விளைச்சலை அதிகப்படுத்தவும், தாவரங்களைப் பாதுகாக்கவும் செயற்கை பூச்சுக்கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்களை இன்று உலகம் முழுவதிலுமுள்ள விவசாயிகள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். செயற்கை ரசாயன உரத்தினை உபயோகிப்பதனால் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இவை நிலத்தினை மட்டும் மாசுபடுத்துவதில்லை. அந்த நிலத்தின் வழியாக நீர் மாசுபாடும் நடைபெற கணிசமான வாய்ப்பு உள்ளது.

வளர்ந்துவரும் ரசாயன உரத்தின் தேவைகளினால் செயற்கை உர உற்பத்தி நிறுவனங்களும் பெருகிவருகின்றன. உண்மையில் இவை இயற்கைக்கு எதிராக நடைபெறும் போர் ஆகும். இம்மாதியான ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில் பலவகையான நச்சுப்பொருட்கள் கலந்துள்ளதால் நீர்நிலை மாசுபாடு எளிதாக நடைபெறுகிறது. நீரில் நடக்கும் இந்த ரசாயனக் கலப்பு இயற்கையின் சமநிலையைக் குலைத்துவிடும்.மேலும், இந்தக் கழிவுநீர் கலக்கும் ஆறுகள், பின்னர் கடல் என அவை பயணிக்கும் இடமெல்லாம் நஞ்சை விதைகின்றன. கடல்வாழ் உயினங்களின் வாழ்க்கை இந்தக் கழிவு நீரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
ரசாயன நீர் பாயும் வாய்க்கால்களில் நெற்பயிரினை வளர்ப்பது நீரைச் சுத்திகரிக்கும் என்று மூர் நிரூபித்துள்ளார்.
என்ன வழி?
ஆலைகள் தோறும் பல மாசுக்கட்டுப்பாட்டு வழிமுறைகளை அந்தந்த நாட்டு அரசுகள் இயற்றி இருக்கின்றன. இருப்பினும் இந்த அழிவினைக் குறைக்க முடியவில்லை. எல்லா நீரையும் சுத்திகரித்து கடலில் கலக்கச் செய்வது செலவுகளை அதிகரிக்கும் முறையாகும். இந்த சிக்கலுக்கு விடை கண்டுபிடிப்பதில் தனது ஆயுளில் 10 ஆண்டுகளைச் செலவிட்ட வேளாண் விஞ்ஞானி மேட் மூர் புதிய திட்டம் ஒன்றினை முன்வைக்கிறார். பண்ணைகளின் வழியே ரசாயன நீர் பாயும் வாய்க்கால்களில் நெற்பயிரினை வளர்ப்பது நீரைச் சுத்திகரிக்கும் என்று மூர் நிரூபித்துள்ளார்.

10 ஆண்டு கால ஆய்வு
அமெரிக்காவைச் சேர்ந்தவரான மேட் மூர் நான்கு பண்ணைகளில் இந்த ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார். ரசாயன நீர் பாயும் இரண்டு பண்ணைகளின் வாய்க்கால்களில் நெற்கதிரையும், மற்ற இரண்டு பண்ணைகளில் வேறு சில செடிகளையும் இந்த ஆய்வுக்குழு வளர்த்திருக்கிறது. இரண்டு வருடம் நீடித்த இந்த ஆய்வு சுவாரஸ்யமான முடிவினை முன்வைக்கிறது. அதாவது நெற்பயிர் வளர்க்கப்பட்ட வாய்க்கால் வழியே பாயும் நீரில் 85 முதல் 97 சதவிகித நீர் சுத்திகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதனால் நெற்பயிரை வளர்ப்பது உணவுக்கும், இயற்கை நலத்தை பாதுகாக்கவும் பெரும் உதவி செய்யும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.