நாம் இப்போது 2018 ன் இறுதியில் நின்று கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு மட்டும் நீங்கள் உபயோகித்த பிளாஸ்டிக் எவ்வளவு தெரியுமா? எத்தனை லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை செலவளித்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? வாய்ப்பில்லைதான். இவ்வளவு பெரிய எண்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாதுதான். ஆனால் இயற்கை அனைத்தையும் கவனித்திருக்கிறது. நம்முடைய ஒவ்வொரு செயலையும். கடந்த இருபது ஆண்டுகளில் வெப்பநிலை அதிகமான நான்கு ஆண்டுகளில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதாவது 2015 – 2018 வரை உள்ள நான்கு ஆண்டுகள் தான் மிகுந்த வெப்பநிலை கொண்ட ஆண்டுகளாகும். இதுகுறித்து உலக வானிலை ஆராய்ச்சிமையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இயற்கையின் மீதான நம் சுரண்டலுக்கு இயற்கையின் கண்டனக்குரல் அது.

தொழில்புரட்சி நடைபெறுவதற்கு முந்தய ஆண்டுகளில் குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் 1850 முதல் 1900 வரையான காலகட்டத்தில் இருந்ததை விட கடந்த 5 ஆண்டுகளில் வெப்ப நிலையானது 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருக்கிறது. இந்நிலை தொடருமேயானால் உலகத்தின் சராசரி வெப்பநிலை 2100 ஆம் ஆண்டில் இப்போதைய அளவை விட 3 – 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமானது உயரும் என்று அந்த அறிக்கை எச்சரித்திருக்கிறது. மேலும் வெப்பமயமாதல் காரணமாக அடுத்த ஆண்டின் துவக்கத்தில் எல் நினோ (El Niño) விளைவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உலகம் கடும் பிரச்சனைகளை அடுத்த ஆண்டு சந்திக்கும் என்பது தெளிவாகிறது.
எல் நினோ (El Niño) விளைவு
பசிபிக் பெருங்கடலின் மீது விழும் சூரிய ஒளியினால் கடல்நீர் ஆவியாகி மேகங்களை உருவாக்குகிறது. மேலும் அதீத வெப்பம் காரணமாக ஏற்படும் காற்றின் வேகம் காலநிலையில் பெரிய மாறுதலை ஏற்படுத்தும். இதனால் தென்னமெரிக்கா அதிக மழைப்பொழிவையும் அதன் காரணமாக வெள்ளப்பெருக்கையும் சந்திக்க உள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை இந்த விளைவு வறட்சியை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜப்பானில் வந்த வெள்ளம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ ஆகியவற்றிற்கு காலநிலை மாற்றம் தான் முக்கியக்காரணம். இவை அனைத்துமே பெருங்கடல்களின் மீது ஏற்படும் அதீத வெப்பநிலையின் விளைவாக வருபவை. இதுதான் அடுத்த வருடமும் நடக்க இருக்கிறது.
கடைசித் தலைமுறை
பசுமை இல்ல வாயுக்கள், பிளாஸ்டிக் பயன்பாடு, காடுகள் அழிப்பு என காலநிலை மாற்றத்தின் அனைத்து அறிகுறிகளும் தெளிவாய் நடந்துவருகின்றன. காலநிலை நம் கண்முன்னே மாறிக்கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தின் ஆரம்பப் புள்ளியைச் சந்தித்த தலைமுறையும் நாம் தான். இதனை காப்பாற்றக் கடைசி வாய்ப்பு இருக்கப்போகும் காலமும் நம்மிடம்தான் இருக்கிறது. அடுத்த தலைமுறை அதன் தீவிரத்தை மட்டுமே பார்க்கமுடியும். மாறாக இந்தக் கொடும் விளைவில் இருந்து இயற்கையை மீட்டெடுக்க காலம் அளித்திருக்கும் வாய்ப்பு நோயவுற்று நம் கைகளில் மிச்சமிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். இயற்கையை பாதுகாப்போம். அடுத்த தலைமுறைக்கு நம்மால் விட்டுச்செல்லக்கூடிய ஒரே சொத்து ஆரோக்கியமான இயற்கை மட்டுமே.
