பிறக்கும் குழந்தையின் நிறம், குணநலன்கள், அறிவு என எதையும் எவராலும் நிர்ணயிக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். அதற்குக் காரணம் கடத்தப்படும் பரம்பரை ஜீன்கள் தான். பெரும்பாலும் குழந்தைகள் பெற்றோர்களின் பண்புகளைக் கொண்டிருந்தாலும் இதிலும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. விரும்பும் வகையில் குழந்தையின் கண்களின் நிறத்தை இனி பெற்றோர்களே தேர்வு செய்யவும் ஒரு வழியையும் கண்டு பிடித்து விட்டார்கள். நம்ப முடிகிறதா உங்களால்? நம்புங்கள். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உள்ள ஒரு கருத்தரித்தல் மருத்துவமனை தான் (The Fertility Institutes) இந்த வாய்ப்பை வழங்குகிறது. தொடர்ந்து பத்து வருட ஆராய்ச்சியின் பலனாக இந்தத் தொழில்நுட்பத்தை அவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
பொதுவாக மனிதர்களின் மரபணு இருக்கையில் (genetic locus) மரபணுக்கள் இருக்கும். குறிப்பிட்ட சில பண்புக்கான ஜீன்களில் இரு வேறுபட்ட பிரதிகள் இருக்கும் (Allele). ஒரு பிரதி தாயிடம் இருந்தும் மற்றொன்று தந்தையிடம் இருந்தும் குழந்தைக்குக் கடத்தப்படும். அது ஒரே மாதிரியாகவோ வேறுபட்ட பிரதியாகவோ (Allele) இருக்கலாம். வேறுபட்டவையாக (Allele) இருக்கும் போது ஒன்று ஓங்கு பண்பாகவும் (B) மற்றொன்று ஒடுங்கு பண்பாகவும் (b) இருக்கும். எடுத்துக்காட்டாக உங்கள் குரோமோசோம்களில் கண்களின் நிறத்திற்கான ஜீன் BB என்று இருந்தால் உங்கள் கண்கள் பழுப்பு நிறமாகவும், Bb அல்லது bb என்று இருந்தால் நீல நிறமாகவும் இருக்கும்.(B பழுப்பு நிறம் ஓங்கு பண்பு, b நீல நிறம் ஒடுங்கு பண்பு என எடுத்துக்கொள்வோம்)
சரி, ஒரு தாயின் கண்கள் பழுப்பு நிறத்தில் BB இருந்து தந்தையின் கண்கள் நீல நிறத்தில் bb இருந்தால் குழந்தையின் கண் நிறம் என்னவாக அமையும் தெரியுமா? இதைத் தெரிந்து கொள்ள புன்னெட் சதுரங்கள் ( Punnett Square) பயன்படுகின்றன. இந்த வழிமுறையை ரெஜினால்டு சி புன்னெட் (Reginald C. Punnett) என்பவர் கண்டறிந்தார். கீழே உள்ள படத்தில் உள்ளது போல அட்டவணையை நிரப்பும் போது எந்த விதத்தில் ஜீன்கள் இணைந்தாலும் குழந்தையின் கண்கள் பழுப்பு நிறமாகவே இருக்கும் என்பது தெளிவாகிறது.
Credit: UNC
இதுவே ஒரு தாயின் கண்கள் பழுப்பு நிறத்தில் Bb இருந்து தந்தையின் கண்கள் நீல நிறத்தில் bb இருந்தால் குழந்தையின் கண் நிறம் ஜோடி சேரும் ஜீன்களுக்கு ஏற்ப பழுப்பாகவோ நீலமாகவோ அமையும். அதாவது இரண்டு நிறத்திற்கும் 50% வாய்ப்பு உள்ளது.
Credit: UNC
தாயின் கண்கள் பழுப்பு நிறம் Bb மேலும் தந்தையின் கண்களும் பழுப்பு நிறம் Bb என்றாலும் குழந்தையின் கண் நிறம் பழுப்பாக இருக்க 75% மற்றும் நீலமாக இருக்க 25% வாய்ப்புள்ளது.
Credit: UNC
பொதுவாக கண் நிறம், முடி நிறம் போன்றவற்றை நிர்ணயிக்க ஒன்றுக்கு மேற்பட்ட ஜீன்கள் இருக்கும். ஒருவேளை உங்கள் கண்கள் சிறிது பச்சை நிறத்தில் இருந்தால் அப்போது இந்த அட்டவணையும் கொஞ்சம் சிக்கலாக இருக்கும்.
Credit: UNC
இந்த வழிமுறையைப் பயன்படுத்தி தான் குழந்தையின் கண் நிறத்தை தீர்மானிக்க முடியும் என்கிறது அந்த மருத்துவக் குழு. அதாவது பெற்றோரின் இருவரும் கொண்டிராத கண் நிறத்தை கூட குழந்தை பெற முடியும். ஆனால் அதற்கான ஜீன் குறியீட்டை மட்டும் கொண்டிருக்க வேண்டும். இதற்காகப் பல சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெற்றோர்கள் விரும்பும் கண் நிறத்தை கண்டிப்பாகக் கொண்டிருக்க அவசியம் இல்லை. அவர்கள் மூலம் தேவைப்படும் மரபணு குறியீடுகளை குழந்தைக்கு கடத்துவதே இங்கு அவசியம். இப்படி மறைமுக ஜீன்கள் கடத்தப்படுவதால் தான் தான் பெற்றோரின் கண் நிறத்திற்கு மாறாகக் கூட சில சமயம் குழந்தைகள் வேறு கண் நிறம் பெறுகிறார்கள். அவ்வாறு தேவைப்படும் நிறத்திற்கான ஜீன் குறியீடுகள் இருந்தால் அவர்கள் எதிர்பார்க்கும் நிறத்தை குழந்தையின் கண்களுக்கு வழங்க முடியும். பெற்றோர்களிடம் இருந்து பெறப்படும் கருக்களில் சோதனைகள் மேற்கொண்டு தேவைப்படும் குறியீடுகள் கொண்ட கருவை பெற்றோர்களே தேர்வு செய்யலாம். அந்தக் கரு மீண்டும் தாயின் கருவறைக்குள் வைக்கப்பட்டு வளர்க்கப்படும். எதிர்காலத்தில் இதே போல் முடி நிறம், உயரம் மற்றும் அறிவைக் கூட மாற்ற முடியும் என்கிறது அந்த மருத்துவமனை.
Credit: Pixabay
எதிர்ப்பு
யுனைடட் கிங்டமில் (UK) உள்ள Nuffield Council on Bioethics (NCB) ஜீன் மாற்றம் குறித்து செய்த ஆய்வின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் மரபணு மாற்றம் குழந்தையை எந்த வகையிலும் பாதிக்காது என்றால் அது அனுமதிக்கக்கூடிய ஒன்றுதான் என்று கூறும் நிலையில், பிறக்கும் குழந்தையின் கண்களின் நிறத்தை மாற்றுவது மனித நெறிமுறைகளின் படி மிகவும் தவறு என்றும் கூறுகிறார்கள் சிலர். அதோடு மேற்கொள்ளப்படும் சோதனைகளின் போது கருவில் உள்ள வேறு சில மரபணுக்கள் பாதிக்கப்படலாம் என்கிறது சில ஆய்வுகள்.