குறைந்திருந்தது தெரியவந்துள்ளது. கொழுப்பு குறைந்தால் நல்லது தானே என நினைக்காதீர்கள்!! இந்த HDL கொழுப்பு தான் நம் உடலில் இருக்கும் நல்ல கொழுப்பு. இதன் அளவு குறையும் என்றால், இதய நோய்க்கான ஆபத்து வரப்போகிறது என்று அர்த்தம். அதே போல பெண்களின் எலும்பு தாது அடர்த்தியும் ( Bone Mineral Density) அதிகமாக குறைத்துள்ளது. இவை எல்லாம் குறைந்த கலோரி டயட்டால் ஏற்பட்ட விளைவுகள்.
பெண்களை விடஆண்களின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகம்!!
மொத்தத்தில் உடல் எடையை குறைக்கிறேன் என்று ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் போட்டி போட்டு டயட் மேற்கொண்டால் மனைவி தோற்கத் தான் வழிகள் அதிகம்!!
Credit: Endocrine web
காரணங்கள்
சரி! ஆண்களால் மட்டும் எப்படி உடல் எடையை வேகமாக குறைக்க முடிகிறது? பொதுவாக பெண்களை விட ஆண்களுக்கு தினமும் அதிக கலோரிகள் தேவைப்படும். ஆனால் இந்த ஆய்வில் ஆண், பெண் என இரு பாலருமே 800 கலோரி மட்டுமே எடுத்துக்கொண்டனர். அதனால் ஆண் பங்கேற்பாளர்களிடம் ஏற்பட்ட கலோரி பற்றாக்குறை கூட இந்த வேகமான எடை இழப்பின் காரணமாக இருக்கும் என்கின்றனர் இந்த ஆராய்ச்சியாளர்கள்.
அதே போல ஆண்களின் வளர்சிதை மாற்ற விகிதம் பெண்களை விட அதிகம் என்பதும் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் இந்த ஆராய்ச்சிக் குழுவினர். பொதுவாக ஆண்களைப் பொறுத்தவரை கொழுப்பு அவர்களின் வயிற்று பகுதியில் உள்ள உடல் உறுப்புகளில் Visceral Fat எனப்படும் உட்புற கொழுப்பு சேரும். இதற்கு காரணம் உடலில் மெல்லிய உறுப்புகள் இருக்கும் பகுதியில் தான் கொழுப்பு படியும். ஆண்களின் உடலில் மென்மையான பகுதி மற்றும் அதிக வேலையின்றியிருக்கும் இடம் அடிவயிறு என்பதால் தான் அங்கு கொழுப்பு சேர ஆரம்பிக்கிறது. இதனால் ஆண்களின் வயிற்றில் உள்ள உறுப்புகளின் செயல்பாடு குறையும். அதுவே அவர்கள் டயட் மேற்கொள்ளும் போது முதலில் இந்த வயிற்று கொழுப்பு குறையும் என்பதால் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரித்து அவர்களால் அதிக கலோரிகளை எரிக்க முடியும்.
இதுவே பெண்களில் காணப்படும் கொழுப்பு Subcutaneous fat என்னும் கொழுப்பு. இது தோலுக்கு நேர் கீழே சேகரிக்கப்படும் கொழுப்பு. பெண்களுக்கு அடிவயிற்றில் கர்ப்பப்பை இருப்பதால் அதன் செயல்பாடுகள் பாதிக்காதவாறு வயிற்றை தவிர பிற இடங்களில் சேமிக்கப்படுகிறது. அதனால் பெண்கள் டயட் மேற்கொள்ளும் போது முதலில் இந்த Subcutaneous கொழுப்பு தான் குறையும். இதற்கு வளர்சிதை மாற்றத்தில் எந்த பங்கும் இல்லை என்பதால் தான் பெண்களால் குறைந்த எடையை மட்டுமே குறைக்க முடிகிறது.
Credit: Fitness Genes
அதே சமயம் உடல் தன்மையைப் பொறுத்து ஒரு சில பெண்களால் வேகமாகவும் எடையை குறைக்க முடியும் என்பதே உண்மை. இது 8 வாரத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு என்பதால் இன்னும் சில வாரங்களிலேயே ஆய்வில் ஈடுபட்ட பெண்களின் எடை அதிகமாக குறையவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி. சில எதிர்மறை விளைவுகள் இருந்தாலும் உடல் பருமனாக இருப்பதை விட, சீராக உடல் எடையை குறைப்பதால் பாதிப்பில்லை என்கின்றனர் வல்லுனர்கள். அதனால் கொஞ்சமோ அதிகமோ உடல் எடையை சீராக குறைப்பதே முக்கியம் என்பதை புரிந்து கொண்டு மனம் தளராமல் முயற்சி செய்யுங்கள். அதிகமாக உடற்பயிற்சி செய்யுங்கள். நிச்சயம் உடல் எடையை குறைக்க முடியும்.