மனித மரபணு மாற்றம் தொடர்பான கருத்தரங்கு ஒன்று கடந்த வாரம் ஹாங்காங்கில் நடைபெற்றது. அப்போது பேசிய சீனாவைச் சேர்ந்த ஹி ஜியாங்குய் (He Jiankui) என்னும் மருத்துவர் கூறிய கருத்து உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கருவில் உள்ள குழந்தைகளின் மரபணுவில் மாற்றம் செய்யும் அவருடைய ஆராய்ச்சிக்குத் தடை விதித்துள்ளது சீன அரசு. மேலும் ஹி பணிபுரியும் Southern University of Science and Technology பல்கலைக்கழகம் தங்களுக்கும் அவருடைய இந்த ஆபத்தான ஆராய்ச்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டது.

அப்படி என்ன ஆராய்ச்சி ?
நம் ஒவ்வொருவருடைய மரபணுவிலும் ஏராளமான தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். இத்தகவல்கள் நம் மூலமாக நம் குழந்தைகளுக்குச் சென்றுவிடும். தந்தையைப் போலவே முகவெட்டு, செய்கைகள் செய்யும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதற்குக் காரணம் DNA எனப்படும் இந்த மரபணு தான். தகவல்களைப் போலவே பெற்றோரிடமிருந்து சில நோய்களும் மரபணு மூலமாக குழந்தைகளுக்குப் பரவும். இப்படி நோய் பாதிக்கப்பட்ட பெற்றோர் மூலம் உருவாகும் கருவில் உள்ள நோய் பாதிப்புள்ள மரபணுவை நீக்குவதன் மூலம் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் இல்லாமல் செய்யலாம். ஹி செய்ததும் இதைத்தான்.
மரபணு மாற்ற சிகிச்சை 2012 முதல் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால் அவை எல்லாம் தொடக்கநிலை ஆராய்ச்சிகள் மட்டுமே. கைவிடப்பட்ட அல்லது வளராத கருக்களிலேயே இந்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன. மாறாக ஹி, லூலூ மற்றும் நானா என்னும் இரட்டைக் குழந்தைகள் கருவில் இருந்தபோதே அவர்களுக்கு மரபணு மாற்ற சிகிச்சை அளித்ததாகவும் தற்போது வரை அவர்கள் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த இரட்டையரை 18 ஆண்டு காலமாகத் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் கூறியிருந்தது மருத்துவ உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIV பரிசோதனை
ஹி இந்த ஆராய்ச்சியில் 8 ஆண் பெண் ஜோடியினையும் உட்படுத்தியிருக்கிறார். அதில் ஆண்கள் அனைவருமே எய்ட்ஸ் நோய் உள்ளவர்களாவும் பெண்கள் நலமாகவும் இருந்திருக்கின்றனர். மரபணு மாற்றத்தின் சாத்தியக்கூறுகளை உறுதிபடுத்தவே அவ்வாறு செய்ததாக ஹி தெரிவித்துள்ளார்.
மரபணு மாற்றம் செய்த குழந்தைகளின் மூலம் உருவாகும் சந்ததிகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.
இதிலிருக்கும் பிரச்சினை
சீனாவில் இம்மாதிரியான சிகிச்சை தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஆராய்ச்சிக்கான முழுத் தொகையையும் தானே செலவழித்ததாகச் சொல்லும் ஹி, இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை பிரசுரிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் பதிப்பகம் பற்றியோ ஆராய்ச்சிக்கு உதவியவர்கள் பற்றியோ ஏதும் குறிப்பிடவில்லை.
The Crispr gene editing என்னும் முறையின் படியே இந்த ஆராய்ச்சியை ஹி மேற்கொண்டிருக்கிறார். உலகின் பல வளர்ந்த நாடுகள் மரபணு பற்றிய ஆரம்ப நிலை சோதனைக்காக இந்த முறையைப் பின்பற்றுகின்றனர். ஹி யின் இந்த ஆராய்ச்சி மனித குலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தைத் தரும் என்பதால் இதனை எதிர்ப்பதாக மருத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மரபணு மாற்றம் செய்த குழந்தைகளின் மூலம் உருவாகும் சந்ததிகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் காரணமாகவே ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பல நாடுகள் இந்த ஆராய்ச்சிக்குத் தடை விதித்திருக்கின்றன.