ஜப்பான்காரர்கள் புதுமையான தேடல்களைக் கொண்டவர்கள். அதோடு சதாகாலமும் எதையாவது புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பவர்கள். அதற்கு அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் டோக்கியோவின்(Tokiyo) அருகில் உள்ள சைதாமா(Sitama) மாநிலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில், 2 லட்சம் வெண்கலத்தாலான நாணயங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவை சாமுராய் (Samurai) காலத்திய நாணயம் என்பதால் வரலாற்றின் சில புதிர்ப் பக்கங்களை இந்த ஆராய்ச்சி வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கடியில் புதையல்!!
ஜப்பானின் தலைநகரான டோக்கியாவின் வடதிசையில் அமைந்துள்ளது சைதாமா மாநிலம். கடந்த சில மாதங்களாக அங்கு தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இந்நிலையில், சென்ற வாரம் மண்ணைத் தோண்டிக் கொண்டிருக்கையில் வித்தியாசமான ஒலி கேட்கவே அனைவரும் ஆர்வம் கொண்டவராய் ஒன்றுதிரண்டனர். சுற்றிலும் இருந்த மண் கவனமாக வெளியேற்றப்பட்ட பின்னர் உள்ளிருந்த பானையை வெளியே எடுத்தனர். 24 அங்குல சுற்றளவு கொண்ட பானையின் மேற்புறத்தை அடைத்திருந்த மூடியை திறந்த போது அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயினர். பானை முழுவதும் வெண்கலத்தாலான நாணயங்கள் இருந்ததைக் கண்டு, ஜப்பானியர்களின் சிறிய கண்கள் கூட அகலமாய் விரிந்தன.
சாமுராயின் புதையல் பானை!!
15 ஆம் நூற்றாண்டு ஜப்பான். உள்நாட்டு யுத்தம் ஒன்றிற்கு நாடு தயாராகிக் கொண்டிருந்தது. கொஞ்ச நாள் பெயருக்காவது ஒரு அரசர் இருந்தார். அதுவும் பிடிக்காமல் அரசரை ஆண்டவனிடம் அனுப்பிவிட்டு ஆட்சியை பிடித்தார்கள் ராணுவ உயர் பதவிக்காரர்கள். அரசராட்சி முறையில் இது ஒரு சிக்கல். எப்போது, யாருடைய அம்பு நம் மார்பை வந்து முத்தமிடும் என்று தெரியாமல் அலைய வேண்டும். எதிரி நாட்டுப் படையெடுப்புகளைச் சமாளிக்க வேண்டும், உடனிருக்கும் எந்த ஆசாமியாவது நம்மைக் கவிழ்க்க நினைக்கிறானா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அரசாட்சியை வேறு பார்க்க வேண்டும், இதற்கிடையில் அந்தப்புரம் வேறு. இப்படிப் பல இன்னல்களுக்கு இடையே இருந்த அரசர்களைக் காப்பாற்றக் களமிறக்கப்பட்டவர்கள் தான் சாமுராய்கள்.

அவர்களுக்கென ஒரு கொள்கை உண்டு. அரசருக்கும் அரசாட்சிக்கு எந்நேரமும் உதவி செய்ய வேண்டும். சாமுராய் உயிருடன் இருக்கும் பொழுது மன்னருக்கு ஏதும் தீங்கு நிகழுமேயானால் சாமுராய் தன் சொந்த வாளால் தன் தலையைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். இப்படியும் ஒரு சட்டம் இருந்திருக்கிறது. அப்படியும் ஆட்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அந்த கொஞ்ச நாள் அரசர் பரலோகம் அடைந்த பின்னர் ஷோகன்ஸ்(Shoguns) எனப்படும் ராணுவ சர்வாதிகார்களின் ஆட்சி அமலுக்கு வந்தது.
அரசரின் ஆட்சியே அப்படியென்றால் சர்வாதிகாரியின் ஆட்சி எப்படி இருக்கும் ? அவரே அரசு, அவரே கொள்கை, அவர் வைத்ததே சட்டம். ஏன்? என்ற கேள்வியை யாரும் கேட்காமல் அல்லது கேட்க விடாமல் ஆட்சி நடந்தது. ஆனாலும், காலம் ஒருத்தனை மட்டும் எப்போதும் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பதில்லை. ஒருமுறை தூக்கி மேலே அமர வைக்கும். அடுத்த நொடியே கீழே கவிழ்த்து சில்லி மூக்கை சிதறடிக்கும். அதுவும் சர்வாதிகாரியின் வாழ்க்கையில் நடந்தது. தைமியோ (Daimyō) என்னும் போராளி சர்வாதிகாரியின் ஆட்சிக்கு முடிவுரை எழுதினான். சர்வாதிகாரியின் காதைப்பிடித்துத் திருகிக் காட்டிற்குள் விரட்டி விட்டான்.

மாறியது ஆள் மட்டுமே அரசு முறை அல்ல. இந்தப் பிரகஸ்பதியும் அதே கொடுமைகளை செய்யத் துவங்கினான். அப்போது விழித்துக்கொண்ட சாமுராய்கள் மன்னருக்கு எதிராகக் கலகத்தில் இறங்கினார்கள். இவர்களால் எப்போதும் சிரமம் தான் என அறிந்து கொண்ட தைமியோ, சாமுராய்களைக் கொல்ல நிஞ்சாக்களை களத்தில் இறக்கிவிட்டார். கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தக்கூடியவர்கள் நிஞ்சாக்கள். சாமுராய்களைப் போன்று கொள்கை, கொத்தவரங்காய் எல்லாம் கிடையாது. வேலை என்பதே எதிரிகளைக் கொன்று குவிப்பது தான். இப்படிப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டது தான் மேலே சொன்ன பானை. தன் உயிருக்கு ஆபத்து வரும் எனக்கருதிய ஏதோ ஒரு சாமுராய் புதைத்த பானையாகத் தான் அது இருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எல்லா நாணயங்களிலும் மையத்தில் துளையிடப்பட்டு அதன் வழியே கம்பியை நுழைத்து மாலை போல கட்டப்பட்டிருக்கிறது. சீனா, ஜப்பானைச் சேர்ந்த மொத்தம் 19 வகையான நாணயங்கள் அதில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவு சாமுராய்களைப் பற்றிய பல கேள்விகளுக்கு விடையளிக்கும் என நம்பலாம்.